Published:Updated:

குஜராத் விபத்து: ``25 பேர் செல்லவேண்டிய பாலத்தில் 500 பேர்!" - மாநகராட்சி அதிகாரி

குஜராத் விபத்து

வருமானத்தை கவனத்தில்கொண்டு பழுது பார்க்கப்பட்ட பாலத்துக்கு தகுதிச்சான்றுகூட வாங்காமல் பயன்பாட்டுக்குத் திறந்துவிட்டிருக்கின்றனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

குஜராத் விபத்து: ``25 பேர் செல்லவேண்டிய பாலத்தில் 500 பேர்!" - மாநகராட்சி அதிகாரி

வருமானத்தை கவனத்தில்கொண்டு பழுது பார்க்கப்பட்ட பாலத்துக்கு தகுதிச்சான்றுகூட வாங்காமல் பயன்பாட்டுக்குத் திறந்துவிட்டிருக்கின்றனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

Published:Updated:
குஜராத் விபத்து

குஜராத் மாநிலம், மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 140-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நேற்று மாலையில் இந்த விபத்து நடந்தது. மீட்புப்பணியில் இரவு முழுக்க முப்படைகள் மட்டுமல்லாமல் தேசியப் பேரிடர் மேலாண்மைப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரே நேரத்தில் 500-க்கும் அதிகமானோர் பூஜை செய்வதற்காகப் பாலத்தில் ஏறி நின்றபோது, பாலத்தின் மத்தியப் பகுதியில் பள்ளம் விழுந்து அறுந்து விழுந்தது. பாலம் எடை தாங்காமல் அறுந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலம் பழுதுபார்க்கப்பட்டு சில நாள்களே ஆன நிலையில் அறுந்து விழுந்தது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

இது குறித்து விபத்து நடந்ததை நேரில் பார்த்த ஒருவர், ``பாலத்தில் நின்றவர்கள் ஆர்வக்கோளாறில் பாலத்தின் கேபிளை பிடித்துக்கொண்டு ஆட ஆரம்பித்தனர். பாலத்தில் மக்கள் நெரிசல் மிகுதியாகக் காணப்பட்டது. சிலர் பாலத்தைப் பிடித்து வேண்டுமென்றே ஆட்ட ஆரம்பித்தனர். அதையடுத்துத்தான் பாலம் அறுந்து விழுந்தது" எனக் கூறினர். பாலம் அறுந்து விழுந்த பிறகு ஆற்றில் விழுந்தவர்கள் அறுந்து விழுந்த பாலத்தை பிடித்துக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்.

பாலம்
பாலம்

பாலத்தைப் பிடித்து ஆட்டுவதும், பாலத்தின் கேபிளை பிடித்துக்கொண்டு ஆடுவதும் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. பாலம் அறுந்து விழுந்ததற்கு பொதுமக்கள்தான் காரணம் என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்த முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன. பாலத்தைப் பழுதுபார்த்த கம்பெனியின் நிர்வாகிகள்மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி பாலம் அறுந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார். இன்று குஜராத்தில் இருந்தபோதும் அவர் நாளையே அங்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். பாலத்தின் இடிபாடுகளிலிருந்து உயிர் தப்பிய கோஸ்வாமி என்பவர், ``நானும் என் குடும்பத்தினரும் பாலத்தில் சென்றபோது பாலம் ஆட்டம் கண்டது. சிலர் வேண்டுமென்றே பாலத்தைப் பிடித்து ஆட்டினர். இதனால் நான் என் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கரைக்கு வந்துவிட்டேன். பாலம் ஆபத்தான நிலையில் ஆடுவதாக அதிகாரிகளிடம் சொன்னபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை" என்றார்.

மோர்பி பாலம் எவ்வாறு அறுந்து விழுந்தது என்பது குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு மோர்பிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறது. வெறும் ரூ.2 கோடியை மட்டும் பெற்றுக்கொண்டு 100 சதவிகிதப் பணிகளை முடித்திருப்பதாக பாலத்தைப் பழுதுபார்த்த தனியார் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அந்த நிறுவனம் மோர்பி மாநகராட்சியுடன் கடந்த மார்ச் மாதம்தான் ஒப்பந்தம் செய்துகொண்டது. 8 முதல் 12 மாதங்களில் பாலத்தைப் பழுதுபார்க்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முதல்வர் புபேந்தர் வருகை
முதல்வர் புபேந்தர் வருகை

ஆனால் தனியார் நிறுவனம் வெறும் ஐந்து மாதங்களில் பாலத்தைப் பழுதுபார்த்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிட்டது. பாலத்தைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. வருமானத்தை கவனத்தில் கொண்டு பழுதுபார்க்கப்பட்ட பாலத்துக்கு தகுதிச்சான்றுகூட வாங்காமல் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டிருக்கின்றனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன. தற்போது பாலத்தைப் புதுப்பித்த கம்பெனிதான் 2008-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு வரை பாலத்தை பராமரித்துவந்தது. இடையில் நான்கு ஆண்டுகள் யாருக்கும் ஒப்பந்தம் கொடுக்கப்படவில்லை. இந்த ஆண்டு மீண்டும் அதே நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மோர்பி மாநகராட்சி அதிகாரி சந்தீப் சிங், ``பாலத்தில் ஒரே நேரத்தில் 25 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால் தனியார் நிறுவனத்தின் பொறுப்பற்ற செயலால் ஒரே நேரத்தில் 500 பேர் வரை பாலத்தின் மீது நடந்து சென்றிருக்கின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.