Published:Updated:

`மேஜர்ஜெனரல் பிருத்விராஜான அப்துல் கலாம்; சிஐஏவை ஏமாற்றிய டிஆர்டிஓ!’ #NationalTechnologyDay பின்னணி

#Pokhran விஷயத்தில் இந்தியாவிடம் நாங்கள் ஏமாந்து போனோம் என சிஐஏ-வின் அப்போதய இயக்குநர் ஜார்ஜ் டெனெட் தெரிவித்தார்.

மே மாதம் 11-ம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய மக்கள் அனைவரும் இந்த நாட்டின் தொழிநுட்ப வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள வேண்டும், அதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் எனக் கடந்த 20 வருடங்களாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தினம் கொண்டாடப்படுவதற்குக் காரணமாக அமைந்தது, 1998-ம் ஆண்டு இந்தியா பொக்ரானில் வெற்றிகரமாக நடத்திய அணுகுண்டு சோதனைதான்.

அப்துல் கலாம்
அப்துல் கலாம்

ஆம், 1998-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. அந்த ஒரே நாளில் இந்தியா 3 அணுகுண்டுகளை அடுத்தடுத்து பரிசோதித்து உலக நாடுகளை அதிரச் செய்தது. உலகின் வல்லரசாக இருந்த அமெரிக்காவின் கண்ணில் மண்ணைத் தூவி இந்தப் பரிசோதனையை வெற்றிகரமாக இந்தியா செய்து முடித்தது.

சக்தி 1, சக்தி 2 மற்றும் சக்தி 3 ஆகிய மூன்று அணுகுண்டுகளை இந்தியா அன்றைய தினம் பரிசோதித்தது. இதைச் சற்றும் எதிர்பாராத அமெரிக்க உள்ளிட்ட சில உலக நாடுகள், இந்தியா மீது பொருளாதார தடை விதித்தன. எனினும் அடுத்த இரண்டாவது நாளில், அதாவது மே மாதம் 13-ம் தேதி இந்தியா சக்தி 4 மற்றும் சக்தி 5 ஆகிய அணுகுண்டுகளை மீண்டும் பரிசோதனை செய்தது.

வாஜ்பாய் தலைமையிலான அரசின் ஆட்சியின்போதுதான் இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த மொத்த திட்டமும் `டாப் சீக்ரெட்’ ஆக நடத்தி முடிக்கப்பட்டது. காரணம் இந்தியா தொடர்ச்சியாக அணுகுண்டு பரிசோதனை நடத்த முயன்றதை உலக நாடுகள் அறியும். அதனால், உலக நாடுகள் நாம் பரிசோதனை நடத்தக் கூடாது என அழுத்தம் தந்துகொண்டே இருந்தது. இந்தியாவில் அணு ஆயுதம் தொடர்பான பேச்சுகள் 1962 -ம் ஆண்டில் இருந்தே தொடங்கியது எனலாம்.

வாஜ்பாய்
வாஜ்பாய்

ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்..!

1962-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா சீனா பேரில் இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. அதைத்தொடர்ந்து சீனா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இந்தியாவுடனான போர், எல்லை பிரச்னைகளுக்கு மத்தியில் சீனா இந்தச் சோதனையை நடத்தியது, இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 1964-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய வாஜ்பாய், `அணுகுண்டுக்குப் பதில்... அணுகுண்டு தான்’என்றார்.

அதன் பின்னர் 1974-ம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையில் நடத்திய அணுகுண்டு சோதனை காரணமாக, அணு ஆயுதம் கொண்ட 6 வது நாடாக இந்தியா ஆனது. அதன் பின்னரும் இந்தியா தொடர்ச்சியாக அணுகுண்டு சோதனை நடத்த முயன்றது. ஆனால், அந்த முயற்சிகள் எல்லாம், முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே போயின. 1995-ம் ஆண்டு நரமசிம்ம ராவ் தலைமையிலான அரசு அணுகுண்டு பரிசோதனைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தது. பணிகள் வேகம்பெற்றது. எனினும் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ-யின் உளவு சாட்டிலைட், இந்தியாவில் பணிகளைக் கண்டுபிடித்ததுடன் தகுந்த ஆதாரங்களுடன் இந்தியாவை திட்டத்தைக் கைவிடும்படி எச்சரித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1998-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் 13-வது பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றார். பதவியேற்ற அடுத்த நாளே அப்போதைய மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் அணுசக்தி இயக்கத்தின் தலைவர் சிதம்பரம் உள்ளிட்டவர்களை அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானியுடன் ரகசியமாகச் சந்தித்துப் பேசினார் வாஜ்பாய்.

வாஜ்பாய் - அத்வானி
வாஜ்பாய் - அத்வானி
Swarajya

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி இந்தக் குழு மீண்டும் ரகசியமாக சந்தித்ததுடன், அப்போது பரிசோதனை செய்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. முன்னதாக ஏப்ரல் மாதம் 27-ம் தேதிதான் பரிசோதனைக்கான தேதி குறிக்கப்பட்டது. எனினும் அணுசக்தி இயக்கத்தின் தலைவர் சிதம்பரத்தின் மகள் திருமணம் காரணமாக இந்தத் தேதி மாற்றப்பட்டது. மகளின் திருமணத்தில் சிதம்பரம் கலந்துகொள்ளாமல் போனால், தேவையில்லாத யூகங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்தத் தேதி மாற்றம்.

பின்னர் மே மாதம் 11-ம் தேதி எனத் தேதி குறிக்கப்பட்டது. மே 7-ம் தேதி பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இருந்து ரகசியமாகத் தேவையான உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. 4 ராணுவ லாரிகளில் ரகசியமாகவும் பலத்த பாதுகாப்புகளுடனும் இந்த உபகரணங்கள் பொக்ரான் சென்றடைந்தது. பின்னர் சக்தி 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று அணுகுண்டுகள் மே 11-ம் தேதி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டன. மேலும் இரண்டு அணுகுண்டுகள் மே 13-ம் தேதி பரிசோதிக்கப்பட்டன.

சிஐஏ
சிஐஏ

இதில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகளின் பங்கு மிகப்பெரியது. இந்தியா நடத்தும் சோதனையை அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் முன்னதாகவே கண்டுபிடித்துவிட்டால், உடனடியாக சோதனைகளை நிறுத்த அழுத்தம் கொடுக்கும். இதனால் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் அமெரிக்காவின் சி.ஐ.ஏ -யின் உளவு சாட்டிலைட் இந்திய பகுதியைக் கண்காணிக்காத காலத்தை முன்னரே கணித்து, அந்த நேரத்திலும், சாட்டிலைட்டின் கண்காணிப்புத் திறன் குறைவாக இருக்கும் இரவு நேரத்திலும் இந்தப் பணிகள் செய்து முடிக்கப்பட்டது. மேலும் அணு விஞ்ஞானிகளுக்கு ராணுவ உடைகள் வழங்கப்பட்டு இருந்தது. தொப்பையுடன் கூடிய விஞ்ஞானிகள் நேரடியாக இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. காரணம் அவர்கள் ராணுவ வீரர்கள் அல்ல என்ற சந்தேகம் வந்துவிடக் கூடது என்பதற்காக. அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ராணுவ வீரர்களின் பெயர்கள் வழங்கப்பட்டிருந்தன.

திட்டம் வெற்றிகரமாக முடியும் வரை அவர்கள் அந்தப் பெயரிலே அழைக்கப்பட்டனர். அப்துல் கலாம், மேஜர் ஜெனரல் பிரித்விராஜ் என்ற பெயரில் அறியப்பட்டார். வழக்கமாக அணு பொருள்கள் எடுத்துச் செல்லும்போது மிக நீண்ட தூரத்துக்கு பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்கும். ஆனால், நான்கே நான்கு ராணுவ வாகனங்கள் மூலம் ரகசியமாகப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், ராணுவ வாகனம் உபகரணங்களைக் கருவியாக மாற்றும் கட்டடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கட்டமைப்பில் அது ஒரு வழிபாட்டு மையம் போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.

இந்தத் திட்டமிடுதல் காரணமாக அமெரிகாவால் இந்தியாவின் அணுகுண்டு சோதனைய முன்னரே கணிக்க முடியவில்லை. அவர்கள் சாட்டிலைட் தொழிநுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் மிகச் சிறப்பான திட்டமிடுதலுடன் வீழ்த்தினர். இந்த விஷயத்தில் இந்தியாவிடம் நாங்கள் ஏமாந்துபோனோம் என சி.ஐ.ஏ-வின் அப்போதய இயக்குநர் ஜார்ஜ் டெனெட் தெரிவித்தார்.

நாங்கள் பல ஆண்டுக்காலமாக, இந்தியாவின் அணுசக்தி திட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம். ஆனால், இந்தியாவின் இந்தக் குறிப்பிட்ட திட்டத்தைத் தவறவிட்டு விட்டோம். நாங்கள் முன்னரே கண்டறிந்திருக்க வேண்டும். ஆனால், உண்மையில் நாங்கள் தவறவிட்டுவிட்டோம். அமெரிக்காவிடம் முன்னதாகவே இதை தெரிவிக்கவில்லை என்பதை எனது பொறுப்பாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஜார்ஜ் டெனெட்

அமெரிக்காவை இந்தியா ஏமாற்றியதை அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

``இன்று பொக்ரானில், இந்தியா மண்ணுக்குள் மூன்று முறை அணுகுண்டை வெடிக்கச் செய்து பரிசோதித்தது. இந்தப் பரிசோதனை காரணமாக வளிமண்டலத்தில் கதிரியக்க பொருள்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதை அளவீடுகள் உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிகரமான சோதனைகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களை நான் வாழ்த்துகிறேன்” என இதே மே மாதம் 11-ம் தேதி இந்திய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தபோதுதான் உலக நாடுகள் தெரிந்துகொண்டன. இந்தியாவில் அணுகுண்டு பரிசோதனைகள் குறித்து. இப்படியான நாளை தான் இந்தியா கடந்த 20 வருடமாகத் தேசிய தொழில்நுட்ப தினமாக அனுசரித்து வருகிறது.

பிரதமர் மோடி, `தேசிய தொழில்நுட்ப தினமான இன்று , மற்றவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர தொழில்நுட்பத்தை மேம்படுத்துகின்ற அனைவருக்கும் நம் தேசம் மரியாதை செலுத்துகிறது. 1998-ல் இந்த நாளில் நமது விஞ்ஞானிகள் சாதித்த சாதனைகளை நாம் நினைவில் கொள்கிறோம். இது இந்தியாவின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணம்’ என அந்த நாளை நினைவுகூர்ந்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு