Published:Updated:

`6 மாதங்கள் முடிவு; அடுத்த சில மணி நேரத்தில் மற்றொன்று!'- காஷ்மீர் தலைவர்களைத் துரத்தும் சிறை

முப்தி - உமர் அப்துல்லா
முப்தி - உமர் அப்துல்லா

வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காஷ்மீர் அரசியல் தலைவர்கள் மீது தற்போது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் அவர்களின் சிறை வாழ்க்கை தொடரவுள்ளது.

இந்திய எல்லையான ஜம்மு - காஷ்மீர் கடந்த வருடம் ஜூலை மாத இறுதியில் பரபரப்பின் உச்சத்திலிருந்தது. அங்கு பல ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். எல்லையில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் ஜம்மு - காஷ்மீர் முழுவதும் இணையம், தகவல் தொடர்பு போன்ற அனைத்தும் துண்டிக்கப்பட்டன.

காஷ்மீர்
காஷ்மீர்

இதுபோன்ற தொடர் நடவடிக்கையினால், தங்களுக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம் அப்பகுதி மக்களை ஆட்டிப்படைத்தது. இதன் தொடர்ச்சியாக ஜம்மு - காஷ்மீர் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். சில அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள், தலைவர்கள் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு. அதில் `இதுநாள் வரை ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாகவும் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீர், இனி காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசமாகச் செயல்படும்’ எனக் கூறப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு காஷ்மீர் மட்டுமல்லாது இந்தியாவையும் கொந்தளிக்க வைத்தது. இதற்கு உலக நாடுகளும் தங்களின் கருத்தை தெரிவித்துவந்தனர்.

காஷ்மீர்
காஷ்மீர்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இரண்டு, மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டது. சமீபத்தில்தான் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இணையம், தகவல் தொடர்பு சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. என்னதான் அங்கு பழைய வாழ்க்கை திரும்பினாலும், அப்போது வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட எந்த அரசியல் தலைவர்களும் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

மயான அமைதியில் காஷ்மீர்; சிறையில் தலைவர்கள், கொதிக்கும் ஜம்மு... சிறப்புச் சட்டம் இல்லாத 6 மாதங்கள்!

காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு நேற்றுடன் 6 மாதங்கள் நிறைவடைகின்றன. முன்னதாக இவர்கள் கைது செய்யப்பட்ட சட்டத்தினால் 6 மாதங்கள் மட்டுமே ஒருவரை வீட்டுச் சிறையில் அடைக்கமுடியும். உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி ஆகியோரின் காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதை மெஹ்பூபா முப்தியின் மகள் உறுதி செய்துள்ளார்.

இந்தச் சட்டத்தின் கீழ் எந்த விசாரணையும் இன்றி ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் வைக்கலாம். அந்தக் காலகட்டத்தில் அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லவேண்டிய எந்த அவசியமும் இல்லை. உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உட்பட தேசிய மாநாட்டுக்கட்சியின் பொதுச்செயலாளர் அலி முகமது சாஹர் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் சர்தாஷ் மத்னி ஆகியோர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்துள்ளது, அவர்களும் தொடர்ந்து வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் ஃபரூக் அப்துல்லாவின் தந்தை. தன் தந்தை கொண்டுவந்த சட்டத்திலேயே தற்போது ஃபரூக் அப்துல்லாவும் பேரன் உமர் அப்துல்லாவும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மூன்று முறை முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் (உமர் அப்துல்லா) இந்தச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு