Published:Updated:

`சிக்கன நடவடிக்கை!' - 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இன்ஃபோசிஸ் முடிவு?

அந்த நிறுவனத்தின் ஜாப் லெவல் 6 பிரிவில் 10% வரை, அதாவது 2,200 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளனர்.

இன்ஃபோசிஸ் பணிநீக்கம்
இன்ஃபோசிஸ் பணிநீக்கம் ( vikatan )

சமீபத்தில் காக்னிசன்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் 7,000 பேர் வரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் தனது பணியாளர்களில் 12 ஆயிரம் பேர்வரை அதிரடியாகப் பணிநீக்கம் செய்யவுள்ளது.

இன்ஃபோசிஸ் பணிநீக்கம்
இன்ஃபோசிஸ் பணிநீக்கம்
vikatan

அந்த நிறுவனத்தின் ஜாப் லெவல் 6 பிரிவில் (10%) 2,200 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளனர். அடுத்து, அசோசியேட் மற்றும் நடுத்தரப் பணியாளர்கள் பிரிவில் (2%-5%) 4,000 - 10,000 பேர் வரை பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர். மேலும், அந்த நிறுவனத்தின் சீனியர் பணியாளர்களில் ஆயிரம் பேர் வரையும், வைஸ் பிரசிடென்ட், அசிஸ்டென்ட் வைஸ் பிரசிடென்ட் போன்ற உயர் பொறுப்புக்களில் பணியாற்றுவோரில் 50 பேர் வரையும் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். சிக்கன நடவடிக்கைக்காக இந்தப் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகள் பற்றி, அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் தெரிவித்த புகார்கள்மீதான விசாரணை முடிவு அறிவிக்கப்பட்டது. அந்தப் புகார்கள் குறித்து முழுமையான, விரிவான விசாரணை நடத்தப்படும் என்று இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீல்கேணி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி விசாரணை நடத்தியபோது, கூடுதலான ஆதாரங்கள் எதுவுமே தரப்படாததால் அந்தப் பெயரிடப்படாத புகார் கடிதங்களை நம்பகமானதாகக் கருத முடியாது என்றும், அந்தப் புகார்களின் அடிப்படையில் நிறுவனத்தின் கட்டுக்கோப்பு, அதிகாரிகள் மீதான நம்பகத்தன்மை ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்க முடியாது என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேணி
இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேணி
vikatan

புகார்களில் நம்பகத்தன்மையில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்தபோதும் அந்தப் பிரச்னை ஓய்ந்துவிடவில்லை. அந்தப் புகார்களின்மீது அமெரிக்காவில் சட்டரீதியான வழக்கைச் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், அமெரிக்க மற்றும் இந்திய ஒழுங்குமுறை அமைப்புகளும் அந்தப் புகார்களின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளன.