Published:Updated:

உ.பி:`இத்தனை வழக்குகள் இருந்தும் ஜாமீன்!’ - தூபே வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி

விகாஸ் தூபே
விகாஸ் தூபே

``விகாஸ் தூபேவின் மீது பல்வேறு வழக்குகள் இருந்தபோதும் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இறுதியில் அவர் காவலர்களைச் சுட்டும் கொன்றுள்ளார்.”

உத்தரப் பிரதேசத்தில் ரவுடி விகாஸ் தூபே காவலர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த ரவுடி விகாஸ் தூபேவைக் காவலர்கள் இரவு பகலாகத் தேடி வந்தனர். எனினும், காவலர்களால் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனக் காவலர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, ரவுடி விகாஸ் தூபே மத்தியப் பிரதேசத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. காவல்துறையினர் தூபேவைக் கைதும் செய்தனர். மத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு அழைத்து வரும் வழியில் தப்பிக்க முயன்றதாக விகாஸ் தூபேவை என்கவுன்டரில் காவலர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் மீது தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

விகாஸ் தூபே கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் விகாஸ் தூபே தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுவதால் விசாரணைக் குழுவை மறுசீரமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியையும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியையும் இந்த விசாரணைக்குழுவில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் மாநில அரசிடம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இந்த வழக்கு தொடர்பாகப் பேசுகையில், ``விகாஸ் தூபேவின் மீது பல்வேறு வழக்குகள் இருந்தபோதும் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இறுதியில் அவர் காவலர்களைச் சுட்டும் கொன்றுள்ளார். அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சம்பவம் அமைப்பின் தோல்வியைக் காட்டுகிறது. முழு அமைப்பும் ஆபத்தில் உள்ளது. ஜாமீன் உத்தரவு உட்பட இந்த வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உ.பி: `சாலை விபத்து ; தப்ப முயற்சி’ - ரவுடி விகாஸ் தூபே என்கவுன்டரில் சுட்டுக் கொலை

நீதிமன்றத்துக்குப் பதிலளிக்கும் பொருட்டு உத்தரப் பிரதேச அரசானது, ``விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஆகியோர் அடங்குவர்” எனத் தெரிவித்தது. தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி பாப்டே, ``ஒரு மாநிலமாக சட்டத்தின் ஆட்சியை நீங்கள் நிலைநிறுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சிக்கு கைதும் விசாரணையும் தண்டனையும் அவசியம். குற்றவாளி காவல்துறையின் அதிகாரத்துக்கு சவால் விட்டதாக கூறுகிறீர்கள். இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மாநிலத்துக்கு எனச் சட்டம் உள்ளது” என்றும் கூறினார்.

விகாஸ் துபே
விகாஸ் துபே

ஜூலை 10-ம் தேதி அன்று விகாஸ் தூபே கொல்லப்பட்டார். இந்த என்கவுன்டர் போலியானது எனப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், உத்தரப் பிரதேச அரசானது இதை மறுத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் என்கவுன்டர்கள் அதிகரித்து வருவது தொடர்பாக பி.யூ.சி.எல் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதையும் கவனிக்க வேண்டும் என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விகாஸ் தூபே கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளையும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வைத்து வருகின்றனர். இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளுக்கு விடைகள் கிடைக்காமலும் அதிகாரிகள் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

உ.பி: மாதம் ரூ.1 கோடி; எளிய வாழ்க்கை; டீடோட்டலர்! - தூபே வழக்கில் குழம்பும் அதிகாரிகள்?
அடுத்த கட்டுரைக்கு