Published:Updated:

இந்தியர்கள், சீன தயாரிப்புகளைத் தவிர்க்க முடியுமா? - உண்மை நிலை என்ன?

Boycott china
Boycott china

மொத்தமாக சீன பொருட்களைப் புறக்கணிப்பது சாத்தியமா? உண்மையில், நம் அன்றாட வாழ்வில் எந்த அளவுக்கு சீனா பொருட்கள் ஒன்றெனக் கலந்திருக்கின்றன... விரிவாக அலசுவோம்.

இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், சில நாட்களுக்கு முன்பு நடந்த ராணுவ மோதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மோதலில், இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். அதேநேரம், சீனாவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வீரர்களும் இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, எல்லைப் பகுதியில் கடும் பதற்றம் நிலவிவருகிறது. இரு நாடுகளுமே இந்தப் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனக் கூறி வருகின்றன. இருப்பினும் இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-சீனா உறவு முன்பு போல இருக்காது என்பது மட்டும் உறுதி!

Protest against Chinese
Protest against Chinese
Rajesh Kumar Singh | AP

முக்கியமாக, வணிக ரீதியாக சீனாவுக்கு பதிலடிகொடுக்க வேண்டும், மொத்தமாக சீனத் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் இந்தியாவில் எழுந்துள்ளன. வட இந்தியாவில், மக்கள் சிலர் தங்கள் வீடுகளிலிருக்கும் சீனப் பொருட்களை உடைத்தும், எரித்தும் போராட்டங்களில் ஈடுபடுவதைப் பார்க்கமுடிகிறது. சீன அதிபரின் படங்களும், உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டிருக்கின்றன. வணிகர் சங்கங்கள் சீனப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளன. அரசு தரப்பும் முடிந்தளவு சீனாவுடனான வர்த்தகத் தொடர்பை குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டுவருகிறது.

இப்படி, மொத்தமாக சீனா பொருட்களைப் புறக்கணிப்பது சாத்தியமா? உண்மையில் நம் அன்றாட வாழ்வில் எந்த அளவுக்கு சீனா பொருட்கள் ஒன்றெனக் கலந்திருக்கின்றன... விரிவாக அலசுவோம்.

2019-2020 (ஏப்ரல்-பிப்ரவரி) காலத்தில், சீனாவுக்கு இந்தியா 1.09 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 5.3 சதவிகிதம். அதே நேரத்தில், சீனாவிலிருந்து இங்கு இறக்குமதியான பொருட்களின் மதிப்பு 4.4 லட்சம் கோடி ரூபாய். இது, இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 14.09 சதவிகிதம். இந்த ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இருக்கும் வித்தியாசம் என்பது சுமார் 3.3 லட்சம் கோடி ரூபாயாக (trade deficit) இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்கள், இரும்புத் தாதுக்கள், பருத்தி, மசாலா பொருட்கள் போன்றவற்றைப் பெருமளவில் நாம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள், டெலிகாம் சாதனங்கள், கம்ப்யூட்டர், தொழிற்சாலை உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் போன்றவற்றை சீனாவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்கிறோம்.

ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் சீனா ஆதிக்கம் செலுத்தும் முக்கிய சந்தை இதுதான். 70 சதவிகிதத்திற்கும் அதிகமான மார்க்கெட் ஷேர், சீன நிறுவனங்களிடம்தான் இருக்கிறது. அதில் ஷாவ்மி நிறுவனம் மட்டுமே சுமார் 30 சதவிகித சந்தையைக் கைப்பற்றியிருக்கிறது.
Xiaomi
Xiaomi

இந்தியாவைப் பொறுத்தவரை, பட்ஜெட் ஸ்மார்ட்போன் செக்மென்ட்தான் அதிகம் விற்பனையை ஈர்ப்பதாக இருக்கிறது. இதில் ஷாவ்மி, விவோ, ரியல்மீ, ஒப்போ ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்தப் பிரிவில், இந்திய மாற்றுகள் எனச் சொல்லும் அளவுக்கு எந்த பிராண்டுகளுமே தற்போது இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். லாவா, மைக்ரோமேக்ஸ் போன்ற வெகு சில இந்திய நிறுவனங்கள் மட்டும் ஓரளவு சுமாரான ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கின்றன.

சீனா அல்லாத மற்ற நாடுகளின் நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டால் எல்.ஜி, சாம்சங், அசுஸ் போன்ற சில நிறுவனங்களே இருக்கின்றன. இதில், கொரிய நிறுவனமான சாம்சங் மட்டுமே சீன நிறுவனங்களுக்கு இணையான போன்களைத் தயாரிக்கின்றன. ஏற்கெனவே கணிசமான இந்திய மக்கள் சாம்சங் போன்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சாம்சங்குமே சமீபகாலங்களில் சீன நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிவருகிறது. 2019-ம் ஆண்டு தொடக்கத்தில், சுமார் 25% சந்தையைக் கைப்பற்றியிருந்த நிறுவனத்திடம் இப்போது 16% சந்தை மட்டுமே இருக்கிறது.

சீன நிறுவனங்களின் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அந்த விலை. மேலும், முன்பு போல தரம் சார்ந்த குற்றச்சாட்டுகளும் தற்போது பெரிதாக சீன நிறுவனங்கள் மேல் இல்லை. R&D பிரிவிலும் மிகவும் பலம் பொருந்திய நிறுவனங்களாக இவை இருக்கின்றன. இதனால் புதிய வசதிகள் கொண்டுவருவது, இருக்கும் வசதிகளை மேம்படுத்துவது போன்ற வேலைகளை நுட்பமாகச் செய்கின்றன இந்த நிறுவனங்கள். ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் தங்களது மொபைல்களை பெருமளவில் சீனாவில் தயாரிப்பதால், அந்த நிறுவனங்களின் மேம்பட்ட தொழில்நுட்பங்களை எளிதில் திருடி தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கின்றன சீன நிறுவனங்கள். `அறிவுசார் சொத்துகள் திருடப்படுவது' குறித்து தொடர்ந்து சீனா மீது குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறது அமெரிக்கா.

இதனால் தற்போதைய சூழலில் முக்கால்வாசி சந்தையைக் கைப்பற்றியிருக்கும் சீன மொபைல் நிறுவனங்களை ஒதுக்குவது என்பது இந்தியாவுக்கு மிகவும் கடினமான காரியம்தான். இதில் இன்னொரு சிக்கலும் உண்டு. நாம் இந்திய நிறுவனங்கள் என நம்பும் `மைக்ரோமேக்ஸ்' போன்ற நிறுவனங்களும்கூட ஒருகாலத்தில் சீனாவிலிருந்து மொத்தமாக மொபைல்களை இறக்குமதி செய்து அதைப் பெயர்மட்டும் மாற்றி இந்தியாவில் விற்பனை செய்துவந்தன. அதே நேரத்தில், ஷாவ்மி போன்ற சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைத்து இந்தியர்களையே பணியமர்த்திதான் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கின்றன (உதிரிபாகங்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன). இப்போது சீன தயாரிப்புகளைப் புறக்கணிப்பது என்பது நேரடியாக நம்மையே பாதிக்கும் சூழல்தான் இந்தியாவில் இருக்கிறது, ஸ்மார்ட்போன் சந்தையை பொறுத்த வரையிலும்.

தொலைத்தொடர்பு உபகரணங்கள்
இதுவும் சீனாவிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் ஒன்று. கிட்டத்தட்ட 25 சதவிகித சந்தை சீன நிறுவனங்களிடமே இருக்கிறது.

இப்போது 4G-யிலிருந்து 5G-க்கு அப்கிரேட் ஆகிக்கொண்டிருக்கின்றன டெலிகாம் நிறுவனங்கள். இந்த உபகரணங்கள் விற்பதில் ZTE, வாவே (Huawei) போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இதில் சீனாவைத் தவிர்க்க முடியுமா என்றால் முடியும். ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 10-15% அதிகம் செலவுசெய்ய வேண்டும். சீன நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை ரத்துசெய்துவிட்டு அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் போடவேண்டிவரும்.

BSNL
BSNL

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போதுதான் 4G-க்கு அப்கிரேட் ஆகி வருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் வலியுறுத்தலின் படி, இந்தப் பணிகளில் சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை என்ற போதிலும், இது நடக்கும்பட்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் துறையில் சீனாவின் பிடி தளரும்.

இன்டர்நெட் ஆப்ஸ்
சீனாவிலிருந்து வரும் இன்னொரு விஷயத்தை மொத்தமாகத் தவிர்க்க முடியும் என்றால், அது இந்த ஆப்ஸைத்தான்.
Tik tok
Tik tok

TikTok, Helo என இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் சீன ஆப்கள் ஏராளம். சீன அரசிடம் தகவல்களைக் கொடுத்துவிடுகின்றன என இந்த ஆப்கள் சிலவற்றின் மீது தகவல் திருட்டு குற்றச்சாட்டுகள் கூட உண்டு. பெரும்பாலானோர் பயன்படுத்தினாலும்கூட, இவை அத்தியாவசியமாகவோ இன்றியமையாததாகவோ இல்லை. மாற்றுகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. `வேண்டாம்' என்ற முடிவை மக்கள் எடுத்துவிட்டார்கள் என்றால், மொத்தமாக இவற்றைப் புறக்கணிக்க முடியும். ஆனால், டிக் டாக்கை விட பலருக்கும் மனம் வருமா என்றுதான் தெரியவில்லை.

இந்தச் சூழலில், சீனாவோடு தொடர்புடைய 52 செயலிகளைத் தடை செய்வது அல்லது மக்களுக்கு அதைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை செய்து அறிவுறுத்தல் வழங்கும்படி மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்புகள் பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. உளவுத் துறையின் ரேடாரில் இருப்பதாகச் சொல்லப்படும் 52 சீன செல்போன் செயலிகள் பற்றித் தெரிந்துகொள்ள கீழுள்ள செய்தியைப் படியுங்கள்

இந்திய உளவுத்துறை ரேடாரில் 52 சீன மொபைல் அப்ளிகேஷன்கள்? - முழுப்பட்டியல்

இதுபோக, சமீபத்தில் டி.வி சந்தையில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன சீன நிறுவனங்கள். இந்தியாவில் தற்போது விற்பனையாகும் சுமார் 45% ஸ்மார்ட் டி.வி-கள் சீன நிறுவனங்களுடையது. ஸ்மார்ட்போன் சந்தையிலிருந்த அதே நிலைதான். ஒனிடா, BPL போன்ற வெகுசில இந்திய நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் இருக்கின்றன. தரத்திலும் விலையிலும் சீன நிறுவனங்களுக்கு இவற்றால் போட்டி கொடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். ஆனால் சாம்சங், சோனி, எல்ஜி போன்ற மற்ற சர்வதேச நிறுவனங்கள் மாற்றாக இருக்கின்றன. அவற்றின் விலை 10-15% அதிகமாக இருக்கின்றன.

சோலார் பேனல்
சோலார் பேனல்

சீனப் பொருட்களை மொத்தமாகத் தவிர்க்க வேண்டும் என முடிவெடுத்தால், அடுத்து அடிவாங்கும் முக்கிய ஏரியா, சூரிய மின்சக்தி உற்பத்திதான். 90 சதவிகித உபகரணங்களை நாம் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இந்தப் பிரிவில் உள்ளூர் உற்பத்தி என்பது கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்று சொல்லிவிடலாம். இதற்கான மாற்றுகளைத் தேடிப்பிடிப்பது என்பதற்கே சில வருடங்கள் ஆகும்.

மருந்து, அதாவது ஃபார்மா துறையும் சீனாவுடனான வர்த்தகம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்படும். API (Active Pharmaceutical Ingredient) என்ற மருந்து தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களை சீனாவிலிருந்தே பெரிதும் (60 சதவிகிதம் வரை) இறக்குமதி செய்கிறோம். இதற்கும் மாற்றுங்கள் தேடுவது கடினம்.

வாடிக்கையாளரைக் குறைசொல்ல முடியுமா?

இந்த விஷயத்தில் பலரும் சீனப் பொருட்களை வைத்திருப்பவர்களைச் சுட்டிக்காட்டி குறைசொல்வதைப் பார்க்கமுடிகிறது. அது எந்த விதத்திலும் சரியாகாது. யாரும் வேண்டுமென்றே சீனப் பொருட்களை வாங்கிக் குவிப்பதில்லை. தங்கள் பாக்கெட்டுக்கு பங்கம் விளைவிக்காத குறைவான விலையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். அதைச் சீன நிறுவனங்கள் செய்வதால் சந்தையைப் பிடித்திருக்கின்றன. இந்திய நிறுவனங்கள் வளர, இதையே செய்ய வேண்டுமெனில், அதற்கு அரசின் உதவி அவசியம்.

Boycott Chinese Products
Boycott Chinese Products
AP

இந்த விஷயத்தில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. சீன தயாரிப்பு என எதைத் தவிர்ப்பது..? ஆப்பிள் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அது அமெரிக்க நிறுவனம்தான். ஆனால், கிட்டத்தட்ட சாதனங்கள் அனைத்துமே சீனாவில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் ஆப்பிள் தயாரிப்பை வாங்கினாலும் எப்படியும் பணம் சீனாவுக்கும் சென்று சேரத்தான்போகிறது. இதே போன்றுதான் போயிங் நிறுவனமும். Xi’an Aircraft Industrial Corp என்ற சீனா நிறுவனத்திடமிருந்துதான் பெருமளவில் உதிரிப்பாகங்களைப் பெறுகின்றன. இன்று, இந்தியாவின் பெருவாரியான விமானங்கள் (பிரதமரின் விமானம் உட்பட) போயிங் தயாரித்ததுதான். இப்படி சீன நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளதால், போயிங்கைத் தவிர்க்க வேண்டுமா என்ற குழப்பமும் எழுகிறது. இதே குழப்பம்தான் இங்கு தொழிற்சாலைகள் அமைத்திருக்கும் சீன நிறுவனங்கள் குறித்தும் எழுகிறது. PUBG-யிலும் அதே குழப்பம்தான்.

Unicorn ஸ்டார்ட்-அப்
Unicorn ஸ்டார்ட்-அப்

மேலும், பல முக்கிய இந்திய டிஜிட்டல் ஸ்டார்ட்-அப்களிலும் முதலீடுகள் செய்துள்ளன சீன நிறுவனங்கள். Byjus, Paytm, Ola, Oyo, Swiggy, Zomato, Dream11 எனப் பல Unicorn ஸ்டார்ட்-அப்களும் (1 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய ஸ்டார்ட்-அப்கள்) இதில் அடங்கும். இவை அனைத்துமே இந்தியர்களால் தொடங்கப்பட்டவை, இவற்றின் நிலை என்ன?

இதனால் `எடுத்தோம் கவிழ்த்தோம்' என இந்த விஷயத்தில் முடிவுகள் எடுத்துவிட முடியாது. அகில இந்திய வணிகர் சங்கமுமே முதல்கட்டமாக 3,000 சீனப் பொருட்களைத் தவிர்க்கவே வணிகர்களை அறிவுறுத்திவருகிறது. இவையனைத்திற்கும் எளிதில் இந்தியாவிலேயே மாற்றுகளைக் கண்டறிய முடியும் என நம்புகிறது CAIT (Confederation of All India Traders). இதனால் 2021 முடிவில் 13 பில்லியன் டாலர் (1 லட்சம் கோடி ரூபாய் வரை) சீன இறக்குமதிகளைத் தவிர்க்க முடியும் என நம்புகிறது.

Boycott Chinese Products
Boycott Chinese Products
Rajesh Kumar Singh | AP

இதே நேரத்தில் வீட்டில் இருக்கும் சீனப் பொருட்களை உடைத்தெறியுங்கள் என RWA-க்கள் (Resident welfare association) வலியுறுத்துவதைப் பார்க்கமுடிகிறது. பலரும் இதற்கு செவி சாய்க்கவில்லை என்றாலும், சிலர் தங்கள் வீட்டில் இருக்கும் டிவி, மொபைல்களை உடைத்து வீடியோக்களைப் பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது. போராட்டக்குரல் என்றாலும் இதனால் எதுவுமே சாத்தியப்படாது. உடைக்கப்பட்ட அந்த டி.வி-க்கான பணம் ஏற்கெனவே சீனாவிற்குச் சென்றிருக்கும். இதனால் அவர்களுக்கு இழப்பு என்று எதுவுமே இல்லை.

உண்மையில், நாம் சீனாவைச் சார்ந்திருக்கும் அளவுக்கு சீனா நம்மைச் சார்ந்திருக்கவில்லை. நம் மொத்த இறக்குமதியில் சீனப் பொருட்களின் பங்கு சுமார் 14%. ஆனால் சீனாவின் மொத்த ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு ஐந்து சதவிகிதத்துக்கும் கீழ். ஏற்றுமதியைப் பொறுத்தவரை அமெரிக்காவையே மலையென நம்பியிருக்கிறது சீனா. அதற்காக, இந்தியாவை ஒரு பொருட்டாகவே சீனா எடுத்துக்கொள்ளாது என்று அர்த்தமில்லை. ஸ்மார்ட்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸைப் பொறுத்தவரையில் மிக வேகமாக வளர்ந்துவரும் சந்தையில் இந்தியாவும் ஒன்று. அதனால் அவ்வளவு எளிதில் அதை விட்டுக்கொடுக்காது சீனா.

அதே நேரத்தில், சீன சார்பை நாம் குறைக்க வேண்டும் என முடிவெடுத்தால், உடனடியாக சில மாதங்களில் செய்துவிடவும் முடியாது. நிச்சயம் சில வருடங்களாவது தேவைப்படும். மேலும், இதை வெறும் வாடிக்கையாளனால் மட்டும் சாதிக்கமுடியும் என்றும் எதிர்பார்க்க முடியாது. அரசும் இதில் சில முக்கியத் தீர்க்கமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தவேண்டியதிருக்கும்.

சீனப் பொருள்களைத் தவிர்ப்பது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு