Published:Updated:

`இறந்த உடல்களுடன் திறந்த ட்ரக்கில் பயணித்த தொழிலாளர்கள்’ - அதிர்ச்சி கொடுத்த உ.பி சம்பவம்

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுடன் காயமடைந்த தொழிலாளர்களும் ஒரே லாரியில் சொந்த மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு வைரஸைவிட அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வில் சொல்ல முடியாத பல வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில் வேலையிழப்பு, பொருளாதாரம் பாதிப்பு, பசி, வைரஸ் பயம் போன்ற காரணங்களால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாரைசாரையாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

அவ்ராயா விபத்து
அவ்ராயா விபத்து

நடைப் பயணம், சைக்கிள், லாரி, ரயில், பேருந்து எனத் தங்களுக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திப் பயணித்து வருகின்றனர். அப்படி அவர்கள் செல்லும் வழிகளில் ஏற்படும் விபத்துகள், உடல்நலக் குறைவு போன்ற பல காரணங்களால் மட்டும் தினம்தினம் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தொழிலாளர்கள் சந்திக்கும் பல வேதனைகள் நிறைந்த காட்சிகளின் வீடியோக்கள் வெளியாகி மனதைக் கனமாக்குகின்றன. அதேபோல் ஒரு கொடுமையான காட்சி தற்போதும் வெளியாகியுள்ளது.

பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்ட அவர்கள் 50 நாள்களுக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதும் கடந்த சனிக்கிழமை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு லாரியில் புறப்பட்டுள்ளனர். சுமார் 60 தொழிலாளர்களுடன் உத்தரப்பிரதேச மாநிலம் அவ்ராயா எனும் பகுதியில் இந்த லாரி பயணித்துக்கொண்டிருக்கும்போது எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதி, இரண்டு லாரியும் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 15-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவ்ராயா விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரு திறந்த ட்ரக்கில் வைத்து அதனுடனேயே விபத்துக்குள்ளானவர்களும் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இதைப் பார்த்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், “எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தை நடைபெறாமல் தடுத்திருக்கலாம். உத்தரப்பிரதேச முதல்வரும் பீகார் முதல்வரும் எங்கள் தொழிலாளர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாப்பான வேறு வாகனத்தில் ஏற்றி ஜார்க்கண்ட் எல்லைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரான போகாரோ செல்ல நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆம்புலன்ஸுக்கு மாற்றப்படும் உடல்கள்
ஆம்புலன்ஸுக்கு மாற்றப்படும் உடல்கள்

ஜார்க்கண்ட் முதல்வரின் ட்வீட்டை அடுத்து இந்த விவகாரம் இன்னும் பெரிதாகவே, அந்த லாரி உத்தரப்பிரதேச தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது அதைப் பாதியிலேயே நிறுத்தி இறந்தவர்களின் உடல்கள் தனியாக ஆம்புலன்ஸிலும், காயமடைந்தவர்கள் மற்றும் மீதமுள்ள தொழிலாளர்கள் எனப் பலரும் 3 ட்ரக்குகளில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

`நேருக்கு நேர் மோதிய ட்ரக்குகள்; 23 புலம்பெயர் தொழிலாளர்கள் 
பலி!’ -ஊரடங்கில் தொடரும் சோகம்

மேலும் இந்தச் சம்பவத்துக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரமோத் திவாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயணிக்கும் வழியிலேயே இறந்த உடல்கள் சிதைவடையத் தொடங்கிவிட்டதாகவும், மருத்துவ நீதிப்படி முறையான பாதுகாப்பு இல்லாமல் இறந்த உடல்களுடன் விபத்துக்குள்ளானவர்களைப் பயணிக்கக் கூறுவது பெரும் குற்றச் செயல் என்று விமர்சித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அவ்ராயா மாவட்ட ஆட்சியர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு