Published:Updated:

`இந்தியா அவர்களிடம் பாடம் கற்க வேண்டும்!’ - ஒழுக்கத்தால் கொரோனாவை ஓடவிட்ட வடகிழக்கு மாநிலங்கள்

வடகிழக்கு மாநிலம்
வடகிழக்கு மாநிலம் ( Twitter )

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் கொரோனாவை எதிர்த்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால் தற்போது அவை வைரஸ் தொற்று இல்லாத மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா உட்பட மொத்த உலகமும் கொரோனா பிடியில் சிக்கி அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகிறது. அனைத்து நாட்டு அரசுகளும் கடந்த 2 மாதங்களாக வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தும் அனைத்து நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது.

மிசோரம்
மிசோரம்
Twitter

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு வைரஸால் பாதிக்கப்பட்டடு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,029 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,206 ஆகவும் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் இருக்கும் 5 மாநிலங்களில் ஒரு கொரோனா நோயாளிகூட சிகிச்சை பெறவில்லை. அதனால் அவை வைரஸ் இல்லா மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மணிப்பூர், சிக்கிம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்கள்தான் அவை. இவை அனைத்தும் அண்டை நாடுகளான பங்களாதேஷ், மியான்மர், நேபாளம், பூட்டான் போன்றவையுடன் தங்கள் எல்லைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளன. அப்படி இருக்கும் நிலையிலும் வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தியதுதான் இந்த மாநிலங்களின் சிறப்பு.

வடகிழக்கு மாநிலம்
வடகிழக்கு மாநிலம்
Twitter

இது பற்றி பேசியுள்ள மிசோரம் முதல்வர் சோரம்தங்கா, `மிசோரம் நல்ல ஒழுக்கமான சிறந்த பழக்க வழக்கங்களைக் கொண்ட மாநிலம். இங்கு இருக்கும் தேவாலயங்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியால் நாங்கள் இந்தக் கடுமையான நெருக்கடியிலிருந்து தப்பியுள்ளோம். எதிர்காலத்தில் தொடர்ந்து இதை செய்வதில் உறுதியாக இருக்கிறோம். இருந்தும் மியான்மருடன் 510 கி.மீ எல்லையையும் வங்கதேசத்துடன் 318 கி.மீ எல்லையும் பகிர்ந்துகொண்டுள்ள மிசோரத்துக்கு கொரோனா அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும்.

`கதிகலங்கிய ஸ்பெயின்; தள்ளி நிற்கும் ஸஹாரா!’ - மலைக்கவைக்கும் மலை நகரம் #Corona

ஏனெனில், வங்கதேசம் மற்றும் மியான்மரின் எல்லைகள் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் அதன் மூலம் பிற நாட்டு மக்கள் மிசோரத்துக்குள் நுழைய அதிக வாய்ப்புகள் உள்ளன. வருங்காலத்தில் அதைச் சரிசெய்து தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்” எனப் பேசியுள்ளார்.

வங்கதேசத்தில் இதுவரை 13,134 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 206 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் மியான்மரில் 177 கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் உள்ளன.

மிசோரம் முதல்வர்
மிசோரம் முதல்வர்
ANI

இதற்கிடையில் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி பேசியுள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ``பாரம்பர்யம் மற்றும் வாழ்க்கை முறையால், வடகிழக்கு பிராந்திய மக்கள் நாகரிகமாகவும் ஒழுக்கமாகவும் உள்ளனர். அதனால்தான் அவர்களால் ஊரடங்கு வழிகாட்டுதல்களை மிக எளிதாகப் பின்பற்ற முடிந்தது. மேலும், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டுதல்களை அங்கு செயல்படுத்தியதில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. முழு வடகிழக்கு மாநிலங்களும் கொரோனா வைரஸ் தடுப்பின் மாதிரியாக உருவெடுத்துள்ளன. நாட்டின் பிற பகுதி மக்கள் மற்றும் அரசு இதைப் பின்பற்ற வேண்டும்”என்று சிங் கூறினார்.

எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஐந்து இப்போது கொடிய வைரஸிலிருந்து விடுபட்டுள்ளன, சிக்கிம் முழுவதும் ஒரு கேஸ்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

`மெர்ஸிலிருந்து கற்ற பாடம்; 20,000 பேருக்குச் சோதனை!’ - கொரோனாவை அடக்கிய தென்கொரியா
அடுத்த கட்டுரைக்கு