Published:Updated:

`ஆர்யன் கானை விடுவிக்கப் பேரம்?’ - சமீர் வான்கடே மீதான ரூ.25 கோடி லஞ்சப் புகார் குறித்து விசாரணை

நடிகர் ஷாருக் கான் மகனைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீதான லஞ்சப் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே மீது ரூ.25 கோடி லஞ்சப் புகார் எழுந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட ஆர்யன் கானை விடுவிக்க இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ள கொசாவி (Gosavi) ஷாருக் கானின் மேலாளர் பூஜாவுடன் ரூ.18 முதல் 25 கோடி வரை லஞ்சம் வாங்குவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை கொசாவியின் பாதுகாவலரும், மற்றொரு சாட்சியுமான பிரபாகர் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டால் பிரபாகர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எனவே பிரபாகர் திங்கள்கிழமை மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று தனக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆர்யன் கான்
ஆர்யன் கான்

மற்றொருபுறம் பிரபாகர் தெரிவித்த புகார் பெரிய அளவில் சமீர் வான்கடேவுக்குப் பிரச்னையைக் கொண்டு வந்திருக்கிறது. சமீர் வான்கடேவுக்கு எதிரான புகார் குறித்து விசாரிக்கும்படி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உத்தரவிட்டிருக்கிறது. இந்த விசாரணையை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல துணை இயக்குநரும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைமைக் கண்காணிப்பு அதிகாரியுமான ஞானேஷ்வர் சிங் மேற்பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாருக் கான் மகனைக் கைதுசெய்த அதிகாரி சமீர் வான்கடே, மாநில அரசால் வேவு பார்க்கப்பட்டாரா?!

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``சமீர் வான்கடே மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணையை நான்தான் மேற்பார்வையிடுகிறேன். விசாரணையை இப்போதுதான் தொடங்கியிருக்கிறோம். அதனால் சமீர் தொடர்ந்து பதவியில் இருப்பாரா என்று இப்போது சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

சமீர் வான்கடே
சமீர் வான்கடே

விசாரணை அறிக்கை விரைவில் டெல்லியிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான சமீரும் டெல்லிக்கு வரும்படி அழைக்கப்பட்டிருக்கிறார். செவ்வாய்க்கிழமை சமீர் டெல்லி செல்கிறார். அவரிடம் தலைமை அலுவலகத்தில் லஞ்சப் புகார் குறித்து விசாரணை நடத்தப்படவிருக்கிறது. சமீர் வான்கடேயும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில் தன்னை மிரட்டி விசாரணையைத் தடுக்க முயல்வதாகவும், போலியான புகாரில் தன்னைக் கைது செய்ய முயற்சி நடப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தனது சகோதரி உட்பட குடும்ப உறுப்பினர்களையும் இதில் இழுக்கப் பார்ப்பதாகவும், தன் மீதான விசாரணைக்குத் தான் தயாராக இருப்பதாகவும் சமீர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு