Published:Updated:

`திருவனந்தபுரம் மக்கள் எனக்கு பக்கபலமாக இருப்பார்கள்!' - நெகிழும் பார்வையற்ற பெண் சப்-கலெக்டர்

ஆறு வயதில் பார்வை பறிபோன ப்ரன்ஜல், தன்னம்பிக்கையோடு படித்து முதல் பெண் ஐஏஎஸ்ஸாகப் புகழ்பெற்றார். இப்போது, கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் சப்-கலெக்டராகப் பொறுப்பேற்றுள்ளார்.

சப்-கலெக்டராகப் பொறுப்பேற்ற பிரன்ஜல்
சப்-கலெக்டராகப் பொறுப்பேற்ற பிரன்ஜல்

மும்பையின்  உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர் ப்ரன்ஜல் பட்டில். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். ஆறு வயதில், சக மாணவியின் கையில் இருந்த பென்சில் தவறுதலாகக் கண்ணில் பட்டதால் காயம் ஏற்பட்டது. பிறகு அது இன்ஃபெக்ஷனாகி, பார்வையைப் பறித்தது. சில நாள்களில் மற்றொரு  கண்ணின் பார்வையும் போனது. ஆனாலும் படிப்பின்மீது ஆர்வம்கொண்ட ப்ரன்ஜல், தொடர்ந்து படிக்க வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளார்.

சப் கலெக்டர் பிரன்ஜல்
சப் கலெக்டர் பிரன்ஜல்

அவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்காமல்,  தாதரில் உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்தனர். 12-ம் வகுப்பில் 85 சதவிகித  மதிப்பெண் பெற்று, செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ படித்தார். அந்தக் கல்லூரி, ஐஏஎஸ் பற்றி ப்ரன்ஜலுக்கு அறிமுகம் செய்துவைத்தது. 2015ல் எம்.ஃபில் படித்துக்கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 773-வது ரேங்க்கில் வெற்றிபெற்றார்.

`உழைப்பே திருப்புமுனை!' - நாட்டின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண், துணை கலெக்டர்

அப்போது, ரயில்வேயில் கணக்குப் பிரிவில் பணி அமர்த்தப்பட்டார். அந்தப் பணியில் சிரமம் இருந்ததால், 2016ல் மீண்டும் ஐஏஎஸ் தேர்வு எழுதி 124-வது இடத்தைப் பிடித்து இந்தியாவிலேயே பார்வையற்ற முதல் பெண் ஐஏஎஸ் என்று புகழ்பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன், எர்ணாகுளம் உதவி கலெக்டராகப் பணிபுரிந்த ப்ரன்ஜல், நேற்று கேரள தலைநகர் திருவனந்தபுரம் சப்-கலெக்டராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரன்ஜல்
பிரன்ஜல்

நேற்று காலை தனது கலெக்டர் அலுவலகம் வந்த சப்-கலெக்டர் ப்ரன்ஜல் பட்டிலை உதவி கலெக்டர் அனுகுமாரி வரவேற்று அவரது இருக்கைக்கு அழைத்துச்சென்றார். மேலும், அவர் சப் கலெக்டராகப் பொறுப்பேற்க கையெழுத்திடவும் உதவி கலெக்டர் அனுகுமாரி உதவினார். ப்ரன்ஜல் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, திருவனந்தபுரம் கலெக்டர் கோபால கிருஷ்ணன் முன்னிலையில் நடந்தது. மேலும், அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து சப்-கலெக்டர் ப்ரன்ஜல், "மிகவும் சந்தோஷத்தோடும் மரியாதையோடும் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளேன். சக அதிகாரிகளும் திருவனந்தபுரம் மக்களும் எனக்கு பக்கபலமாக இருப்பார்கள் என நம்புகிறேன்" என்றார்.