லடாக்கில் சீனா தாக்குதலில், 75 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்களா? -உண்மை என்ன? #VikatanFactCheck

லடாக்கில் சீன வீரர்கள் தாக்குதலில் 75 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படம் உண்மையா..?
கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதளங்களில், சீன வீரர்கள் தாக்குதலினால் 75 இந்திய வீரர்கள் மரணமடைந்ததாக ஒரு புகைப்படம் பரவி வருகிறது.

இந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மை என்ன என்பதை விகடன் ஃபேக்ட் செக் குழு ஆராய்ந்தது.
இது கடந்தாண்டு (2019) பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் சவப்பெட்டிகள்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சி.ஆர்.பி.எஃப் முகாமில், புல்வாமா தாக்குதலின்போது மரணமடைந்த வீரர்கள் உடலுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தப் பழைய புகைப்படத்தை தற்போது எல்லையில் நடக்கும் பதற்றத்துடன் இணைத்து தவறான செய்தியைப் பரப்பிவருகிறார்கள்.
லடாக் எல்லையில் நடப்பது என்ன?
சில ஆண்டுகளுக்கு முன்பே இந்திய எல்லைப் பகுதிகளில் சாலை அமைப்பது, ராணுவக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துவது போன்ற பணிகளைச் சீனா செய்து முடித்திருந்தது. இதேபோல், இந்தியாவும் எல்லைப் பகுதிகளில் சாலை அமைப்பது, பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளைச் செய்து வருகிறது. இதன் மூலம் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தின் பலம் அதிகரிக்கும். இந்தச் செயலை சீனா விரும்பவில்லை.
இதைத் தொடர்ந்து லடாக் மற்றும் வடக்கு சிக்கிம் எல்லைப்பகுதியில் சீன ராணுவ வீரர்கள், அவ்வப்போது நமது வீரர்களுடன் மோதலிலும் கைகலப்பிலும் ஈடுபடுகிறார்கள். இதனால் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

`ராணுவப் படைகள் பயிற்சியை வலுப்படுத்த வேண்டும். அசாதாரண சூழ்நிலைகள் நிலவி வருவதால் போருக்குத் தயாராக இருக்க வேண்டும்' எனச் சீனா அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, எல்லைகளில் சீன ராணுவம் குவிக்கப்படுகிறது. திபெத் பகுதியில் உள்ள ராணுவ விமான தளத்தைச் சீனா விரிவுபடுத்தியுள்ளது.
இதேபோல் இந்தியாவும் எல்லையில் தனது படை பலத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் எல்லைப் பகுதியில் சாலை அமைக்கும் பணியைத் தொடர்வது என்று இந்தியா முடிவு செய்துள்ளது. சீனாவின் செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் செயல்படத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் எல்லையில் நிலவும் பதற்றத்தைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணத் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாம் எல்லைப் பகுதிகளில் இந்திய, சீனப் படைகளுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டது. இந்தப் போர் பதற்றம் கிட்டத்தட்ட 73 நாள்கள் நீடித்தது. பின்னர், இரு நாடுகளின் எல்லையில் அமைதியைப் பராமரிக்க பரஸ்பரம் ஒப்புக்கொண்டதால், இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.