Published:Updated:

12 நாள்களுக்குப் பிறகு காஷ்மீரில் மீண்டும் மொபைல் இணையச் சேவை!

ஆ.பழனியப்பன்

ஜம்மு-காஷ்மீரில் படிப்படியாக இயல்புநிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் 2 ஜி மொபைல் இணையச் சேவை மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது.

jammu and kashmir
jammu and kashmir

ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் அந்த மாநிலத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர்.

jammu and kashmir
jammu and kashmir

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 10 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளிக்கிழமையன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆளுநர் சத்யபால் மாலிக். அதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்பு சேவைகள் சில பகுதிகளில் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில், இன்று காலை முதல் 17 தொலைபேசி இணைப்பகங்கள் சேவையை மீண்டும் தொடங்கின. அதையடுத்து, 12 நாள்களுக்குப் பிறகு, சுமார் 50,000 தொலைபேசி இணைப்புகள் செயல்பட ஆரம்பித்துள்ளன. விரைவில் மேலும் 20 தொலைபேசி இணைப்பகங்கள் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, ரீஸி, சம்பா, கத்துவா, உதம்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்றைக்கு 2 ஜி சேவை செயல்பட ஆரம்பித்துள்ளது.

jammu and kashmir
jammu and kashmir

ஸ்ரீநகர் மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் இடங்கள், பாதுகாப்புப் படையினரின் பகுதிகள், விமானநிலையம் ஆகிய பகுதிகளில் தொலைபேசி இணைப்பகங்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன. மத்திய காஷ்மீரில் பட்கம், சொனமார்க், மனிகம் பகுதிகளில் தொலைபேசி சேவைகள் செயல்பட ஆரம்பித்துள்ளன.

இங்கு, பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொலைத்தொடர்பு சேவைகளைப் பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில் செல்போன் உள்ளிட்ட சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், `விரைவில் படிப்படியாகச் செல்போன் சேவை உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்' என்றனர்.