Published:Updated:

`ஷிவ் விஹாருக்குத் திரும்ப எங்களுக்குத் தைரியமில்லை!’ -டெல்லி கலவரத்தால் கலங்கும் தம்பதி

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

குரு தேக் பகதூர் மருத்துவமனை பிணவறையின் முன்பு கணவனின் சடலத்தை வாங்குவதற்காகக் கைக்குழந்தையுடன் காத்திருந்தார் சுவிதா.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடந்த கலவரத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீதிகள், வீடுகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டுள்ன. பணி முடிந்து திரும்பிய மகன், பிள்ளைக்குப் பால் வாங்கச் சென்ற கணவன், வீதிகளில் என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்த்த சிறுவன் என உயிரிழந்தவர்களின் பட்டியல் நீள்கிறது.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

கணவனை இழந்து கைக்குழந்தையுடன் எதிர்காலமே கேள்விக்குறியாகி கலக்கத்துடன் நிற்கும் சுவிதா, டெல்லி கலவரத்தின் தாக்கத்தால் இனி வரும் நாள்களை எப்படி எதிர்கொள்வது என்ற பயத்துடன் கலங்கி நிற்கும் 70 வயது முதியவர் முகமது இஸ்லாம் என அதிர்ச்சிக் காட்சிகள் வரிசைகட்டி நிற்கின்றன.

`மதம் தெரியல; என்  பிள்ளைகளாகவே பார்த்தேன்!’ - டெல்லி வன்முறையில் மக்களைக் காத்த சீக்கியர்கள்

குரு தேக் பகதூர் மருத்துவமனையின் பிணவறையின் முன்பு கணவனின் சடலத்தை வாங்குவதற்காகக் கைக்குழந்தையுடன் காத்திருந்தார் சுவிதா. ரிக்‌ஷா தொழிலாளியான பிரேம் சிங்கின் மனைவிதான் இந்த சுவிதா. ``குழந்தைக்குப் பால் வாங்குவதற்காக வெளியில் சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவே இல்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து சொன்ன பிறகுதான் என் கணவர் இறந்ததே எனக்குத் தெரியும்” என உடைந்த குரலில் பேசுகிறார் சுவிதா.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஷிவ் விஹாரை சேர்ந்தவர் முகமது இஸ்லாம் (வயது 71). டெல்லியில் நடந்த கலவரத்தில் முஸ்தாபாத் மற்றும் ஷிப் விஹார் பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களின் வீடுகள் மற்றும் கடைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. ஷிவ் விஹாரில் வசித்து வந்த 1,500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அங்கிருந்து வெளியேறி இஸ்லாம் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். டெல்லி கலவரத்தில் முகமது இஸ்லாம் குடியிருந்த வீடு சூறையாடப்பட்டுள்ளது.

டெல்லி கலவரம் தொடர்பாகப் பேசிய இஸ்லாம் - ஃபாத்திமா தம்பதி, ``15 வருஷமா நாங்க இந்தப் பகுதியில் குடியிருக்கிறோம். கபீர் நகரில் இருந்த எங்களுடைய வீட்டை விற்றுவிட்டு 2003-ல் நாங்கள் இங்கே வந்தோம். இதுவரை இங்கே உள்ள யாருடனும் நாங்கள் சண்டை போட்டதில்லை. அனைவருடனும் ஓர் உறவினரைப் போலதான் பழகிவந்தோம். அந்த அன்பு, பாசத்தின் காரணமாகவே இங்குள்ளவர்கள் அதிகாலை 5 மணிக்கு எங்களை எழுப்பி, `இங்கு நிலைமை சரியில்லை, சென்றுவிடுங்கள்' என எச்சரித்தனர்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

நாங்கள் வசிக்கும் பகுதியில் பெரிதாக என்ன கலவரம் நடந்துவிடும் என்றுதான் நினைத்திருந்தோம். எங்கள் வீட்டுக்கு வந்திருந்த மகளை முதல்நாள் ஒரு எச்சரிக்கைக்காக அனுப்பி வைத்தோம். இங்குள்ள நிலைமையை எடுத்துக் கூறியவுடன் இரண்டு பைகளில் துணிகள் மற்றும் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்.

இப்போது இங்கே நடந்ததைப் பார்த்தால் திரும்பி வருவதற்கு மனமில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எங்களுக்கு உண்மையில் தைரியம் இல்லை. நாங்கள் இனி இங்கு வாழ விரும்பவில்லை. 15 வருஷமா இங்கே எங்களுக்கு வீடு என்ற ஒண்று இருந்தது. இனி அதுவும் இல்லை. இந்த வீட்டையும் விற்றுவிட்டு எங்கேயாவது போய்விடலாம் என்றுதான் இருக்கிறோம். எங்கள் மகன் எங்கே செல்ல விரும்புகிறானோ அங்கேயே அவனுடன் செல்லலாம் என முடிவெடுத்துவிட்டோம்” என்கிறார்கள் சோகமாக.

அடுத்த கட்டுரைக்கு