Published:Updated:

`ஜெகன் ஒரு சைக்கோபோல நடந்துகொள்கிறார்!’ - ஆந்திர முதல்வரை விளாசிய சந்திரபாபு நாயுடு

ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக சந்திரபாபு நாயுடு கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு ( Twitter/@ncbn )

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் எதிர்க்கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே அரசியல் போர் உச்சத்தை எட்டியுள்ளது. சென்ற ஆட்சியில் நடந்த தவறுகளை ஜெகன் தோலுரிப்பதும் தற்போது நடக்கும் ஆட்சி பற்றி சந்திரபாபு விமர்சிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி
Twitter/@YSRCPDMO

இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைப் பற்றி சரமாரியாக விமர்சித்துப் பேசியுள்ளார் சந்திரபாபு நாயுடு. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்முறையாக விசாகப்பட்டினம் சென்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. அங்கு ஏ.என்.ஐ ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசு, மக்கள் விரோத சட்டங்கள் நிறைவேற்றி வருகிறது. பிற கட்சித் தலைவர்கள் மீது தேவையில்லாமல் பொய் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

உடையும் கட்சி... உலுக்கும் ஜெகன்... தப்பிப்பாரா சந்திரபாபு நாயுடு?

யார் என்னிடம் நல்ல முறையில் பேசினாலும், நானும் அவர்களிடம் நன்றாகவே பேசுவேன். ஆனால், ஜெகன் ரெட்டி ஒரு சைக்கோபோல நடந்துகொள்கிறார். அவர் தலைமையிலான ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘ஜெ’ (ஜெகன்) என்ற வரியை வசூலித்துவருகின்றனர். நான் பல முதல்வர்களைப் பார்த்துள்ளேன், ஆனால், ஜெகனை போன்ற ஒரு மோசமான முதல்வரைப் பார்த்தது இல்லை. அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். அரசியல் கட்சித் தலைவர்களைக் குறிவைக்கும் இந்த ஆட்சியின் நடைமுறை சரியில்லை” என ஆவேசமாகப் பேசியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

Chandrababu Naidu
Chandrababu Naidu
Twitter/@ncbn

ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவுக்குச் சொந்தமான கட்டடத்தை இடித்தது, அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகளைக் குறைத்தது, எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது எனப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.