Election bannerElection banner
Published:Updated:

இளைஞருக்காக உண்மையிலேயே படுக்கையை விட்டுக்கொடுத்தாரா முதியவர்... வைரல் செய்தியும், சந்தேகங்களும்!

நாராயண் தபல்கர்
நாராயண் தபல்கர் ( Twitter Image )

``எனக்கு வயது 85. நான் என் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன். ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு சிறிய குழந்தைகள் இருக்கிறார்கள். தயவுசெய்து என் படுக்கையை அந்த இளைஞனுக்குக் கொடுங்கள்"

கடந்த வாரம் நாக்பூரில் 85 வயது கோவிட் நோயாளியான நாராயண் தபல்கர், ஓர் இளைஞருக்காக தனது படுக்கையை விட்டுக்கொடுத்துவிட்டு, ``நான் என் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்" என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், அந்த சம்பவத்தில் தற்போது நிறைய கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் அளவு குறைந்தபோது நாராயண் தபல்கர், இந்திரா காந்தி ருக்னலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு ஒரு பெண் தன் 40 வயது கணவனை அனுமதிக்கும்படி கெஞ்சுவதைக் கண்ட தபல்கர் உடனே வீடு திரும்ப முடிவு செய்ததாகவும், அந்த இளைஞரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனையில் தனது படுக்கையை விட்டுக்கொடுக்க முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது.

COVID-19 -Representational image
COVID-19 -Representational image
AP Photo / Jae C. Hong

``எனக்கு வயது 85. நான் என் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன். ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு சிறிய குழந்தைகள் இருக்கிறார்கள். தயவுசெய்து என் படுக்கையை அந்த இளைஞனுக்குக் கொடுங்கள்" என்று தபல்கர் மருத்துவர்களிடம் வேண்டினதாகவும் செய்திகள் வெளியாயின.

ஓர் இளைய நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தபல்கர் படுக்கையை விட்டுக்கொடுத்த செய்தி சமூக ஊடகங்களிலும் வைரலானது.

``மிகுந்த முயற்சிக்குப் பிறகுதான் எங்களுக்கு ஒரு படுக்கை கிடைத்தது, ஆனால், அவர் இரண்டே மணி நேரத்தில் வீடு திரும்பினார். என் அப்பா தனது கடைசி தருணங்களை எங்களுடன் செலவிட விரும்புவதாகக் கூறினார். அந்த இளம் நோயாளியைப் பற்றியும் அவர் எங்களிடம் பேசிக்கொண்டே இருந்தார்.

old age person - representational image
old age person - representational image

`அவசிய தேவையுள்ள ஓர் இளைஞனுக்குத் தராமல், வாழ்ந்து முடித்துவிட்ட நான் அந்தப் படுக்கையை இரண்டு மூன்று நாட்களுக்கு அடைத்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்' என்று அப்பா சொல்லிவிட்டார்'' என்று தபல்கரின் மகள் ஆசாவரி கோதிவான் கூறியதும் பதிவு செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, தபல்கர் வீடு திரும்பி திரும்பிய அடுத்த சில நாள்களில் இறந்துவிட்டார். இந்தச் செய்தி நாக்பூர் மக்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த செய்தியைப் பற்றி தெரிந்துகொள்ள புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவராம் தவாரே என்பவர் இந்திரா காந்தி மருத்துவமனையை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய மருத்துவமனை அதிகாரி அஜய் பிரசாத், ``செய்தித்தாளில் கூறியது போன்ற சம்பவங்கள் ஏதும் இங்கு நடைபெறவில்லை" என்று கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை, ``அவரது விருப்பித்தின் அடிப்படையில் குணமாகாமல் அப்படியே வீட்டுக்கு அனுப்பிவைப்பது என்பது எங்கள் மருத்துவமனை விதியிலேயே இல்லை" என்று கூறியுள்ளார்.

இதைப்பற்றி நாராயண் தபல்கரின் மருமகனிடம் கேட்டபோது, அவர் மருத்துவர் கூற்றை எதிர்த்துள்ளார். தற்போது தானும் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது விரிவாக இதைப்பற்றி கூறமுடியாது என்று மட்டும் பதில் அளித்துள்ளார்.

இதே கேள்விகளுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகமும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்விகளை எழுப்பியுள்ளது. அப்போது பதில் அளித்துள்ள அம்மருத்துவமனையின் மருத்துவர் ஷீலி சிமுர்கர், ``தபல்கர் ஏப்ரல் 22 அன்று மாலை 5:55 மணிக்கு இங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மோசமடையும் பட்சத்தில் வேறு மருத்துவமனைக்கு அவரை மாற்றவேண்டும் என அவரின் உறவினர்களிடம் தெரிவித்தோம். அவர்களும் சரியென சொல்லிவிட்டு சென்றுவிட்டனர். பின்பு இரவு 7:55 மணிக்கு வந்து அவரை டிஸ்சார்ஜ் செய்யுமாறு கூறினர். என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால், அவரை வேறு பெரிய மருத்துவமனைக்கு மாற்றவேண்டும் எனப் பரிந்துரை செய்தோம். அதைத் தொடர்ந்து அவரின் மருமகன் ஆவணங்களில் கையெழுத்துவிட்டு அவரை அழைத்துச் சென்றார்." எனத் தெரிவித்திருக்கிறார். சமூக ஊடகங்களில் பரவும் இந்த சம்பவத்தைப் பற்றி கேட்டதற்கு, ``அன்றைக்கு அப்படி எந்தவொரு காட்சியையும் எங்கள் ஊழியர்கள் பார்க்கவில்லை. அன்றைய தினம் நிச்சயம் நான்கைந்து படுக்கைகளாவது இங்கு மிச்சம் இருந்திருக்கும்" எனக் கூறியிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் வைரலான செய்தியானது ஆர்.எஸ்.எஸ் மற்றும் வலதுசாரிகளால் அதிகம் பகிரப்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வரான சிவராஜ் சௌஹானும் இதைப் பகிர்ந்து தபல்கரைப் பாராட்டியிருந்தார். இந்நிலையில்தான் அந்தத் தகவலே உண்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- எஸ்.சங்கீதா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு