Published:Updated:

India-China FaceOff:`இந்திய சந்தையில் ஆதிக்கம்!’ - சீன பொருள்களைப் புறக்கணிப்பது சாத்தியமா?

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் ( Pixabay )

``இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் முதல் ஐந்து ஸ்மார்ட்போன்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் சாம்சங் மொபைலைத் தவிர மீதமுள்ள அனைத்தும் சீன தயாரிப்பு மொபைல்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது”

இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்தியாவைச் சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சீனா இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல்களை வெளியிடவில்லை. ஏற்கெனவே, கொரோனா வைரஸ் சீனாவில் உருவானதாக கருதப்படுவதால் சீனாவின் மீது இந்தியர்கள் உட்பட பலருக்கும் அதிருப்தி நிலவி வந்தது.

இந்த நிலையில், தற்போது எல்லைப் பிரச்னைகள் தொடர்பான மோதலால் வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சீனாவின் மீது இருந்த அதிருப்தியை அதிகமாக்கியுள்ளது. இதனால், சீன தயாரிப்பு பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறி மக்கள் பலரும் மொபைல், டிவி உள்ளிட்டவற்றை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவ பொம்மை, சீனக் கொடி ஆகியவற்றை எரித்தும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

சீனாவுக்கு எதிரான எதிர்ப்புணர்வும் சீன தயாரிப்புப் பொருள்கள் மீதான வெறுப்பும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சில ஹேஷ்டேக்குகளின் கீழ் அதிகமாக பரவியது. சீனப் பொருள்களை அடித்து நொறுக்குவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், அன்றாட வாழ்க்கையில் சீனப் பொருள்களை முழுமையாக தவிர்த்துவிட்டு நம்மால் இயங்க முடியுமா என்ற கேள்வியும் குறிப்பாக, வாழ்வின் ஒரு பகுதியாக மாறியிருக்கும் ஸ்மார்ட்போன்களை எந்த அளவுக்கு நம்மால் தவிர்க்க முடியும் என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், தற்போது இந்திய மொபைல் சந்தையில் சீன தயாரிப்பு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதையும் உள்ளூர் தயாரிப்பு செல்போன்களின் நிலைமைக் குறித்தும் பார்க்கலாம்.

`இந்த உண்மையைப் புரிந்து கொண்டால்!’- ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்க சில 
 எளிய வழிகள் #MyVikatan

இன்றைய சூழலில் சீன தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள்தான் இந்திய மொபைல் சந்தையில் முதலிடத்தில் உள்ளது. மக்கள் அதிக அளவில் பயன்படுத்திவரும் மொபைல் பிராண்டுகளான ரியல்மி, ஷாவ்மி, விவோ உள்ளிட்ட பரவலாக அறியப்படும் பல ஸ்மார்போன்களும் சீன தயாரிப்பு மொபைல்கள்தான். இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் முதல் ஐந்து ஸ்மார்ட்போன்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் சாம்சங் மொபைலைத் தவிர மீதமுள்ள அனைத்தும் சீன தயாரிப்பு மொபைல்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங், கொரிய நிறுவனத்தைச் சேர்ந்தது. சீன தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவுக்குள் நுழைந்து தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது. அதற்கு முன்பு வரை இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்போன்களான மைக்ரோமேக்ஸ், லாவா, கார்பன் ஆகியவைக்கு மக்களிடையே ஓரளவு வரவேற்பு இருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

ஹெட்போன்
ஹெட்போன்
Pixabay

ஐடிசி-யானது(International Data Corporation) 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் பங்கை கைப்பற்றியிருக்கும் முதல் ஐந்து ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஷாவ்மி நிறுவனமானது 31.2% பங்கையும் விவோ நிறுவனம் 21% பங்கையும் சாம்சங் நிறுவனமானது 15.6 % பங்கையும் ரியல்மி நிறுவனமானது 13.1% பங்கையும் ஓப்போவானது 8.5 % பங்கையும் கொண்டுள்ளது. இதற்கு எதிர்நிலையில் நடந்த சில ஆய்வின் முடிவுகளும் ஏறக்குறைய இதே முடிவுகளையே காட்டுகிறது. எல்லைப் பிரச்னை தொடர்பாக புறக்கணிப்புகள் நிகழும்போது இந்த சதவிகிதங்கள் கவனத்துக்கு உரியவை இல்லைதான். எனினும், ஷாவ்மிமற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்கள் சில அறிக்கைகளை சமீபத்தில் வழங்கியுள்ளன. அதன்படி, வழக்கத்தைவிட அதிகமாக தற்போது இந்தியர்கள் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புவதாகவும் ஸ்மார்ட்போன்களின் தேவைகள் இந்தியாவில் அதிகரித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்
Pixabay

ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாது சார்ஜர், பவர்பேங், ஹெட்போன், இயர்போன், ஸ்மார்ட் டிவி, மடிக்கணினி, டாங்கிள் என நாம் பயன்படுத்தும் பல பொருள்களுக்கான சந்தையிலும் இந்தியாவில் சீன தயாரிப்புப் பொருள்களின் ஆதிக்கத்தையே அதிகம் காணமுடிகிறது. சீன நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் மில்லியன் கணக்கில் முதலீடுகளைச் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவற்றைப் பற்றிய விவாதங்கள் இன்னும் எழவில்லை என்றும் கூறுகின்றனர். அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படும் அனைத்துப் பொருள்களும் சீனாவின் தயாரிப்புகளாகவே இருக்கும்பட்சத்தில், அதை முழுமையாக புறக்கணிப்பது என்பது நடைமுறைக்கு சிக்கலாக இருப்பது மட்டுமல்லாமல் அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்றே துறைசார் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Credits : Hindustantimes

லாக்டௌனுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் விலைகள் ஏறுமா, இறங்குமா? #DoubtofCommonMan
அடுத்த கட்டுரைக்கு