Published:Updated:

`கேரளத்தின் அன்பை மறக்க முடியாது!’ - கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலி முதியவர் நெகிழ்ச்சி

கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலியைச் சேர்ந்த ரோபட்டோ டொணோஸோ
கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலியைச் சேர்ந்த ரோபட்டோ டொணோஸோ

`கொரோனா தொற்று பிரச்னை முடிவுக்கு வந்ததும் அடுத்த ஆண்டு மீண்டும் கேரளா வருவேன். இந்தச் சமயத்தில் கேரளத்தைவிட பாதுகாப்பான இடம் வேறு இல்லை.'

கேரள மாநிலத்தில் புதிதாகக் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை தினமும் ஒற்றை இலக்கத்தில் உள்ளது. அதே சமயம் கொரோனா குணமாகி டிச்சார்ஜ் ஆகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இன்று 6 பேருக்கு புதிதாகக் கொரோனா பாதித்துள்ளது. 21 பேர் கொரோனா குணமடைந்துள்ளனர். இதுவரை 291 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இப்போது 114 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 8 பேர் வெளிநாட்டினர். எட்டுப் பேரும் குணமடைந்த நிலையில் இத்தாலியைச் சேர்ந்த ரோபட்டோ டொணோஸோ (57) என்பவர் இன்று டிச்சார்ஜ் ஆகி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். இன்று திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) இத்தாலிக்குப் புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் செய்யப்பட்ட ரோபட்டோ டொணோஸோ
மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் செய்யப்பட்ட ரோபட்டோ டொணோஸோ

கேரள மாநிலத்தின் வர்க்கலையில் இருந்த ரோபர்ட்டோ டொணோஸோவுக்கு கொரோனா இருப்பது கடந்த மார்ச் 13-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு இத்தாலிய மொழி மட்டுமே தெரியும் என்பதால், அவர் எங்கெல்லாம் சென்றார் என்ற ரூட் மேப் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், இத்தாலி மொழி தெரிந்தவர் மூலம் அவரிடம் பேசியபோது 126-க்கும் அதிகமானோரோடு இவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. ரோபட்டோ டொணோஸோவுக்கு வேறு சில நோய்களும் இருந்ததால் உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இவர் மார்ச் 25-ம் தேதியே கொரோனாவில் இருந்து மீண்டார். அதன்பிறகு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்தார். இவரை ஹோட்டலில் தங்க வைத்தால் அவர் வெளியில் நடமாட வாய்ப்பு உண்டு என்பதால் நெடுமங்காடு மருத்துவமனையில் பிரத்யேக அறையில் தங்க வைக்கப்பட்டார். சிகிச்சையில் குணமடைந்த நிலையில், இதைத் தொடர்ந்து அவர் இன்று டிச்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவரிடம் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் வீடியோ காலில் பேசினார். ரோபட்டோ டொணோஸோ வீடியோ காலில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சரிடம் பேசுகையில், ``கேரள மருத்துவத்துறைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவுக்கு பலமுறை வந்திருக்கிறேன். ஆனால், கேரளத்தை மிகவும் நேசிக்கிறேன். இந்தமுறை துரதிர்ஷ்டவசமாகக் கொரோனா பாதித்தது. ஆனாலும், எனக்கும் மிகச் சிறந்த சிகிச்சை அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. டாக்டர்களும் நர்சுகளும் மிகச்சிறப்பாகக் கவனித்துக் கொண்டனர். நல்ல உணவு வழங்கினர்கள். கேரளத்தின் அன்பை மறக்க முடியாது. கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் அடுத்த ஆண்டு மீண்டும் கேரளா வருவேன். இந்தச் சமயத்தில் கேரளத்தைவிட பாதுகாப்பான இடம் வேறு இல்லை. இங்குள்ள அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

ரோபட்டோ டொணோஸோ-வை வழியனுப்பிவைத்த அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
ரோபட்டோ டொணோஸோ-வை வழியனுப்பிவைத்த அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

ரோபட்டோ டொணோஸோவை சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அவரை வழியனுப்பி வைத்தார். இது குறித்து கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ``கேரளத்தின் இயற்கையை ரசிக்க வந்த சமயத்தில் ரோபட்டோ டொணோஸோவுக்கு கொரோனா பாதித்தது. இங்கு அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டதாகவும், இது அவருக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் கூறினார். சிகிச்சை முடிந்து தனிமைப்படுத்தப்பட்ட சமயத்தில் ஒவ்வொரு நாளும் சிறந்த அனுபவமாக இருந்ததாகவும். எல்லாம் மாயமாக உள்ளது, மீண்டும் நான் கேரளத்துக்கு வருவேன் எனவும் அவர் கூறினார்" என்றார்.

துபாயிலிருந்து திரும்பிய 29வது நாளில் இளைஞருக்குக் கொரோனா பாசிட்டிவ்! - அதிர்ச்சியில் கேரளா

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் கூறுகையில்,``கொரோனாவில் இருந்து எல்லோரும் குணமாகிப் போவதைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிகப்பெரிய நடவடிக்கைகளை மருத்துவத் துறையினர் செய்துவருகின்றனர். கொரோனா பாதித்த வெளிநாட்டைச் சேர்ந்த 8 பேரையும் கேரளம் குணப்படுத்தியுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு