Published:Updated:

`கேரளாவுக்குத் தலை வணங்குகிறேன்’ - கொரோனாவிலிருந்து மீண்ட முதல் இந்திய நோயாளி நெகிழ்ச்சி

கேரளா
கேரளா

கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் இந்திய மாணவி தற்போது முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் உள்ள ஒரு இறைச்சி சந்தையிலிருந்து உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று மொத்த சீனாவையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. சீனாவில் மட்டும் ஒரு நாளுக்குச் சராசரியாக 100 பேர் வீதம் கொரோனா வைரஸால் உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,400-யை தொட்டுள்ளது அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,000 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த நிலையில், கொரோனா வைரஸால் சீனாவில் மிகப்பெரும் சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். மேலும், தொற்றுநோயைக் கொண்டுள்ள இந்த வைரஸ் மிகவும் வேகமாகப் பரவுவதாகவும் இதைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 27 நாடுகளுக்குப் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அதிலும் குறிப்பாகக் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

`நாடு திரும்பிய கேரளா மாணவருக்கு கொரோனா பாதிப்பு!' -அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய சுகாதாரத்துறை

ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு தற்போது பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாகக் கண்டறியப்பட்ட இந்தியாவின் முதல் நோயாளி ஒருவர், தனது உயிரைக் காப்பாற்றிய மருத்துவ தொழில் மீது பெரும் மரியாதை வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கேரளா, திருச்சூரைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் சீனாவின் வுகான் நகரில் தங்கி மருத்துவம் படித்து வந்துள்ளார், கொரோனா பரவலால் அவர் அவசரமாகத் தாயகம் திரும்பியபோது அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிப்பட்டது. ஒன்றரை மாத தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ள அவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு முதல்முறையாகப் பேட்டியளித்துள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அதில் பேசியுள்ள அவர், ``நான் தற்போது முழுவதுமாக நேர்மறையான எண்ணங்களுடன் மட்டுமே உள்ளேன். என் உயிரைக் காப்பாற்றப் பலர் கடுமையாக உழைத்ததை என் கண் முன்னே பார்த்தேன். சீனாவிலிருந்து திரும்பும்போது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் நான் அனுமதிக்கப்படுவேன் என்று ஒருநாளும் நினைக்கவில்லை, எனக்காகப் பலர் பிரார்த்தனை செய்துள்ளனர் அவர்களுக்கு மிக்க நன்றி. மருத்துவ தொழில் மீதான என் மரியாதையும் ஆர்வமும் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. என் முழு படிப்பையும் முடித்தபிறகு கேரளா வந்து மக்களுக்காகச் சேவை செய்ய விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

தான் சீனாவிலிருந்து இந்தியா வந்தது பற்றிப் பகிர்ந்துள்ள அவர், “ நான் சீனாவிலிருந்து மிக விரைவில் கேரளா வந்தது என்னுடைய அதிர்ஷ்டம். ஜனவரி 22 -ம் தேதி, மறுநாள் கொல்கத்தா வருவதற்காக விமான டிக்கெட் புக் செய்தேன். ஆனால், அன்றைய தினம் இரவே வுகான் நகரின் அனைத்து போக்குவரத்தும் முடக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். அன்று மொத்த நகரமும் முற்றிலும் முடக்கப்பட்டது. நான் என் நண்பர்களுடன் இருந்தேன். அவர்களின் உதவியுடன் அவசரமாக ரயில் நிலையம் சென்று இறுதி ரயிலைப் பிடித்து வேறு ஒரு நகரத்துக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தேன். என் பயணத்தின்போது வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுத்துக்கொண்டேன், இருந்தும் எப்படி வைரஸ் பரவியது என்று தெரியவில்லை” என்று விவரித்துள்ளார்.

திருச்சூர் மருத்துவக் கல்லூரி
திருச்சூர் மருத்துவக் கல்லூரி

தொடர்ந்து, ``நான் வீட்டுக்கு வந்த பிறகு இரண்டு நாள்கள் நன்றாகவே இருந்தேன். பிறகு மெதுவாகக் காய்ச்சல் வரத்தொடங்கி அடுத்த இரு நாள்களில் அது அதிகமானது, தொண்டையில் தொற்று ஏற்பட்டது. பிறகு உடனடியாக நான் மருத்துவ அதிகாரிகளை எச்சரித்து திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டேன். வைரஸ் தாக்குதல் உறுதியான பிறகு மனதளவில் அனைத்துக்கும் என்னைத் தயார்படுத்திக்கொண்டேன், அதே நேரம் என் நம்பிக்கையையும் கைவிடவில்லை. இந்த அனுபவம் என்னை இன்னும் அதிகமாக பலப்படுத்தியுள்ளது.

Vikatan

சுமார் 24 நாள்கள் நான் தனிமைப்படுத்தப்பட்டேன், வைரஸ் பற்றிய அறிவும் என் மருத்துவ படிப்புமே எனக்குத் தைரியம் கொடுத்தது. வைரஸ் ஓர் ஆரோக்கியமான நபரைப் பாதித்தால் அது ஒரு பெரிய பிரச்னையாக இருக்காது, ஆனால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்தாக இருக்கும். கொரோனா வைரஸின் இறப்பு விகிதம் வெறும் 2% மட்டுமே, நம் நாட்டின் காலநிலையால் அது இங்கு பரவாமல் போகலாம்.

நிறைய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்குச் செல்லாமல் என்னைக் கவனித்துக்கொண்டனர். அவர்களின் அர்ப்பணிப்பும் கவனிப்புமே என்னை வைரஸ் தாக்குதலிலிருந்து முழுமையாக மீட்டெடுத்தது. நான் போன் பேச அனுமதிக்கப்பட்டேன். அது என்னுடைய மன அழுத்தத்தைக் குறைத்தது. இந்த ஒரு மாதத்தில் சில புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேன். நான் என் நம்பிக்கையை இழக்கும் போதெல்லாம் கேரள சுகாதார ஆய்வாளர் ஷீலா மற்றும் என்னுடைய மருத்துவ ஆலோசகர் நீது பிரபா ஆகியோரும்தான் எனக்கு பெரும் நம்பிக்கையை அளித்தனர். மேலும், சுகாதார அமைச்சர் கே.கே சைலஜாவும் எனக்காக அதிக வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.

அமைச்சர் சைலஜா
அமைச்சர் சைலஜா

அவர் எப்போதும் எனக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டே இருந்தார், என் மன வலிமையை அதிகப்படுத்த அம்மாவை என்னுடன் தொடர்ந்து பேசவைத்துக்கொண்டே இருந்தார். நான் தனியாக இல்லை ஒரு மாநிலமே எனக்குப் பின்னால் இருப்பதாக அவர் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார். பெரும் தொற்று நோயாகக் கருதப்படும் கொரோனா வைரஸை தடுக்க கேரள அரசு ஒரு மகத்தான வேலையைச் செய்துள்ளது. நான் உண்மையில் கேரளாவுக்குத் தலைவணங்குகிறேன்” என்று நெகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் பேசியுள்ளார்.

நிஃபா வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மிகவும் வேகமாக மீண்டுவந்த கேரள அரசின் நடவடிக்கையும் சுகாதாரத் துறையின் அர்ப்பணிப்பும் இந்திய அளவில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

கேரள சுகாதாரத் துறையின் இந்த அசாதாரண செயல் பற்றிய உங்களுடைய கருத்துகளை கமென்டில் பதிவு செய்யுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு