Published:Updated:

`அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் கொலை' - பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கு தனிச் சட்டம் அவசியமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொல்லப்படும் பத்திரிகையாளர்கள்
கொல்லப்படும் பத்திரிகையாளர்கள் ( Vikatan Infographics )

பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கு தேசிய அளவிலான ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார் எம்.பி ராஜீவ் கவுடா.

நான் இன்னும் நம்புகிறேன், இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்பதே உங்கள் இலக்காக இருக்குமானால், பத்திரிகைத் துறைதான் அதற்கான உடனடியான மற்றும் குறுகிய கால ஆயுதமாக இருக்க முடியும்.
டாம் ஸ்டாப்பேர்டின் (ஆங்கில நாடகம் மற்றும் திரைக்கதையாசிரியர்)

வரலாற்றில், மனித சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளுக்கு சாட்சியாய் நின்று நீதி பெற்றுத் தந்த பெருமை பத்திரிகையாளர்களையே சாரும். பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி, இல்லை தவறு செய்தவர்களுக்கான தண்டனை என்பதாக மட்டுமல்லாமல் வரும் காலங்களில் அதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் மேன்மையான சமூகத்தைக் கட்டமைப்பதில் பத்திரிகையாளர்களின் பங்கு அளப்பரியது. அப்படிப்பட்ட பத்திரிகையாளர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் உலகெங்கிலும், குறிப்பாக உலகின் மிகப்பெரிய நாடு எனப் பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்தியாவிலும் அதிகரித்துக்கொண்டே வருவது ஜனநாயகத்தின் படுவீழ்ச்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. உலகளவில் 2006 - 2018 வரையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 1,109. அதில் 55 சதவிகிதக் கொலைகள் பதற்றமில்லாத இடங்களில், அதாவது பொறுமையாகத் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைகளாக இருக்கின்றன.

Journalist Killing
Journalist Killing
CPJ

பத்திரிகையாளர்கள் அதிகம் கொலை செய்யப்பட்ட நாடுகளில் முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கொலை மட்டுமல்ல, தாக்குவது, மிரட்டுவது, ஆபாசமாகத் திட்டுவது எனப் பல வகையான வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், இணைய வழியிலான அச்சுறுத்தல்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, மூன்றில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் இணைய வழியிலான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு எதிரான பத்திரிகையாளர்களுக்கு எதிரான பரப்புரைகள் தேர்தல் காலங்களில் இன்னும் அதிகமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இத்தகைய தாக்குதல்கள், எங்கோ வளர்ச்சியடையாத கல்வியறிவு பெற வாய்ப்பில்லாத மக்கள் வாழும் மாநிலங்களில் மட்டும் நிகழ்வதில்லை. கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா எனப் படித்த பொருளாதர ரீதியாக மேம்பட்ட மக்கள் வாழும் மாநிலங்களிலும் நடக்கின்றன. அரசியல் அராஜகவாதிகளாலும் சமூக விரோதிகளாலும்தான் பெரும்பாலும் இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Journalism
Journalism

கடந்த 3-ம் தேதி தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஒரு பத்திரிகையின் நிருபர் கார்த்திக் என்பவரை, ஆளும்கட்சியைச் சார்ந்த குண்டர்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். `ஆளும்கட்சியினருக்கு இதில் தொடர்பிருப்பதால் விசாரணையில் தலையீடு இருக்கும். எனவே, இவ்வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்' என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் எம்.பி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார்.

கடந்த சில ஆண்டுகளாகப் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. அதனால், அவர்களின் பாதுகாப்புக்கு தேசிய அளவிலான ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்
ராஜீவ் கவுடா, எம்.பி

மேற்கண்ட இந்தக் கோரிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார் கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ராஜீவ் கவுடா. அவரின் இந்தக் கோரிக்கையை நாடெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள் வரவேற்றுள்ளனர்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேவேளையில், ``பத்திரிகையாளர்கள் அனைத்து இடங்களுக்கும் எந்தவித தடையும் இல்லாமல் சென்று செய்தி சேகரிக்கும் உரிமையை மட்டும் அரசு உறுதி செய்தால்போதும், மற்றபடி பாதுகாப்புக்கென தனிச்சட்டம் எல்லாம் அவசியமல்ல‘’ என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குமரேசன்.

``எல்லை கடந்த பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கான நாடுகளின் பட்டியலில், கடந்த ஆண்டு உலகளவில் 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 140 வது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதிலிருந்தே இந்தியாவில் பத்திரிகைச் சுதந்திரத்துக்கான நிலை எப்படியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இதன் காரணமாகவே பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கென தனிச்சட்டம் வேண்டும் என்கிற கோரிக்கை எழுகிறது. பல பத்திரிகையாளர் சங்கங்கள் தொடர்ச்சியாக அந்தக் கோரிக்கையை முன்வைத்துவருகின்றன. தற்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ராஜீவ் கவுடா முன்வைத்துள்ளார்.

கொல்லப்படும் பத்திரிகையாளர்கள்
கொல்லப்படும் பத்திரிகையாளர்கள்
Vikatan Infographics

உலகில் வேறெந்த நாடுகளில் இது போன்ற பாதுகாப்புச் சட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், பத்திரிகையாளர்களை ஒடுக்குவதற்கான ஒடுக்குமுறைச் சட்டம் பல நாடுகளில் அமலில் இருக்கிறது. இந்தியாவில், மகாராஷ்டிராவில் பல வருடப் போராட்டத்துக்குப் பிறகு, ஒரு பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. என்னைப் பொறுத்தவரையில் நாட்டில், சக குடிமக்கள் பாதுகாப்புக்காக என்ன சட்டம் இருக்கிறதோ அது மட்டுமே போதுமானது. அவனுக்கு இல்லாத ஒரு ஏற்பாடு பத்திரிகையாளர் என்பதற்காக எனக்கு இருக்குமாயின் அது எனக்குத் தேவையில்லை என்பதே என் கருத்து, பத்திரிகையாளர்களுக்கென்று மட்டும் சிறப்புச் சட்டம் அவசியமா என்ற கேள்வி எழுகிறது. ஒரு குடிமகன் தாக்கப்பட்டால், வேறு வழியிலான வன்முறைக்கு ஆளானால் அவனுக்கு என்ன சட்ட பாதுகாப்பு இருக்கிறதோ, அது மட்டுமே போதுமானது என்பதே என் கருத்து.

குமரேசன்
குமரேசன்

வி.ஐ.பி-க்களின் சிறப்புப் பாதுகாப்புகள், அதற்காகும் செலவு ஆகியவை குறித்தெல்லாம் நாம்தான் கேள்வி எழுப்புகிறோம், விமர்சனம் செய்கிறோம். நமக்கே அப்படி ஒரு ஏற்பாட்டைக் கோருவது எப்படி சரியாக இருக்கும். அரசியலமைப்புச் சட்டம், தந்த அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்தை பேணும் சட்டப்பிரிவை சரியாக நடைமுறைப்படுத்தினாலே போதுமானது" என்கிறார் குமரேசன்.

பத்திரிகையாளர் பாதுகாப்புக்கென தனிச்சட்டம் கோருவது ஏதோவொரு வழியில், சுதந்திரமான பத்திரிகையாளர்களையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் அரசின் பிடியில் ஒப்படைப்பதாகிவிடும் என்கிற கவலையும்கூட எனக்கு இருக்கிறது.
குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

டார்கெட் இவர்கள்தான்! 

மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்:

``இப்போது, பல இடங்களில் அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் பத்திரிகையாளர்களை டார்க்கெட்டாக மாற்றிவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், அது நேரடியாகவோ, சமூக வலைதளங்களிலோ அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பலகாலமாக இந்தப் பிரச்னை இருந்து வந்தாலும் தற்போது அது தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, பெண் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. வெர்பல் அபியூஸில் இருந்து பல வகையான வன்முறைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அரசுக்கு எதிராகவோ இல்லை அவர்களின் தலைவர்களாக அது சினிமா, அரசியல், என எந்தத் துறையில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராகக் கருத்து சொன்னால், கேள்வி எழுப்பினால் அவ்வளவுதான்.

சமீபத்தில் கூட, படத்தைப் பற்றிக் கருத்துச் சொன்னதற்காக, பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரனை ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் ஆபாசமாக விமர்சித்து மிரட்டிய சம்பவம் நடந்தது. நடிகர் விஜய் கூட அதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார்.
ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர்

பத்திரிகையாளர்கள்தாம் நாம் செய்யும் தவறுகளை எல்லாம் வெளியில் சொல்கிறார்கள். அதனால் முதலில் அவர்களை அச்சுறுத்த வேண்டும், தாக்க வேண்டும் என நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் கோணத்தில் பத்திரிகையாளர்கள் செய்வது தவறாகத் தெரிகிறது. அதற்கு நேற்று கட்சி ஆரம்பித்த அரசியல்வாதிகளின் தொண்டர்கள் முதல் நடிகர்களின் ரசிகர்கள் வரை யாரும் விதிவிலக்கல்ல. இந்தச் சூழ்நிலையில்தான் மகாராஷ்டிராவில் இருப்பது போன்றது ஒரு சட்டம் அவசியமாகிறது. மிரட்டுவது, தாக்குவது என்பதைத் தாண்டி நோட்டீஸ் அனுப்புவதும் ஒருவகையான அச்சுறுத்தலாக இருக்கிறது. ஜெயலலிதா காலத்தில் அது அதிகமாக இருந்தது. தற்போதும் தொடர்ந்து வருகிறது.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

பொருளீட்டல் என்பதைத்தாண்டி சமூகத்தின் மீதான அக்கறை, பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றுக்காகத்தான் பத்திரிகையாளர் பணிக்கு பலர் வருகிறார்கள். ஆனால், இந்தப் பணிக்கு வருபவர்களைத் துரத்தும் வேலையில் பலர் இப்போது இறங்கிவிட்டார்கள். மற்றவர்களை விட பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் இந்தவேளையில் அவர்களின் பாதுகாப்புக்கென தனிச் சட்டம் கொண்டுவருவதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன்’’ என்கிறார் ராதாகிருஷ்ணன்.

அவர்களும் மனித உரிமைக் காப்பாளர்கள்தான்! 

மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி திபேனிடம் பேசினோம்:

``பத்திரிகையாளர்களும் ஒருவகையில் மனித உரிமைக் காப்பாளர்கள்தாம். அவர்கள் தங்களை அப்படி அறிவித்துக்கொள்ளாவிட்டாலும், ஐ.நா சபை அப்படித்தான் வரையறை செய்திருக்கிறது. அதேபோல, அவர்களைப் பாதுகாக்கவும், பல விதிகளை வகுத்திருக்கிறது. உலகளவில், பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்ட 10 வழக்குகளில் ஒன்பது வழக்குகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. யுனெஸ்கோ போன்ற பல அமைப்புகள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் அது வகுக்கப்பட்டது. பத்திரிகையாளர்களைத் தாக்குபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதைத் தவிர்க்கும், தாமதப்படுத்தும் அரசுகளின் மீது நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களிலும் களத்துக்குச் சென்று செய்தி சேகரிக்கும், பிராந்தியப் பத்திரிகையாளர்கள்தான் அதிகமாகத் தாக்கப்பட்டிருப்பதாக யுனெஸ்கோ வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையைப் பேச நினைக்கும் பத்திரிகையாளர்கள் கொடூரமாகத் தாக்கப்படும் நிலைதான் இந்தியாவிலும் நிலவி வருகிறது.

ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்

நம் நாட்டில், இரண்டு வருட கிடப்புக்குப் பிறகு, 2017-ம் ஆண்டு மகாராஷ்டிராவில், பத்திரிகையாளர்களின் உரிமை மீறல்களிலிருந்து அவர்களைப் பாதுக்காக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பத்திரிகையாளர் பாதிக்கப்பட்டு புகார் தந்தால், குறைந்தபட்சம் அதை எஸ்.பிதான் விசாரிக்க வேண்டும்; தவறு உறுதி செய்யப்பட்டால், 3 வருட தண்டனை அல்லது 50,000 அபராதம்; குற்றவாளிக்கு பிணை இல்லை என வரையறை செய்யப்பட்டது. அதேபோல சத்தீஸ்கரில், சென்ற ஆட்சியில் அதிகமான பத்திரிகையாளர்கள் பல மாதங்கள், பல ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார்கள். மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் உள்ள பகுதிகளின் உண்மை நிலையை எழுதியதற்காகவே அது நடந்தது. அதனால், அங்கே பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க, மாநில அளவிலான கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" என்றார் ஹென்றி திபேன்

`124ஏ' - தேசத்துரோக வழக்கு... உருவாக்கிய நாடே நீக்கி விட்டது... இந்தியாவுக்குத் தேவையா? #Sedition
எந்த அச்சுறுத்தல் வந்தாலும், துணிந்து எழுதக்கூடிய பல பத்திரிகையாளர்கள் நம் நாட்டில் உண்டு. அவர்களே விரும்பாவிட்டாலும், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்புச் சட்டங்கள் இருக்கின்றன. உதாரணமாக மருத்துவர்களுக்கு. அதுபோலத்தான் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் தேவையாக இருக்கிறது.
ஹென்றி திபேன், மனித உரிமைச் செயற்பாட்டாளர்
மனித உரிமையாளர்களைப் பழிவாங்கும் வெட்கக்கேடான 38 நாடுகளில் ஒரு நாடாக, பத்திரிகையாளர்களை அதிகம் கொலை செய்த நாடுகளின் பட்டியலில் 10 நாடுகளில் ஒரு நாடாக விளங்கும் இந்தியாவில் பத்திரியாளர்களைப் பாதுக்காக்க தனிச்சட்டம் தேவை என்றே தோன்றுகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு