சமீபத்தில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் டிரோன் மூலம் பார்சல்களை டெலிவரி செய்யும் முயற்சியை மேற்கொண்டது இந்தியத் தபால் துறை. அதுமட்டுமல்லாமல், சாலை வசதிகள் இல்லாத பகுதிகளுக்கு டிரோன் மூலம் மருந்துகளை அனுப்பும் முயற்சி, ஏர் ஆம்புலன்ஸ் சேவைகள் போன்றவை இந்தியாவின் பல பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ஒரு நபர் மட்டுமே பயணிக்கக்கூடிய பயணிகள் டிரோன் முதல்முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருணா என்று பெயர் சூட்டப்பட்ட இந்த டிரோனை மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள சாகர் டிஃபென்ஸ் இன்ஜினீயரிங் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
ஒருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய விமானி இல்லாத இந்த விமானத்தை ரிமோட் கருவியைப் பயன்படுத்தி இயக்கலாம். இது சுமார் 130கிலோ வரை எடையைத் தாங்கும், 25 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த விமானம், பறக்கும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலும் பாதுகாப்பாகத் தரையிறங்கும் திறன் கொண்டது. அவசரகாலங்களில், பாராசூட் தானாகத் திறந்து பாதுகாப்பாகத் தரையிறங்க உதவும். மேலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக நிறைய தொழில்நுட்பங்களும் இதில் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் பிரதமர் மோடி முன்னிலையில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்த டிரோன் தயார் நிலையில் இருப்பதாகவும், இது இந்தியக் கடற்படை ராணுவத்தில் பயன்படுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
