Published:Updated:

`டெல்லி போலீஸ்; மாணவர்கள் போராட்டம்!' - முடக்கப்பட்ட ஜே.எம்.இ பல்கலை இணையதளம் #CAA

ஹேக் செய்யப்பட்ட இணையதளம்
ஹேக் செய்யப்பட்ட இணையதளம்

டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலை வளாகத்துக்கு வெளியே போராட்டம் நடத்திவருகின்றனர். மந்தி ஹவுஸ் மற்றும் ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்திலும் மாணவர்கள் இணைந்து போராடினர்.

ஜாமியா மாணவர் போராட்டம்
ஜாமியா மாணவர் போராட்டம்

இந்த நிலையில், ஜாமியா பல்கலைக்கழகத்தின் இணையதளம் நேற்று மாலை ஹேக் செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. `ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாக டார்க் நைட்டால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.. ஜெய்ஹிந்த்!’ என்று கேப்ஷனுடன் ஜாமியா இணையதளத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக செய்தியும் வெளியிட்டுள்ளனர்.

ஹேக்கர்கள் செய்தியில், ``ஜாமியா பல்கலைக்கழகத்தின் தைரியம் மிகுந்த மாணவர்களே, ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடுங்கள். போராட்டத்தைச் சாக விடாதீர்கள். ஒவ்வொருமுறை அவர்கள் உங்களைத் தாக்கும்போதும் வலிமையாக எழுந்து போராடுங்கள்!” என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. மேலும், ``குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுங்கள்; தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெறுங்கள், சட்டவிரோதமாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவியுங்கள்; கொடூரமாக தாக்குதல் நடத்திய காவல்துறையினரை விசாரணை செய்யுங்கள்” என்ற நான்கு கோரிக்கைகளையும் ஹேக்கர்கள் முன்வைத்துள்ளனர்.

ஹேக்கர்கள்
ஹேக்கர்கள்

போராட்டம் குறித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் கருத்து எதுவும் கூறாமல் மௌனமாக இருப்பதைக் கண்டித்தும் ஹேக்கர்கள் பதிவிட்டிருந்தனர். சமீபத்தில் டெல்லி தீஸ் ஹிசாரி நீதிமன்றத்தில் போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, ``டெல்லி காவல்துறையினருக்கு இரண்டு நிமிடங்கள் மௌனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். தீஸ் ஹிசாரி சம்பவத்துக்குப் பின் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை மறந்துவிட வேண்டாம்'' என்று ஹேக்கர்கள் பதிவிட்டிருந்தனர்.

ஜாமியா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை பல்கலைக்கழக நிர்வாகம் நிர்வகிக்கவில்லை. அது வேறு ஒரு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஹேக் செய்யப்பட்ட சம்பவத்தை அவர்கள் அறிந்ததும், ஜாமியா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சரி செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு