Published:Updated:

`ஒரே வாரத்தில் அதீத கட்டண உயர்வு!' - விதிமீறலில் சிக்கிய `தனியார் ரயில்' தேஜஸ்

இந்தியாவின் முதல் தனியார் ரயிலான தேஜஸில் ரயில்வே துறை சட்டத்தை மீறிக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

தனியார் ரயில்
தனியார் ரயில் ( Twitter/@Otayan )

இந்தியாவில் பயணிகள் ரயில் சேவையைத் தனியார்மயமாக்கும் தீவிர முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை கடந்த 4-ம் தேதி லக்னோ - டெல்லி இடையே தொடங்கப்பட்டது. இந்த தேஜஸ் ரயில் சேவையை, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்திய ரயில்வே துறையின் அங்கமான ஐ.ஆர்.சி.டி.சி இந்த ரயிலை இயக்குகிறது.

தேஜஸ் ரயில்
தேஜஸ் ரயில்
Twitter/@Dr_Anubhav4u

விமானத்தில் வழங்கப்படும் உணவுகளுக்கு இணையாக இந்த ரயிலிலும் உணவுகள், பயணிகளுக்கு இலவச டீ, காபி மேலும், இந்த ரயில் ஒரு மணிநேரம் தாமதமாக வந்தால் பணிகளுக்கு 100 ரூபாயும் 2 மணி நேரம் தாமதமாக வந்தால் 200 ரூபாயும் வழங்கப்படும். இதில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.25,00,000 காப்பீடு வழங்கப்படும் என்பன போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது தனியார் ரயில் நிர்வாகம்.

இதனால், இந்தத் திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பயண டிக்கெட் கட்டணமும் நியாயமாக இருப்பதாகவே இதில் பயணித்தவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தேஜஸ் ரயில் சேவை தொடங்கப்பட்ட 10 நாள்களில் இந்த ரயில் கட்டணம், ரயில்வே விதிகளை மீறி இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேஜஸ் ரயில்
தேஜஸ் ரயில்
Twitter/@Otayan

1989-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டவிதிகளின்படி பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை மத்திய அரசு மட்டுமே நிர்ணயிக்க முடியும். ரயில்வேயின் அங்கமான ஐ.ஆர்.சி.டி.சி-யும் இதில் தலையிட முடியாது. இப்படியான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போது, கடந்த வாரம் முதல் இயக்கப்பட்டு வரும் ரயிலில் பயண கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு... வேலையிழக்கும் 3 லட்சம் ஊழியர்கள்!

டெல்லியிலிருந்து லக்னோ வரையிலான 512 கிலோமீட்டர்களை 6 மணி நேரம் 35 விநாடிகளில் கடக்கிறது அரசு ரயிலான சதாப்தி. அதில் ஏசி வகுப்புகளுக்கு 1,165 ரூபாயும் எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளுக்கு 1,855 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுவே தனியார் ரயிலான தேஜஸில், டெல்லியிலிருந்து லக்னோ செல்ல 6 மணி நேரம் 30 விநாடிகள் ஆகிறது. இதில் ஏசி வகுப்புகளுக்கு 1,565 ரூபாயும், எக்ஸிகியூடிவ் வகுப்புகளுக்கு 2,450 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறியவர்களுக்கு எனத் தனியாகக் குறைந்த கட்டணம் எதுவும் கிடையாது.

தேஜஸ் ரயில்
தேஜஸ் ரயில்
Twitter/@Otayan

``முதல்முறையாக இயக்கப்பட்ட ஒரு ரயிலிலேயே இவ்வளவு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்னும் பல ரயில்களைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு உள்ளது. தேஜஸ் ரயிலின் நிலை மற்ற ரயில்களிலும் நீடித்தால் என்ன செய்வது?" எனக் கேள்வியெழுப்புகின்றனர் பொதுமக்கள்.