Published:Updated:

`Establishment 22' : சீனாவுக்குப் பதிலடி தந்த இந்திய ரகசியப் படை பற்றித் தெரியுமா?

இந்தியாவில் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 என்பது குழந்தைகள் தினம் மட்டுமல்ல; தங்களது இரண்டாவது தாய்நாடான இந்தியாவுக்காக முன்களத்தில் போரிடும் திபெத்தியர்கள் கொண்ட எஸ்.எஃப்.எஃப் படைப்பிரிவை நினைத்துப் போற்றக்கூடிய நாளாகவும் இருக்கட்டும்.

சம்பவம் 1

காஷ்மீரின் 26-வது பீரங்கி படைப்பிரிவைத் தலைமையேற்று வழிநடத்திய பிரிகேடியர் சுஜான் சிங் உபான். டெல்லியில் உள்ள பாதுகாப்புத் துறை அலுவலகத்துக்கு அவசரமாக அழைக்கப்பட்டிருந்தார். இந்தியா-சீனா போர் உச்சத்தில் இருந்த 1962-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி அவர், நார்த் பிளாக்கில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சக அலுவலகத்தின் வராண்டாவில் காத்திருந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே சில முக்கிய முடிவுகளை அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் மற்றும் ராணுவ ஜெனரல் பிர்ஜ் மோகன் கௌல் ஆகியோர் எடுத்திருந்தனர்.

48 வயதான பிரிகேடியர் எஸ்.எஸ்.உபன், ஓய்வு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்த சில நாள்களில் அவருக்கு டெல்லியில் இருந்து இந்த அழைப்பு வந்திருந்தது. இந்திய எல்லைக்குள் சீன துருப்புகளின் ஆதிக்கம் இருந்த நிலையில், சீன ராணுவத்துக்கு எதிரான ஒரு ரகசிய படைப்பிரிவை உருவாக்கி, அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பணி பிரிகேடியர் உபனுக்கு வழங்கப்பட்டது. ஓய்வு பெறப்போகிறோமே என்ற கவலையில் இருந்த அந்த பிரிகேடியர் உபன், மகிழ்ச்சியுடன் இந்த சவால் நிறைந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஜெனரல் எஸ்.எஸ்.உபன்
ஜெனரல் எஸ்.எஸ்.உபன்

அவருக்கு உதவியாக தலாய் லாமாவின் மூத்த சகோதரர் கயாலோ தோன்டப் (Gyalo Thondup) இருப்பதாக உறுதி அளித்தார். இந்திய உளவுத்துறை (IB), மற்றொரு உளவு அமைப்பான ரா (RAW) ஆகியவற்றின் மேற்பார்வையில் புதிதாக உருவாக்கப்படும் சிறப்பு முன்களப் படை (Special Frontier Force) எனப்படும் ரகசியப் படைப்பிரிவுக்கு அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ பயிற்சி கொடுக்க இசைந்தது. அப்போதைய ரா இயக்குநர் போலோநாத் முல்லிக் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இயற்கையிலேயே முரட்டு சுபாவம் கொண்ட திபெத்தியர்களின் நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று எஸ்.எஸ்.உபனுக்கு பி.என்.முல்லிக் எச்சரித்து புதிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான 1962-ம் ஆண்டு நவம்பர் 14-ல் திபெத்தியர்கள் 5,000 பேர் கொண்ட எஸ்.எஃப்.எஃப் எனப்படும் படைப்பிரிவு தோற்றுவிக்கப்பட்டது.

கல்வான் பள்ளத்தாக்கு யாருக்குச் சொந்தம்? - சரித்திரமும் சமகாலமும்

சம்பவம் 2

கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் கிழக்கு லடாக்கில் இருக்கும் பாங்கோங் சோ ஏரி பகுதிக்கு அருகில் சீன துருப்புகள் நடமாட்டத்தை இந்திய ராணுவம் உறுதி செய்கிறது. இந்தியா - சீனா எல்லைப்பகுதியைத் தாண்டி இந்திய எல்லைக்குள் சுமார் 200 சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயற்சிக்கிறார்கள். டோக்லாம் பிரச்னை, கல்வான் பள்ளத்தாக்கு மோதல் ஆகிய சம்பவங்களுக்குப் பின்னர் சீனாவுடனான எல்லையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்த இந்திய ராணுவம், சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கையை முன்கூட்டியே கணித்திருந்தது. உளவுத் தகவல்களால், பாங்கோங் சோ ஏரியில் இந்திய ராணுவ துருப்புகள் வழக்கத்தை விட அதிகமாகவே குவிக்கப்பட்டிருந்தன.

பாங்கோங் சோ ஏரி
பாங்கோங் சோ ஏரி
AP | Manish Swarup

இந்திய ராணுவத்தின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடைசி நிமிடத்தில் மிரண்ட சீனத் துருப்புகள், சிறிது நேர யோசனைக்குப் பின்னர் அத்துமீறல் முயற்சியைக் கைவிட்டு பின்வாங்கினர். இதையடுத்து, பாங்காங் சோ ஏரியைச் சுற்றியுள்ள மலைச் சிகரங்களைக் கைப்பற்றிய இந்திய ராணுவம் அங்கு துருப்புகளைக் குவித்தது. புவியியல்ரீதியாக முக்கியத்துவம் பெற்ற பாங்காங் சோ ஏரியைச் சுற்றியுள்ள 'Fingers' என்று குறிப்பிடப்படும் முக்கியமான சிகரங்கள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏறக்குறைய 58 ஆண்டு இடைவெளியில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்கிறீர்களா?

1962 சீனப் போரின்போது சீன ராணுவ நடமாட்டங்களைக் கண்காணிக்கவும், சீன எல்லைக்குள் புகுந்து ரகசிய ஆபரேஷன்களை நடத்தும் நோக்கத்திலும் உருவாக்கப்பட்ட சிறப்பு முன்களப் படை வீரர்கள், சீன ராணுவத்தின் பாங்கோங் சோ ஏரி அத்துமீறல் முயற்சியை முறியடிப்பதில் முக்கியப் பங்காற்றினர்.

எஸ்.எஃப்.எஃப் படை
எஸ்.எஃப்.எஃப் படை

பிரதமர் அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எஸ்.எஃப்.எஃப் படைப்பிரிவு இருப்பதை இந்தியா அதிகாரபூர்வமாக வெளியிட்டதில்லை. கிழக்கு லடாக் பகுதியில் சிறப்பு முன்களப் படைப்பிரிவு இருப்பதை இந்திய ராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டாலும், பாங்கோங் சோ பகுதியில் சீன அத்துமீறல் முறியடிப்பில் அதன் பங்கு என்ன என்பதைப் பற்றி வாய்திறக்கவில்லை. ஆனால், சீன எல்லை குறித்த முழுமையான புரிதல் மற்றும் கடினமான சூழல்களில் திறம்பட போரிடும் எஸ்.எஃப்.எஃப் படைப்பிரிவு, சீனத் துருப்புகளை விரட்டியடித்ததில் முக்கியமான பங்காற்றியிருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்கிறார்கள் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.

`15,000 அடி உயரத்தில் டென்ட்; விதிமீறிய சீனா!- கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் தொடக்கப்புள்ளி?

எஸ்.எஸ்.உபன்

எஸ்.எஃப்.எஃப் படைப்பிரிவின் முதல் இன்ஸ்பெக்டர் ஜெனரலான மேஜர் ஜெனரல் எஸ்.எஸ். உபன், அஸ்ஸாமின் 22 மவுண்டன் ரெஜிமெண்டின் கமாண்டராக இருந்த காரணத்தால், இந்தப் படைப்பிரிவு 'Establishment 22' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

ஜெனரல் எஸ்.எஸ்.உபன்
ஜெனரல் எஸ்.எஸ்.உபன்

ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் பெரும்பான்மையான காலம் பீரங்கிப் படைப்பிரிவிலேயே பிரிகேடியர் உபன் பணி செய்திருந்தார். போர் நேரங்களைத் தவிர பயிற்சிகளிலேயே கழியும் நேரத்தை அவர், மலைப்பிரதேசங்களில் முகாமிட்டிருக்கும் படைப்பிரிவினரோடு கழித்திருந்தார். இவரது கண்டிப்பான பயிற்சி மற்றும் நடைமுறைகளால், `பைத்தியக்கார சீக்கியர்’ என்ற அடைமொழியும் பெற்றிருந்தார். இந்த இரண்டு காரணங்களாலேயே, திபெத்தியர்கள் அடங்கிய புதிய படைப்பிரிவுக்குத் தலைமையேற்க இவரது பெயரை பாதுகாப்புத் துறை அமைச்சகம் டிக் அடித்திருந்தது.

தலாய் லாமாவின் மூத்த சகோதரர் கயாலோ தோன்டப் (Gyalo Thondup) உதவியுடன் சுமார் 5,000 திபெத்தியர்கள் கொண்ட படையை பிரிகேடியர் உபன் கட்டமைத்தார். உத்தராகண்டின் சக்ரதா பகுதியில் இருந்த கைவிடப்பட்ட ராணுவ படைத் தளத்தை, எஸ்.எஃப்.எஃப்-பின் தலைமையகமாக மாற்றினார். மலைப் பகுதிகளில் கடினமான பயிற்சி, பாராசூட் பயிற்சி உள்ளிட்ட கெரில்லா தாக்குதல்களுக்கான பல்வேறு பயிற்சிகளையும் திபெத்தியர்களுக்கு ஐ.பி, ரா மற்றும் சி.ஐ.ஏ அதிகாரிகள் அளித்தனர்.

Pangong Tso: `பாங்கோங் சோ ஏரி இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?' - சீன ஊடுருவல் முறியடிக்கப்பட்ட பின்னணி!

'Establishment 22'

சுமார் 5,000 திபெத்தியர்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் படைப்பிரிவில் தற்போது இருக்கும் வீரர்கள் எண்ணிக்கை தொடர்பான அறுதியிட்ட தகவல் வெளியானதில்லை. ஆனால், தற்போது சுமார் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருக்கலாம் என்று பேசப்படுகிறது. திபெத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காம் (Kham) பகுதியைச் சேர்ந்த காம்பா (khampa) பழங்குடியின வீரர்களே எஸ்.எஃப்.எஃப்-பில் அதிகம் இடம்பெற்றிருக்கும் வீரர்கள். சீனா, தங்கள் பகுதியை ஆக்கிரமித்து, தங்கள் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக இந்தப் பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இதனால், சீனாவுக்குத் தங்கள் எதிர்ப்பை பல வகைகளிலும் பதிவு செய்து வருகின்றனர்.

தலாய் லாமாவின் மூத்த சகோதரர் கயாலோ தோன்டப்
தலாய் லாமாவின் மூத்த சகோதரர் கயாலோ தோன்டப்

திபெத் புத்த மதத் தலைவரான தலாய் லாமாவின் தனிப்பட்ட பாதுகாவலர்களான காம்பா பழங்குடியின வீரர்கள், இந்தக் காரணத்தாலேயே சீனாவுக்கு எதிராக இந்தியா உருவாக்கிய படைப்பிரிவில் சேர்ந்து போரிட உறுதிபூண்டனர். ஆனால், தற்போது கூர்கா இன வீரர்களும் படைப்பிரிவில் இருக்கிறார்கள்.

பிரிகேடியர் எஸ்.எஸ்.உபனுக்குப் பின்னர் இந்த படைப்பிரிவுக்குத் தலைமையேற்பவர்கள் இந்திய ராணுவ அதிகாரிகளே. குறிப்பிட்ட உறுதிமொழி அளித்த பின்னரே, ராணுவ அதிகாரிகள் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியும். இந்திய ராணுவத்தின் 26-வது தளபதியாக இருந்த ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக் போன்ற பலர் இதன் தலைமைப் பொறுப்பை அலங்கரித்திருக்கிறார்கள். ஆனால், அதிகாரபூர்வமாக இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகமோ அல்லது எந்த ராணுவ அதிகாரியோ பேசியதில்லை. அதேநேரம், சீன எல்லையை ஒட்டிய கிழக்கு லடாக் உள்ளிட்ட பகுதிகளில் அந்தப் படைப்பிரிவு இருப்பது குறித்து பல்வேறு சூழல்களில் ராணுவ அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள்.

வங்கதேசப் போர்!

சீன ராணுவத்தை எதிர்ப்பதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு சூழல்களில் இந்திய அரசின் ஆணையை ஏற்று, எஸ்.எஃப்.எஃப் அதைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறது. 1971-ம் ஆண்டு நடைபெற்ற வங்கதேசப் போரில் பாகிஸ்தான் படைகளைக் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) இருந்து விரட்டியடித்ததில் எஸ்.எஃப்.எஃப் முக்கியப் பங்கு வகித்தது.

வங்கதேச விடுதலைக்காக உருவாக்கப்பட்ட முக்தி பாஹினி (Mukti Bahini) படை வீரர்கள்போல் கிழக்கு பாகிஸ்தானுக்குள் எஸ்.எஃப்.எஃப் படை நுழைந்தது. போர் தொடங்கி 3 வாரங்கள் எல்லையில் சண்டை தீவிரமடைந்திருந்த நிலையில், தனது 6 பட்டாலியன்களை 3 படைப்பிரிவுகளாக மாற்றி 1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி கிழக்கு பாகிஸ்தானுக்குள் காலடி எடுத்து வைத்த எஸ்.எஃப்.எஃப் படை, கிழக்கு பாகிஸ்தான் ராணுவப் படை பர்மா வழியாகத் தப்ப முயன்றதைத் தடுத்தது. மேலும், பாகிஸ்தானின் 97-வது இண்டிப்பென்டன்ட் பிரிகேட் படைப்பிரிவை சிட்டகாங் மலைப்பகுதியில் முன்னேறமுடியாமல் தடுத்து நிறுத்தியது எஸ்.எஃப்.எஃப் படை. பாகிஸ்தான் படைகள் சரணடைந்தபோது, எஸ்.எஃப்.எஃப் படை வீரர்கள் 56 பேர் வீரமரணமடைந்திருந்தனர். மேலும் 190 பேர் படுகாயமடைந்திருந்ததாகச் சொல்கிறது Bharat Rakshak இணையதளத் தகவல்.

காம்பா பழங்குடியினர்
காம்பா பழங்குடியினர்

அதேபோல், 1965-ல் சீனாவின் அணு ஆயுத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நந்தாதேவி மலையில் ரகசிய சென்சார் அமைப்பதற்காக நடத்தப்பட்ட ரகசிய ஆபரேஷன், கார்கில் போரின்போது டுக்டுக் செக்டாரில் முக்கியமான கட்டத்தில் இந்திய ராணுவத்துக்கு செய்த முன்கள உதவி, சியாச்சின் பனிச் சிகரத்தில் தொடர்ச்சியான கண்காணிப்புப் பணிகளை முன்னெடுப்பது என எஸ்.எஃப்.எஃப் படைகளின் பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தியாவில் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 என்பது குழந்தைகள் தினம் மட்டுமல்ல; தங்களது இரண்டாவது தாய்நாடான இந்தியாவுக்காக முன்களத்தில் போரிடும் திபெத்தியர்கள் கொண்ட எஸ்.எஃப்.எஃப் படைப்பிரிவை நினைத்துப் போற்றக்கூடிய நாளாகவும் இருக்கட்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு