Published:Updated:

`5-வது டெஸ்ட் நெகட்டிவ்; குணமடையும் கேரள மாணவி!’ - கொரோனாவை வென்ற கேரளா?

கொரோனா
கொரோனா

கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியின் உடல் தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரம் சுமார் 11 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவின் 7-வது மிகப் பெரிய நகரமாக உள்ளது. தற்போது உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸ் இங்குதான் முதன் முதலாகக் கண்டறியப்பட்டுள்ளது. இறைச்சி சந்தையில் இருந்த உயிரற்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கொரோனா
கொரோனா

இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் மட்டும் இதுவரை 800 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக அபாய நிலையில் இருக்கும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தைவான், அமெரிக்கா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் 0.2 சதவிகிதப் பாதிப்புடன் இந்தியா 17-வது இடத்தில் உள்ளது.

`கொரோனா கண்காணிப்பில் கூடுதலாக 418 பேர்!' -கேரள சுகாதாரத்துறை சொல்வது என்ன?#Corona

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி சீனாவின் வுகான் நகரில் படித்து வந்துள்ளார். வைரஸ் தொற்று காரணமாக அவர் அங்கிருந்து தாயகம் திரும்பியதும், அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் உட்பட மற்ற இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்நிலையில் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு இறுதியாக எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 30-ம் தேதி அந்தப் பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்குத் தொடர் மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்துள்ளன. அந்த மருத்துவ மாணவி அனுமதிக்கப்பட்டது முதல் தற்போதுவரை அவருக்கு ஐந்து முறை மருத்துவப் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் இறுதியாக எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. மீண்டும் ஒருமுறை எடுக்கப்படும் சோதனையிலும் இதே முடிவு வந்தால் அந்த மாணவி பூரணமாகக் குணமடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார்.

வைரஸ் தொற்று
வைரஸ் தொற்று

திருச்சூரைச் சேர்ந்த மாவட்ட மருத்துவ அதிகாரிகளும் மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்துள்ளனர். இந்தச் செய்தியால் கேரள மக்கள் மட்டுமல்லாது மொத்த இந்திய மக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பினால் முன்னதாக கேரளாவில் மாநிலப் பேரழிவு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. இது கடந்த வாரம் திரும்பப் பெறப்பட்டது, எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டபோதிலும் அதன் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை.

வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் 28 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். கேரளாவில் மட்டும் இதுவரை 300 பேருக்கு வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டது. அவர்களின் ரத்த மாதிரிகளை புனே வைராலஜி ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி சோதனை செய்ததில் அதில் 288 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. மீதமுள்ளவர்களின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகக் கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளா
கேரளா

மொத்தக் கேரளாவிலும் இதுவரை 3000 பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும் 3099 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு