Published:Updated:

`அமீரக நாடுகளில் வெறுப்புப் பதிவுகள்..!’ -இந்தியாவுக்கு எதிராக சைபர் வார் நிகழ்த்தும் பாகிஸ்தான்?

சைபர்
சைபர்

பல்வேறு போலிச் சமூகவலைதளப் பக்கங்கள் மூலம் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அமீரக நாடுகளில் அவப்பெயரை ஏற்படுத்த பாகிஸ்தான் முயல்வதாகவும் இதற்குப் பின்னால் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இருப்பதாகவும் இந்தியா சந்தேகம் எழுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளும் வேகம் எடுத்துள்ளன. உலக நாடுகள் அனைத்தும் இணைந்து போராடினால்தான் இந்தப் போராட்டத்தில் வெல்ல முடியும். இந்தியா அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்வதால், ஊரடங்கின் தொடக்கத்தில் மருத்துவப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட ஏற்றுமதிக்கான தடையை விலக்கி அமெரிக்கா, பிரேசில் மற்றும் பல அண்டை நாடுகள் எனப் பல்வேறு நாடுகளுக்கு உதவியது.

கொரோனா வைரஸ் லாக்டௌன்
கொரோனா வைரஸ் லாக்டௌன்

உலகமே கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் சூழலில் பாகிஸ்தான், இந்தியாவுக்குத் தொல்லைகள் தருவதில் கவனம் செலுத்துவதாக, இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் டி.ஜி.பி தில்பாக் சிங், "இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமாக இருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியிலும், இந்த நோயின் காரணமாக இதுவரை 5 பேர் இறந்துள்ளனர். நோயின் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும் சுகாதாரத்துறையும் போராடிவரும் நிலையில், பாகிஸ்தான் தனது பயங்கரவாத அமைப்புகளின் மூலம் ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளுக்குக் கொரோனா நோய்க்கிருமியைப் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது” என அதிரடியாகக் குற்றம்சாட்டினார்.

பயங்கரவாதிகளுக்கு `கொரோனா'... பாகிஸ்தானின் சதித் திட்டம்! -ஜம்மு-காஷ்மீர் டிஜிபி அதிர்ச்சி

தொடர்ந்து, ``தரவுகளின்படி பார்க்கையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றுவரும் பலருக்கும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை ஜம்மு-காஷ்மீர் பகுதிக்குள் அனுப்பி, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் நோய்க்கிருமியைப் பரப்பிவிட வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், அதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் அளிக்கப்போவதில்லை” என்றார். நாடு முழுவதும் இந்தத் தகவல் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டி.ஜி.பி தில்பாக் சிங்
டி.ஜி.பி தில்பாக் சிங்
ANI

கடந்த சில தினங்களுக்கு முன்னர், துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹெண்ட்-அல் காஸ்மி, சவுரப் உபத்யாய் எனும் இந்திய தொழில் அதிபரின் மதவெறுப்பு ட்வீட்டைக் குறிப்பிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இங்கே மதவெறுப்புப் பிரசாரத்துக்கு இடமில்லை எனவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவான சில கருத்துகளால் இந்திய, ஐக்கிய அரபு அமீரகம் உறவில் விரிசல்கள் விழுந்ததாக சிலர் தகவல் பரப்பினர்.

மதவெறியுடன் செயல்படாதீர்கள்! - அமீரக இந்தியர்களுக்கு அறிவுரை கூறிய இந்தியத் தூதர்

``ஒற்றுமையும் சகோதரத்துவமுமே நமது நடத்தையாக இருக்க வேண்டும், கோவிட்-19 சாதி, இனம், நிறம் எனப் பாகுபாடு பார்த்து வருவதில்லை" எனப் பிரதமர் மோடி இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். மோடியின் கருத்தை தொடர்ந்து வெறுப்பை விதைக்கும் விதமாகப் பேசிய பலரும் தங்களின் ட்வீட்டை நீக்கினர். கடந்த இரு தினங்களாக இந்த விவகாரங்கள் பெரும் விவாதத்துக்குள்ளானது குறிப்பிடதக்கது.

அமீரகம், இந்திய தேசியக் கொடிகள்
அமீரகம், இந்திய தேசியக் கொடிகள்

இந்த நிலையில் இது தொடர்பாக அறிக்கைகள் சமர்ப்பிக்க இந்தியப் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது அந்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தியாவுக்கு எதாவது வகையில் தொல்லை தந்துகொண்டே இருக்க வேண்டும் எனத் தொடர்ந்து செயல்படும் பாகிஸ்தான் தற்போது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் சைபர். அதாவது பல்வேறு போலிச் சமூகவலைதளப் பக்கங்கள் மூலம் இந்தியாவுக்கு பிரதமர் மோடிக்கும் அமீரக நாடுகளில் அவப்பெயரை ஏற்படுத்த பாகிஸ்தான் முயல்வதாகவும் இதற்குப் பின்னால் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக பல புதிய கணக்குகள் தொடங்கப்பட்டதாகவும், சில பழைய கணக்குகள் தற்போது அரபு மொழியில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாங்கள் பாகிஸ்தானியர்கள் என்று காட்டிக்கொள்ளாமல், அரபு நாட்டவர்கள் போன்று வெறுப்பு கருத்துகள் தெரிவிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த இருநாள்களில் இந்தியா குறித்தும், இந்திய பிரதமர் மோடி குறித்தும் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆன நெகட்டிவ் ஹேஷ்டேக்-களுக்குப் பின்னால் ஐ.எஸ்.ஐ இருப்பதாக இந்திய உளவு அமைப்புகள் எண்ணுகிறது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

மேலும் ஓமன் நாடு இளவரசியின் பெயரில் வெளியான சில பதிவுகள் போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை இந்தியா தடுத்து நிறுத்தாவிட்டால், ஓமனில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் அந்தக் கணக்கு போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக இந்தக் கணக்கில் இருந்து இந்தியாவுக்கு எதிராகப் பல பதிவுகள் போடப்பட்டிருந்ததும், ஓமன் இளவரசியின் புகைப்படம் மற்றும் கணக்கின் பெயர் ஆகியவற்றை மாற்றும் போது, பழைய ட்வீட்கள் டெலீட் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் போலி கணக்கு விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்,ஐ அமைப்பு இருப்பதாக இந்தியா கருதுகிறது.

சில நிகழ்வுகள் பாகிஸ்தான் மீதான இந்தியக் குற்றச்சாட்டுகள் நியாமானதே என்று காட்டுவதாக இருக்கிறது. காரணம், பாகிஸ்தான் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இது முதல்முறை கிடையாது. ஜம்மு காஷ்மீரில் ஆர்ட்டிகிள் 370 நீக்கப்பட்டபிறகு, அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. வதந்திகளைத் தடுப்பதற்காக ஜம்மு காஷ்மீர் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டிருந்தது. அப்போது ஜம்மு காஷ்மீரில் இருக்கும் நாங்கள் சிரமப்படுவதாக சில பாகிஸ்தான் கணக்குகள் ட்வீட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் டெல்லிக் கலவரத்தின் போது இது போன்ற பதிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமூகவலைதளங்கள்
சமூகவலைதளங்கள்

பல்வேறு வழிகளில் இந்தியாவுக்குத் தொல்லைகள் தந்து வரும் பாகிஸ்தானின் தற்போதைய ஆயுதமாக சைபர் வார் பார்க்கப்படுகிறது. இதற்காகவும் தீவிரவாத அமைப்புகளுக்கு சமீபகாலமாக நிதி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறது இந்தியா.

அடுத்த கட்டுரைக்கு