Published:Updated:

`வலிகளைத் தாங்கிய வலிமையான பேரன்பு!’-1,200 கி.மீ சைக்கிள் மிதித்த ஜோதியைப் பாராட்டிய இவான்கா ட்ரம்ப்

இவான்கா ட்ரம்ப்
இவான்கா ட்ரம்ப்

ஊரடங்கு அமல்படுத்திய நேரத்தில் அவருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது, இதனால் தந்தையை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, இதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.

இந்த ஊரடங்கு காரணமாக புலம்பெயர் கூலித் தொழிலாளர்கள் வருமானம் ஏதுமின்றி உணவுமின்றி கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் அவர் அவர் சொந்த ஊருக்குச் செல்ல வழியின்றி நடந்தே புறப்பட்டு, பயணத்தின்போது போதுமான உணவின்றி தவித்து இறந்து போன நிகழ்வுகளையும் கேட்டு வந்தோம். இப்பொழுது நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது, மேலும், புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது, இருப்பினும் பல நூறு கிலோமீட்டர்கள் வரை தொழிலாளர்கள் நடந்தும் சைக்கிளில் பயணித்தும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.

ஜோதி குமாரி
ஜோதி குமாரி

இதுபோல் காயம்பட்ட தன் தந்தையை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஹரியானா மாநிலம் குருகிராமிலிருந்து பீகாரில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு 1,200 கிலோமீட்டர் பயணம் செய்து திரும்பியுள்ளார் 15 வயது சிறுமி ஜோதி குமாரி. ஜோதி குமாரியின் தந்தை மோகன் பஸ்வான் ஹரியானா குருகிராமில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். ஊரடங்கு காரணத்தினால் ஆட்டோ ஓட்ட இயலாமல் வறுமையில் உணவுக்கே வழியின்றி வாடியுள்ளார், மேலும், ஊரடங்கு அமல்படுத்திய நேரத்தில் அவருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது, இதனால் தந்தையை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்த ஜோதி குமாரி, சைக்கிளிலேயே தந்தையை சொந்த ஊர் கொண்டு சேர்த்துள்ளார். கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் அவருக்கு பாராட்டு மழை பொழிந்தது.

மேலும், ஜோதி குமாரியின் சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அறிந்த தேசிய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், ஊரடங்கு முடிந்தவுடன் டெல்லியில் பயிற்சிபெற அழைத்துள்ளார்.

சிறுமி ஜோதி குமாரி
சிறுமி ஜோதி குமாரி
BBC Hindi

ஜோதி குமாரியின் இச்செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகளும் அவருடைய முதன்மை ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப் ஜோதி குமாரியை பாராட்டியிருக்கிறார்.

`1,200 கி.மீ; 7 நாள் சைக்கிள் பயணம்!’ - காயம்பட்ட தந்தையை சொந்த ஊரில் கொண்டுசேர்த்த 15 வயதுச் சிறுமி

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``15 வயது ஜோதி குமாரி, தன் காயமடைந்த தந்தையை தனது சைக்கிளின் பின்புறத்தில் வைத்து, 7 நாள்களில் 1,200 கி.மீ தூரம் பயணம் செய்து தங்கள் சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்று உள்ளார். வலிகளைத் தாங்கிய, வலிமையான இந்தப் பேரன்பு இந்திய மக்களையும் சைக்கிள் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது" என்று பாராட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு