Published:Updated:

`சோர்வில் காவலர்கள்; ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் மும்பை?!’ -லாக்டெளன் குறித்து உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

``மகாராஷ்டிராவில் வைரஸ் பரவும் சங்கிலியை உடைக்க முடியவில்லை. கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதைப் பொறுத்தே மே 17-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 56,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலமானது தொடர்ந்து கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. நேற்று மட்டும் அம்மாநிலத்தில் 1,089 பேருக்குப் புதிதாக வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மகாராஷ்டிராவில் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்தது. 500-க்கும் மேற்பட்ட காவலர்கள், மருத்துவர்கள், பிற சுகாதாரப் பணியாளர்கள், கைதிகள் எனப் பலரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மகாராஷ்டிரா காவலர்கள்
மகாராஷ்டிரா காவலர்கள்

இதையடுத்து பாதிப்பு அதிகமாக உள்ள மும்பையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் அப்பகுதியைக் கைப்பற்றுவதாக தகவல்கள் வெளியாகின. இதை மறுத்த மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே, மனித சக்தி அதிகமாக தேவைப்படும் பட்சத்தில் மாநில அரசானது மத்திய அரசிடம் உதவிகளைக் கேட்கும் என்றும் தெரிவித்தார். ``மும்பை ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்பது இதனுடைய அர்த்தம் இல்லை. காவல்துறையினர் தொடர்ந்து வேலை செய்வதால் சோர்வாக உள்ளனர். சிலருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வைரஸ் தொற்றும் ஏற்பட்டுள்ளது. எனவே, காவலர்களுக்கு ஓய்வு தேவை” என்று தாக்கரே குறிப்பிட்டார். மத்திய அரசும் மகாராஷ்டிராவில் ஒரு பகுதிக்கு உதவி தேவை என்றால் உதவ தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

ஊரடங்கு தொடர்பாகப் பேசிய அவர், ``மகாராஷ்டிராவில் வைரஸ் பரவும் சங்கிலியை உடைக்க முடியவில்லை. கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதைப் பொறுத்தே மே 17-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். ஊரடங்கு நிலையிலிருந்து ஒரு நாள் நிச்சயமாக வெளியேற வேண்டும். இப்படியே நிரந்தரமாக வாழ முடியாது.

அமைச்சருக்கு பாசிட்டிவ்.. கோரப் பிடியில் மும்பை.. மூன்றாம் கட்டத்தில் மகாராஷ்டிரா! #Corona

தற்போதைய சூழல் மாற மக்கள் அனைவரும் விதிகளைப் பின்பற்றி தனிமனித விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இறந்தவர்களின் உடல்களுடன் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான வீடியோவைக் குறிப்பிட்டு மருத்துவமனை நிர்வாகத்துக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு