Published:Updated:

`தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயல்பாடுகள் தீவிரம்!’ -அதிர்ச்சித் தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ்
ஐ.எஸ்.ஐ.எஸ் ( Representational Image )

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் 12 மாநிலங்களில் தீவிரமாகச் செயல்பட்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

சிரியாவை மையமாகக்கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம், உலக அளவில் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவருகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு பல்வேறு உலக நாடுகளும் தடைவிதித்துள்ளன. இதனால், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி அந்த இயக்கத்தினர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்திவருகின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர்
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர்

இந்தச்சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் இந்தியாவில் இருப்பது குறித்த கேள்வி மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்திருக்கும் உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, ``தென் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்தது தொடர்பான பல்வேறு சம்பங்கள் மத்திய, மாநில விசாரணை அமைப்புகளின் கவனத்துக்கு வந்திருக்கின்றன.

தெலங்கானா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பாக தேசியப் புலனாய்வு முகமை 17 வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது. மேலும், அது தொடர்பாக 122 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ்., ஐ.எஸ்.கே.பி., ஐ.எஸ்.ஐ.எஸ் -கே போன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான அனைத்துவிதமான அமைப்புகள் மற்றும் அதன் கருத்தியல் போன்றவற்றுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதோடு, அவை தீவிரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி
உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி
ANI

இணையதளம் வாயிலாகச் செயல்படும் பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் கருத்தியலை ஐ.எஸ்.ஐ.எஸ் மூளைச்சலவை செய்யப் பயன்படுத்திக்கொள்கிறது. இதனால், சமூக வலைதளங்களில் இது போன்ற செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

250 கிலோ எடை; ஐ.எஸ் அமைப்பின் `ஜம்போ'! சரக்கு லாரியில் கொண்டுசெல்லப்பட்ட தீவிரவாதி

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்குவங்கம், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டுவருவது தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு