Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!
இஸ்ரோவின் 10-வது தலைவராக இரு தினங்களுக்கு முன்பு பதவியேற்றுள்ளார், விஞ்ஞானி எஸ்.சோமநாத்.
1985-ம் ஆண்டு முதன்முதலாக VSSC (Vikram Sarabhai Space Centre)-ல் இணைந்த இவர், பி.எஸ்.எல்.வி, GSLV MKIII உள்ளிட்ட இஸ்ரோவின் மிக முக்கியமான ராக்கெட் திட்டங்களில் பங்காற்றிய, ராக்கெட் விஞ்ஞானி. சந்திரயான், ககன்யான் எனக் கடந்த 4 ஆண்டுகளாகவே இஸ்ரோவுக்கு பரபரப்பான காலம். இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு இன்னும் கூடுதலான சவால்கள் காத்திருக்கின்றன சோமநாத்திற்கு.
என்னென்ன சவால்கள்?
ககன்யான்
2018-ம் ஆண்டு, சுதந்திர தின உரையின்போது, ``ககன்யான் திட்டம் மூலம் 2022-ல் இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும்!” என அறிவித்தார் பிரதமர் மோடி. அப்போதிருந்தே இஸ்ரோவின் `நம்பர் 1’ அசைன்மென்ட்டானது இந்த மிஷன்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் 2022-ம் ஆண்டுக்குள் இதை சாதிக்கவேண்டும் என்பதுதான் இஸ்ரோவுக்கு பிரதமர் கொடுத்த டார்கெட். 2019 வரை சுமுகமாக போய்க்கொண்டிருந்த இந்தப் பணிகள், பின்னர் கொரோனாவால் தொய்வடைய, தற்போது இந்த ஆண்டு இறுதி அல்லது 2023-ல் முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் 9,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்தியாவின் இந்த முதல் மனித விண்வெளி பரிசோதனையை வெற்றிகரமாக குறிப்பிட்ட கால அளவுக்குள் சாத்தியமாக்குவதும், அதை வெற்றிகரமாக வழிநடத்துவதும்தான் சோமநாத்தின் முதல் சவால்.
சந்திரயான் 3
சந்திரன் குறித்த இந்தியாவின் ஆராய்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்தவை சந்திரயான் மற்றும் சந்திரயான் 2 திட்டங்கள். இதில் சந்திரயான் 1, நிலவில் நீர் இருப்பதை முதன்முதலாக உறுதி செய்து, இந்தியாவுக்கு நல்லபெயர் வாங்கித் தந்தது.
ஆனால், நிலவில் ரோவரை இறக்கி ஆராய்ச்சி செய்யும் முயற்சியுடன் களமிறங்கிய சந்திரயான் 2, அந்த முயற்சியில் தோல்வியடைந்தது. அந்தக் குறையை, சந்திரயான் 3 மூலம் சரிசெய்யும் முயற்சியில் இருக்கிறது இஸ்ரோ.
ஏற்கெனவே நிகழ்ந்த தோல்வியால் உருவான அழுத்தம் மற்றும் அதிக எதிர்பார்ப்பு காரணமாக 2023-ல் தொடங்கும் இந்த மிஷன் சோமநாத்தின் இரண்டாவது சவால்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆதித்யா L1
ககன்யான் போலவே, இஸ்ரோ இதுவரை சாதித்திடாத இன்னொரு விஷயம், சூரியனை ஆராயும் சோலார் மிஷன்கள். சூரியனை நோக்கி விண்கலனை செலுத்துவது ஏன் கடினம் என்பதை நாசாவின் பார்க்கர் விண்கலன் குறித்த Explainer-லிலேயே பார்த்தோம் இல்லையா?
கிட்டத்தட்ட அதேபோல, சூரியனின் வளிமண்டலமான கொரோனாவை ஆராய இந்தியா தயார் செய்துவரும் விண்கலன்தான் ஆதித்யா L1. 2021-ல் நடக்கவேண்டிய இந்த மிஷனும் கொரோனா காரணமாக தற்போது இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கிறது.
இதற்கடுத்து இந்தியாவின் இன்னொரு மிகப்பெரிய திட்டம் 2030-ல் இந்தியாவுக்கென சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை விண்வெளியில் அமைப்பது.
இப்படி மிகக்குறைவான காலத்தில் அடுத்தடுத்து சவாலான மிஷன்கள், சோமநாத் முன் இருந்தாலும், இதைவிட இன்னொரு முக்கியமான பொறுப்பும் அவருக்கு இருக்கிறது.
என்ன அது?
இந்திய விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பையும், தனியார் முதலீட்டையும் அதிகப்படுத்துவது. இது எதற்காக?
சர்வதேச செய்திகளை படிப்பவர்களாக இருந்தால் Space X, Blue Origin போன்ற நிறுவனங்களின் பெயர்களை கவனிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். முதலாவது, டெஸ்லா CEO எலான் மஸ்க்குடையது; இரண்டாவது, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸூடையது. இதில் முதலாவதை மட்டும் வைத்து, இஸ்ரோவின் நோக்கத்தைப் புரிந்துகொள்வோம்.
செயற்கைக்கோள்கள் மூலம் சாட்டிலைட் இன்டர்நெட் சேவை, நாசாவின் விண்கலனை ஏவுவதற்கான ராக்கெட்டுகள், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலாப் பயணம் என ஒரு தனியார் நிறுவனமாக இருந்துகொண்டு விண்வெளித்துறையில் பல்வேறு விஷயங்களை சாதிக்கிறது Space X. ஆனால், இந்தியாவில் இப்படியொரு தனியார் நிறுவனம் சாதிப்பது கடினம்.
முதலாவது காரணம், சட்டசிக்கல்கள் / விதிமுறைகள். இரண்டாவது காரணம், விண்வெளியில் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களிடன் இருக்கும் தயக்கம். இந்நிலையில்தான், ``இனி இதெல்லாம் பிரச்னையில்லை; எங்களுடைய விண்வெளி ஏவுதளங்கள், தொழில்நுட்பங்கள், ஆலோசனைகள் என அனைத்தையும் கொண்டு உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்; நீங்கள் துணிந்து முதலீடு செய்யுங்கள்!” என 2020-ம் ஆண்டு முதல் தனியாருக்கு IN-SPACe, NSIL போன்ற அமைப்புகளையெல்லாம் உருவாக்கி அழைப்பு விடுத்தது மத்திய அரசு.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஏன் இவ்வளவு மெனக்கெட்டு தனியாரை அழைக்க வேண்டும்?
உலகளவில் விண்வெளித்துறை சார்ந்த சந்தை மதிப்பு $350 பில்லியன். இதில் இந்தியாவின் தற்போதைய பங்கு என்பது வெறும் 3%தான்.
இந்த சந்தையை, Space X போல (உதாரணம் மட்டுமே), பிற தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும், புதிய முயற்சிகளும் இன்றி விரிவுபடுத்துவது கடினம் என்பது இஸ்ரோவின் எண்ணம்.
இப்படி பிற வணிக வாய்ப்புகளை இஸ்ரோவிடமிருந்து, தனியார் நிறுவனங்களும் பகிர்ந்துகொண்டால்தான் இதற்கடுத்து விண்வெளி ஆராய்ச்சிகள் (R&D), விண்வெளி அறிவியல், அடுத்தகட்ட தொழில்நுட்பங்களில் மட்டும் இஸ்ரோ கவனம் செலுத்தமுடியும். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் அதுவே மிக முக்கியமும் கூட.
இப்படி, இதுவரை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்திவந்த இஸ்ரோவுக்கு, இந்திய விண்வெளிச்சந்தையையே மாற்றியமைக்கவேண்டிய பொறுப்பும் இப்போது வந்துசேர்ந்திருக்கிறது. 3 ஆண்டு பதவிக்காலத்திற்குப் பிறகு, சோமநாத்தின் பங்களிப்பு இவற்றையும் சேர்த்துதான் மதிப்பிடப்படும்; இதற்கு முன் இருந்தவர்களுக்கு இல்லாத சவால் இது!
Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!