Published:Updated:

குஜராத் கடலில் ஆளில்லாப் படகுகள்; தென்னிந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்? - ராணுவத்தின் எச்சரிக்கை

தினேஷ் ராமையா

தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாக ராணுவம் தெரிவித்திருக்கிறது.

Lt Gen SK Saini
Lt Gen SK Saini ( ANI )

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு, இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இதனால், இரு நாடுகள் இடையிலான எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் அமைதியைச் சீர்குலைக்க முயலலாம் என்று கிடைத்த எச்சரிக்கையால் அம்மாநிலத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லையை யொட்டிய பகுதிகளில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன.

Indian Army
Indian Army
AP

இந்தநிலையில், தீவிரவாதிகள் தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது என ராணுவம் எச்சரித்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவை அடுத்த கன்ஹே (Kanhe) பகுதியில் ராணுவச் சட்டக் கல்லூரியின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே.சைனி கலந்துகொண்டார்.

எல்லையையொட்டி படைகளைக் குவிக்கும் பாகிஸ்தான்! - தீவிரக் கண்காணிப்பில் இந்திய ராணுவம்

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் சைனி, ``தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. குஜராத்தின் சர் க்ரீக் பகுதியில் கைவிடப்பட்ட ஆளில்லாப் படகுகள் சிலவற்றைக் கைப்பற்றியிருக்கிறோம். தாக்குதல் குறித்த எச்சரிக்கை வந்ததால், அந்தப் பகுதியில் கண்காணிப்பைப் பலப்படுத்தியிருக்கிறோம். தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு அரசியல் தலைவர்களின் கருத்துகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த சைனி, ``இதுபோன்ற மிரட்டல்கள் நாங்கள் செயல்படும் விதத்தை மாற்றப்போவதில்லை. எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார். குஜராத் கடற்பகுதியில் உள்ள சர் க்ரீக் (Sir creek) பகுதியைப் பொறுத்தவரை எல்லை வரையறை குறித்து இரு நாடுகள் இடையே எந்தவிதமான ஒப்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், இது இருநாடுகளின் அரசுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்று தெரிவித்தார்.

`டீ எப்படி இருக்கு!'- தீவிரவாதியை வீடியோ எடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்
தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
லெப்டினன்ட் ஜெனரல் சைனி

ராணுவத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கேரளா முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அம்மாநில காவல்துறை டி.ஜி.பி லோக்நாத் பெஹ்ரா, பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கண்காணிப்பைப் பலப்படுத்துமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.