Published:Updated:

`மாணவர்களுக்கு எந்த இடைக்கால நிவாரணமும் கிடையாது!’ - டெல்லி நீதிமன்றத்தில் கொந்தளித்த வழக்கறிஞர்

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

ஜாமியா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசு, டெல்லி மாநில அரசு, காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ரிஸ்வான் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த வன்முறையைக் கண்டித்து ஜமா மஸ்ஜித் இமாம் மற்றும் ஓக்லா பகுதியைச் சேர்ந்த இருவர் இணைந்து, மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். வழக்கறிஞர் ரிஸ்வான் தாக்கல் செய்துள்ள மனுவில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களும் பொதுமக்களும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள்
ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள்

இந்தச் சம்பவத்தில் முன்னாள் நீதிபதிகள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யக் கூடாது. ஏற்கெனவே வழக்கு பதிவுசெய்திருந்தால் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டது. அதேபோல் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மாணவர்கள் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவசிகிச்சை, இழப்பீடு கோரி சுமார் 6 மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழக்கறிஞர் ரிஸ்வான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி டி.என்.படேல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த டி.என்.படேல் அமர்வு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது நடவடிக்கையிலிருந்து விலக்கு உள்ளிட்ட எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க மறுத்துவிட்டது. இந்த வழக்கை 2020, பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மனுதாரர் தரப்பில் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். நீதிபதிகள் தீர்ப்பை வாசிக்கும்போது அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்களும் மனுதாரர்களும் நீதிமன்றத்துக்கு உள்ளேயே அவமானம்.. அவமானம் எனக் கோஷங்களை எழுப்பினர்.

டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

மேலும், ஜாமியா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசு, டெல்லி மாநில அரசு, காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜமா மஸ்ஜித் இமாம் பேசுகையில், ``அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டனர். தவறு செய்த காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் உண்மைக்கு எதிரான ஆதாரங்களை திரட்டவும் இட்டுக்கட்டவும் நேரம் கிடைக்காது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு