உலகக்கோப்பை ஹாக்கி போட்டி 2023-ல் ஒடிசாவில் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஒடிசாவின் ரூர்க்கோலா எனும் பகுதியில் உள்ள பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய ஹாக்கி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த பிரமாண்டமான விளையாட்டு அரங்கிற்கு விடுதலைப் போராட்ட வீரரான பிர்சா முண்டாவின் நினைவாக 'பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த விளையாட்டு அரங்கில் அதிநவீன வசதிகளுடன் கூடிய உடை மாற்றும் அறை, பயிற்சி ஆடுகளத்தையும் மைதானத்தையும் இணைக்கும் சுரங்கப்பாதை, உடற்பயிற்சி மையம், மற்றும் ஆடுகளத்தைச் சுற்றி ஹைட்ரோ தெரபி குளம் போன்ற பல வசதிகள் அமைக்கப்பட உள்ளன. மற்ற விளையாட்டு அரங்கைக் காட்டிலும் இந்த அரங்கில் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி மேம்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் போட்டி நிகழ்வுகளின்போது வீரர்கள், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தனியாக தங்கும் வகையில் கூடுதலாக 100 கோடி செலவில் தனி தங்குமிட வசதிகள் அமைப்படவுள்ளது. ஏற்கெனவே புவனேசுவரில் உள்ள காலிங்கா ஹாக்கி அரங்கம் 15,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் விரிவாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த 'பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம்' இந்தியாவிலேயே மிகப்பெரிய ஹாக்கி விளையாட்டு அரங்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த விளையட்டு அரங்கம் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.