Published:Updated:

`இனி கோளாறு ஏற்பட சாத்தியமே இல்லை!' - சந்திராயன்- 2 குறித்து சிவன் நம்பிக்கை

மலையரசு

சென்னை விமான நிலையத்தில் இன்று, இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

`சந்திராயன் - 2’ உலகமே உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் விண்கலம். நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வுசெய்ய இந்திய விஞ்ஞானிகள் இந்த விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை எந்த நாடும் நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பியதில்லை என்பதால், மற்ற நாடுகளின் கவனம் சந்திராயன் -2 மீது உள்ளது. 2008-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதை முதன்முதலாக உறுதிசெய்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு, சந்திராயன் 2 திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கியது அன்றைய காங்கிரஸ் அரசு.

சந்திரயான் 2-வின் லேண்டர் மற்றும் ரோவர்
சந்திரயான் 2-வின் லேண்டர் மற்றும் ரோவர்
ISRO / Twitter

அன்று முதல், கடந்த 10 ஆண்டுகளாக சந்திராயன் 2 விண்கலனைத் தயாரிப்பதற்கும், அதை விண்ணில் செலுத்துவதற்கும் பல்வேறு சவால்களைக் கடந்து இயங்கிக்கொண்டிருந்தது இஸ்ரோ. ஜூலை 15-ம் தேதி, ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து GSLV MK III ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாராக இருந்த சந்திராயன் 2 விண்கலம், கவுண்டவுன் முடிய 56 நிமிடங்கள் இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

தற்போது அந்தக்கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில், நாளை `சந்திராயன்-2’ விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் இன்று, இஸ்ரோ தலைவர் சிவன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ``சந்திராயன்-2, நாளை மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று மாலை 6.43 மணிக்கு தொடங்குகிறது. தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

சிவன்
சிவன்

இனிமேல் தொழில்நுட்பக் கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை. சந்திராயன்-1 நீர் மூலக்கூறு இருப்பதைக் கண்டறிந்தது போல் சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்துவருகின்றன. சந்திராயன்-2 விண்கலம், நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்" `என்று கூறினார்.