Published:Updated:

`உ.பா சட்டத்தில் கர்ப்பிணிப் பெண் கைது!’ -ஜாமியா, ஜே.என்.யூ மாணவர்களைக் குறிவைக்கிறதா டெல்லி போலீஸ்?

சஃபூரா ஜர்கர்
சஃபூரா ஜர்கர்

கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி, மத்திய அரசு மாணவர்களைக் கைதுசெய்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. தலைநகர் டெல்லியில் ஷாகின் பாக் மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. கொரோனா நெருக்கடி தீவிரமடைந்ததால், போராட்டங்கள் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

ஜாமியா போராட்டம்
ஜாமியா போராட்டம்

இந்த நிலையில், தற்போது கொரோனா நெருக்கடியால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டெல்லி போலீஸ் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கைதுசெய்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற வன்முறையைத் தூண்டும் விதத்தில் செயல்பட்டார்கள் என ஜாமியா மிலியா மாணவர்களை உ.பா சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளது டெல்லி காவல்துறை. அவர்களுடன் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித் மீதும் உ.பா சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

``சட்டவிதிகள் தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டன!” - என்.ஐ.ஏ பிடியில் உள்ள கௌதம் நவ்லாகா யார்?

ஜாமியாவைச் சேர்ந்த ஆய்வு மாணவர் மீரான் ஹைதரை டெல்லி வன்முறை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, மீரான் ஹைதர் விசாரணக்கு ஆஜரானார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து சஃபூரா ஜர்கர் என்கிற ஆய்வு மாணவியும் உ.பா (UAPA) சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்குக் காரணமாக இருந்துள்ளனர் என இவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சஃபூரா ஜர்கர், மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் அவரைக் கைதுசெய்து திகார் சிறையில் அடைத்திருப்பது டெல்லி காவல்துறையின் பழிவாங்கும் நடவடிக்கை என ஜாமியா மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

இதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாமியா பல்கலைக்கழகத்தின் அலுமினி அசோசியேஷன் தலைவர் ஷியாஃபூர் ரஹ்மானையும் டெல்லி காவல்துறை உபா சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளது. ஜே.ஏன்.யூ-வைச் சேர்ந்த ஷர்ஜில் இமாம் தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் மீதும் உபா சட்டம் போடப்பட்டுள்ளது.

சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யவே, டெல்லி போலீஸ் மாணவர்களை கொரோனா நெருக்கடியிலும் குறிவைத்துப் பழிவாங்கிவருவதாக மாணவர்கள் தரப்பு குற்றம் சாட்டுகின்றனர். உரிய ஆதாரங்களின் அடிப்படையிலேயே செயல்பட்டுவருவதாக டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உ.பா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் கோரிக்கை வைத்துவருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு