Published:Updated:

கொரோனா: `110 நாள்களில் ஒரு லட்சம்; 49 நாள்களில் 7 லட்சம்!’ - இந்தியாவில் தொற்று நிலவரம்

கொரோனா - இந்தியா
கொரோனா - இந்தியா

``கொரோனா இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது.”

கொரோனா வைரஸால் மிகவும் பாதிப்படைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ரஷ்யாவை முந்தி மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22,252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,19,665 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,160 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,948 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சுமார் 2,59,557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருவதால் மக்கள் அனைவரும் கடுமையான அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா பாதுகாப்பு
கொரோனா பாதுகாப்பு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வருபவர்களின் விகிதம் 61.13 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 1,115 பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும் இதுவரை 10 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 20,000-த்தைக் கடந்துள்ள அதேநேரம் மீட்பு விகிதம் அதிகமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது என்றாலும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட் -19 கொரோனா
கோவிட் -19 கொரோனா

இந்தியாவில் வைரஸ் பாதிப்பு ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையை அடைவதற்கு சுமார் 110 நாள்கள் ஆனது. ஆனால், இந்தப் பாதிப்பு எண்ணிக்கை ஏழு மடங்காக அதிகரிக்க அதாவது 7 லட்சம் பாதிப்புகளை அடைய வெறும் 49 நாள்கள் மட்டுமே ஆனது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 100, 200 என இறப்பு எண்ணிக்கை பதிவாகிக் கொண்டிருந்த நிலையில் சமீப நாள்களில் 400-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அறிவிக்கப்பட்டு வரும் தளர்வுகள் இந்தப் பாதிப்பு எண்ணிக்கையை இன்னும் அதிகமாக்கும் என சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருவதும் கவனிக்கத்தக்கது.

கொரோனா: `சென்னை, மும்பையைவிட அதிகம்!’ - திணறும் பெங்களூரு; அச்சத்தில் மக்கள்!
அடுத்த கட்டுரைக்கு