Published:Updated:

`விடுதலை, ஒரு கொடூரமான நகைச்சுவை’ - 23 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த முகமது அலியின் வலி

ராம் பிரசாத்

முகமது அலிக்கு தற்போது 48 வயது. செய்யாத குற்றத்திற்காக 23 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து, தற்போது விடுதலை ஆகியுள்ளார்.

விடுதலை
விடுதலை

`மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன்.விடுதலை என்ற வார்த்தையைக் கேட்டபோது, அது ஒரு நகைச்சுவை என்றே நினைத்தேன்.இந்த சிறைக்கம்பிகளுக்கு இடையேதான் என் உயிர் என்னை விட்டுப் பிரியும் என நினைத்திருந்தேன். இருண்ட உலகத்தில் இருந்தவனுக்கு தற்போது வெளிச்சம் கிடைத்துள்ளது' - 23 வருட சிறைவாசம், செய்யாத குற்றத்திற்காக சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தனது இளமையையும் மகிழ்ச்சியையும் தொலைத்த முகமது அலியின் வலி மிகுந்த வார்த்தை இது.

`விடுதலை, ஒரு கொடூரமான நகைச்சுவை’ - 23 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த முகமது அலியின் வலி

1996-ல், ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு முதல் நாள், டெல்லியில் ஒரு குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இரண்டு வழக்கிலும் முகமது அலிக்குத் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

23 வருடங்களுக்குப் பிறகு, முகமது அலி குற்றவாளி இல்லை எனக் கூறி, கடந்த திங்கள்கிழமை இவரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுவித்தது. விடுதலையாகி வந்ததும் அவரது தாய், தந்தை சமாதியில் அழுந்து புலம்பினார்.அவரை தேற்றுவதற்கு அவரது உறவினர்களிடம் வார்த்தைகள் இல்லை.

முகமது அலி
முகமது அலி

ஆங்கிலச் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள முகமது அலி, ``1996-ல் காஷ்மீரில் ஒரு மதிய வேளையில் எங்கிருந்தோ வந்த ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்துகொண்டது. கைகளில் துப்பாக்கியுடன் இருந்த அந்த நபர்கள், வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றனர். பின்னர்தான், அவர்கள் டெல்லியைச் சேர்ந்த சிறப்பு போலீஸார் என்பது தெரிந்தது. என்னுடன் சேர்ந்து மேலும் இரண்டு சிறுவர்களையும் போலீஸார் அடைத்து வைத்தனர். டெல்லியில் சட்டவிரோதமாக நாங்கள் 9 நாள்கள் அடைக்கப்பட்டிருந்தோம். அங்கு போலீஸாரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானேன். குண்டுவெடிப்பு தொடர்பாகத் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். எங்களுக்கு எதுவும் தெரியாது; நாங்கள் என்ன கூற முடியும்? வெள்ளைக் காகிதங்களில் எங்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.

நான் நிரபராதி. ஆனால், டெல்லி காவல்துறையினர் என்னை குற்றவாளியாகச் சித்திரித்தனர். வெள்ளைக் காகிததில் மிரட்டி கையெழுத்து வாங்கினர். செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்ளச் செய்தனர். திஹார், ஜெய்ப்பூர் என சிறைகளை மாறிக்கொண்டே இருந்தனர். நிறைய சிறைகளை பார்த்துவிட்டேன். எனக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். நான் விடுதலையாவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்தத் தீர்ப்பு, ஒரு நகைச்சுவை போன்றுதான் இருந்தது. எனது அப்பா இறப்பதற்கு முன்பு அனைவரிடமும் `எனது மகன் நிரபராதி' என்று கூறிக்கொண்டே இருந்தார்.

`விடுதலை, ஒரு கொடூரமான நகைச்சுவை’ - 23 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த முகமது அலியின் வலி

23 வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு விடுதலையாகி வெளியே வருவதெல்லாம், ஒரு கொடூரமான நகைச்சுவை'' என்றார். இதற்கெல்லாம் யார் காரணம் என்ற கேள்வியை நம்மிடம் விட்டுவிட்டு அமைதியாகியிருக்கிறார் முகமது அலி.