Published:Updated:

`இது வைரஸைவிடப் பெரிய பிரச்னை..’ - மத்திய அரசை எச்சரித்த உச்ச நீதிமன்றம் #corona

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

இது ஊரடங்கு மற்றும் வைரஸின் சமூக விலகலுக்குப் பெரும் சவாலாக இருந்தது.

கொரோனா வைரஸ் அச்சத்தால் மொத்த உலகமும் நடுங்கிக்கொண்டிருக்கிறது. இந்தநேரத்தில் இதே வைரஸை முன்வைத்து இந்தியாவில் பல பிரச்னைகள், சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் மிகப்பெரும் பிரச்னையாக இருப்பது தொழிலாளர்களின் இடப் பெயர்வு. இதைச் சற்றும் எதிர்பார்க்காத மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்களுக்குத் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அப்படி உத்தரபிரதேசம், பீகார் போன்ற சில மாநிலங்களில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் டெல்லியில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

கொரோனாவால் திடீர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்துப் போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன. இதனால் வாழ்வாதாரம் மற்றும் அடுத்த வேளை உணவு இல்லாமல் தவித்த தொழிலாளர்கள், பல நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் தங்களின் சொந்த கிராமங்களுக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தனர்.

சென்னையில் 9 இடங்கள்.. கொரோனா கண்காணிப்பு வளையத்தில் 1½ லட்சம் வீடுகள்!

டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பம் குழந்தைகளுடன் நடந்து சென்றனர். இது ஊரடங்கு மற்றும் வைரஸின் சமூக விலகலுக்குப் பெரும் சவாலாக இருந்தது. இப்படி இடம்பெயரும் தொழிலாளர்கள் உணவும் குடிநீரும் இல்லாமல் நெடும் பயணம் மேற்கொண்டனர். இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவை ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதையடுத்து இந்தத் தொழிலாளர்கள் தங்களின் ஊர்களுக்குச் செல்ல பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டது. இருந்தும் நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இதுதொடர்பாக அலோக் ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி பாப்டே அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், `இது கொரோனா வைரஸை விடப் பெரிய பிரச்னை' என மத்திய அரசை எச்சரித்த அவர்கள், `தொழிலாளர்கள் இடப்பெயர்வு தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.

`ஊரடங்கு நெருக்கடி நிலையினால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானவர்கள் ஏழை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான். இந்தியாவின் பல்வேறு பெரிய நகரங்களில் ரிக்‌ஷா இழுப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள், வீட்டுப் பணிப்பெண்கள் போன்றவர்கள் தங்கள் குடும்பம் குழந்தையுடன் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து செல்கின்றனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர்கூட இல்லை. கொரோனா அச்சத்தைவிட அவர்களுக்குப் பசியின் கொடுமை அதிகமாக உள்ளது’ என மனுவைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் வேதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு