Published:Updated:

`சீனாவுக்கு எதிராக டிஜிட்டல் ஸ்டிரைக்; இந்திய செயலிகளுக்கு வாய்ப்பு!’ - மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

இந்திய, சீன வீரர்களுக்கு இடையேயான மோதல்களுக்குப் பிறகு 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. இது சீனாவுக்கு எதிரான இந்தியாவின் `டிஜிட்டல் ஸ்டிரைக்.’

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீனப் பின்னணியைக் கொண்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் இந்தச் செயலிகள் தடை, சீனாவுக்கு எதிராக இந்தியா எடுத்த மிகப்பெரிய நடவடிக்கையாக ஆட்சியாளர்களால் கருதப்படுகிறது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், `இந்தியாவின் இந்த உத்தரவு என்பது சீனாவுக்குக் கவலையளிக்கிறது' என்று கூறியுள்ளார். இந்தநிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மத்திய அரசின் நடவடிக்கையை `டிஜிட்டல் ஸ்டிரைக்’ என்றும் இந்திய செயலிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கான வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டிக் டாக்
டிக் டாக்

மேற்கு வங்கத்தில் நடந்த பா.ஜ.க பேரணியில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், ``இந்திய சீன வீரர்களுக்கு இடையேயான மோதல்களுக்குப் பிறகு 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. இது சீனாவுக்கு எதிரான இந்தியாவின் `டிஜிட்டல் ஸ்டிரைக்’.

நாட்டு மக்களின் தரவுகளைப் பாதுகாக்க நாங்கள் சீன செயலிகளைத் தடை செய்தோம். நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்க்க எண்ணுகிறோம். ஆனால், அத்துமீற நினைத்தால் அதற்கு ஏற்றவாறு பதிலடியும் கொடுப்போம். இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் தங்களது உயிரைத் தியாகம் செய்தால், சீனாவில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கூறிய கருத்துகளை எதிரொலிக்கும் வகையில் பேசினார்.

``இந்திய மக்களின் பலத்தை சீனா உணரவில்லை!" - விகடனுக்கு 1962ல் பாதுகாப்பு அமைச்சர் சவான் அளித்த பேட்டி

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு மீது இந்தியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதைப் பல ஊடகங்களும் `டிஜிட்டல் ஏர் ஸ்டிரைக்’ என்று குறிப்பிட்டன. இதையடுத்துதான் தற்போது மத்திய அமைச்சர் சீன செயலிகள் தடை தொடர்பாக `டிஜிட்டல் ஸ்டிரைக்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் டிக் டாக் மிகவும் அதிகமான பயனாளர்களைக் கொண்டு இயங்கி வந்தது. உலகளவில் உள்ள இரண்டு பில்லியன் பதிவிறக்கங்களில் 30 சதவிகிதம் பதிவிறக்கத்தை இந்தியா கொண்டிருந்தது. டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் இந்தியாவில் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் திட்டத்தை முதலீடு செய்ய ஏற்பாடுகளைச் செய்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

டிக் டாக்கில் இந்திய அரசும் கணக்கை வைத்திருந்தது. அந்தக் கணக்கை 1.1 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, சீனாவில் ட்விட்டருக்கு பதிலாகப் பயன்படுத்தப்படும் வெய்போ என்ற வலைதளத்தில் இருந்தும் பிரதமர் மோடி விலகியுள்ளார். இதுதொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகமாகவும் இண்டர்நெட் குறைந்த விலையிலும் கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், சீன செயலிகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பும் இருந்தது. இந்த நிலையில், இந்தியா திடீரென சீன செயலிகளைத் தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கை சீன செயலிகளின் நிறுவனங்கள் பலவற்றுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக சீன செயலிகளின் தடை இந்திய செயலிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் விதமாக இருக்கும் என்றும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார். டிஜிட்டல் இந்தியா தொடர்பான ஐந்தாவது வருட நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ``சீன செயலிகளின் தடை, இந்திய செயலிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்திய அரசின் தற்சார்பு கொள்கைக்கு இந்த நடவடிக்கை வலுசேர்க்கும்விதமாக உள்ளது. நெருக்கடியான இநக்ச் சூழ்நிலைகளில் அரசுக்கு இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு சட்டங்களுக்கு உட்பட்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மற்ற நாடுகளின் செயலிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். தற்சார்பு இந்தியாவுக்கு வழிவகுக்கும் வகையில் இந்தியர்கள் நல்ல செயலிகளை உருவாக்க வாய்ப்பு தற்போது அமைந்துள்ளது. அதற்கான அறிவும் தொழில்நுட்ப திறனும் உள்ளவர்கள் இந்தியாவில் இருக்கின்றனர்” என்று கூறினார்.

செயலிகள்
செயலிகள்

மேலும், ``தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் இளைய தலைமுறையினரை ஸ்டார்ட் அப் இந்தியா ஊக்குவிக்க வேண்டும். இதுதொடர்பாகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் அவர்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும். மென்பொருள்கள் தயாரிப்பில் இந்தியாவை முக்கிய அங்கமாக மாற்ற வேண்டும். மென்பொருள் தயாரிப்புகளுக்கான புதிய திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா செயலிகள் உருவாக்குவதிலும் சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

`சாக்டெங் சரணாலயம்!’  -இந்தியாவைத் தொடர்ந்து பூட்டான் எல்லையில் அத்துமீறும் சீனா
அடுத்த கட்டுரைக்கு