Published:Updated:

சட்டப்பிரிவு 370 ரத்து டு கைது நடவடிக்கை வரை - காஷ்மீர் விவகாரத்தில் நடந்தது என்ன? #Timeline

தினேஷ் ராமையா
மலையரசு

இரண்டு யூனியன் பிரதேசங்களாக தற்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

அமித் ஷா
அமித் ஷா
05 Aug 2019 9 AM

அமர்நாத் யாத்திரை ரத்து!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு பக்தர்கள் பயணிப்பர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக மாநிலத்தைவிட்டு வெளியேறுங்கள் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

காஷ்மீரை விட்டு வெளியேறும் பயணிகள்
காஷ்மீரை விட்டு வெளியேறும் பயணிகள்
AP

தீவிரவாதத் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாத்திரை ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அதேநேரம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டன. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி சுதந்தர தினத்தில் வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

05 Aug 2019 9 AM

காஷ்மீரில் கெடுபிடி!

மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆளுநர் சத்யபால் மாலிக்கை அம்மாநில முன்னாள் முதல்வர்களான மெஹ்பூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர் நேரில் சந்தித்துப் பேசினர். இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசியல் தலைவர்கள் வீட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஒமர் அப்துல்லா
ஒமர் அப்துல்லா
AP

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மெஹ்பூபா முஃப்தி, `இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் என்ன நடந்தாலும் அதை எதிர்த்து ஒன்றுசேர்ந்து அதை வென்றெடுப்போம் என மக்களுக்கு உறுதிகூறிக்கொள்ள விரும்புகிறேன்' என்று ட்வீட்டியுள்ளார். அதேபோல், ஒமர் அப்துல்லா, `காஷ்மீர் மக்களுக்கு, என்ன நடக்கப்போகிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால், கடவுளை உறுதியாக நம்புபவன் நான். அவர் மீதும் அவரது செயல்முறைகள் மீதும் எப்போதும் நாம் சந்தேகம் கொள்ளக் கூடாது. அமைதி காக்கவும்' என்று கூறியிருக்கிறார்.

05 Aug 2019 9 AM

அத்திவாசியப் பொருள்களுக்கு வரிசையில் நிற்கும் மக்கள்!

பதற்றம் தொடருவதால் மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், வீட்டுக்குத் தேவையான அத்திவாசியப் பொருள்களை வாங்கி இருப்பு வைத்துவருகின்றனர். இதனால், பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு நிலையங்களில் நீண்டவரிசையில் காத்திருக்கிறார்கள்.

05 Aug 2019 9 AM

வெளியேறும் பயணிகள்!

Jammu  Kashmir
Jammu Kashmir
AP

அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலிருந்து பயணிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். விமானம், ரயில், பேருந்து உள்ளிட்டவைகள் மூலம் மக்கள் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை விட்டு வெளியேறுகின்றனர். இதனால், ரயில்நிலையங்களில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.

05 Aug 2019 9 AM

அனைத்துக் கட்சிக் கூட்டம்!

அனைத்துக்  கட்சிக் கூட்டம்
அனைத்துக் கட்சிக் கூட்டம்
AP

காஷ்மீர் நிலவரம் தொடர்பாக விவாதிக்க அம்மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று ஸ்ரீநகரில் ஒன்று கூடினர். இதில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் மூத்த தலைவருமான மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரங்கள், தன்னாட்சி உள்ளிட்டவைகளைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது என்பது உள்ளிட்ட 3 அறிவிப்புகளைக் கூட்டாக வெளியிட்டனர்.

05 Aug 2019 9 AM

144 தடை உத்தரவு; இணைய சேவைகள் முடக்கம்

அதேபோல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாகவும் மறு உத்தரவு வரும்வரை இதேநிலைதான் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை மற்றும் லேண்ட்லைன் சேவைகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புப் படையினர் குவிப்பால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

05 Aug 2019 10 AM

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் இல்லம்
பிரதமர் இல்லம்
ANI

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக, பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி, ஆலோசனை நடத்தினார். அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் 12 மணியளவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

05 Aug 2019 10 AM

பிராந்திய நெருக்கடி! - இம்ரான்கான்

காஷ்மீர் நிலவரத்தால் பிராந்திய அளவில் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்துத் தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இருநாடுகள் இடையிலான பேச்சுவார்த்தையை மூன்றாவதாக ஒருவர் மத்தியஸ்தம் செய்வதே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

``காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்திய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்படும் இந்தசூழலில் பேச்சுவார்த்தையை ட்ரம்ப் கூறியபடி நடத்த, இதுவே சிறந்த தருணம். இந்த சூழல் தொடர்ந்தால், அது பிராந்திய நெருக்கடிக்கு வழ் வகுக்கும்'' என்று இம்ரான் கான் கூறியிருக்கிறார்.

05 Aug 2019 10 AM

தலைமை நீதிபதி அமர்வு `திடீர்' விடுப்பு!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

காஷ்மீர் தொடர்பாக பதற்ற சூழல் நிலவிவரும் நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று திடீர் விடுப்பு எடுத்திருக்கிறது.

05 Aug 2019 10 AM

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் அமித் ஷா!

அமித் ஷா
அமித் ஷா

காஷ்மீர் விவகாரம் தேசிய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்தநேரத்தில், பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக மாநிலங்களவையில் காலை 11 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், மக்களவையில் பகல் 12 மணிக்கு அவர் பேச இருக்கிறார். அப்போது முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

05 Aug 2019 11 AM

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து!

அமித் ஷா
அமித் ஷா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

05 Aug 2019 11 AM

சட்டப்பிரிவுகள் 370, 35ஏ சொல்வதென்ன?

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்தச் சட்டத்தினால், காஷ்மீரிகள்தான் இந்தியாவின் செல்லக் குழந்தைகள் ஆகிறார்கள். காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, மன்னர் ஹரிசிங், தன் மக்களின் நலன் கருதி பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். இந்து மன்னராக இருந்தாலும் தன் மக்கள்மீது ஹரிசிங் அளவற்ற பிரியம் கொண்டிருந்தார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தார். பாகிஸ்தான், காஷ்மீரைக் கைப்பற்ற துடித்துக்கொண்டிருந்த காரணத்தினால், இந்தியத் தலைவர்கள் காஷ்மீருக்காக சிறப்பு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டார்கள்.

சட்டப்பிரிவு 370 ரத்து டு கைது நடவடிக்கை வரை - காஷ்மீர் விவகாரத்தில் நடந்தது என்ன? #Timeline

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை காஷ்மீர் மாநில மக்களுக்கு அளித்து வந்த சிறப்பு உரிமைகள்:

> இந்தியாவில், எங்கு வேண்டுமானாலும் காஷ்மீர் மக்கள் நிலம் வாங்கலாம். ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் ஒரு பிடி மண்கூட வாங்கிவிட முடியாது.

> இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காஷ்மீருக்குப் பொருந்தாது. பாதுகாப்புத் துறை, தகவல் தொடர்புத் துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறை தவிர, காஷ்மீர் தொடர்பான எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும், காஷ்மீர் சட்டமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பொருந்தாது.

> காஷ்மீர் பெண்கள், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்தால், காஷ்மீரில் நிலம் வாங்கும் உரிமையை இழக்கிறார்கள். அதே வேளை, ஆண்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை மணம் புரிந்தால், அங்கே நிலம் வாங்க உரிமை உண்டு.

> அரசியலமைப்புச் சட்டம் 35 ஏ, காஷ்மீரின் நிரந்தர குடியேறிகளுக்கு, அசையா சொத்துகள் வாங்குவது மற்றும் அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கிறது.

05 Aug 2019 11 AM

இரண்டாகப் பிரியும் ஜம்மு - காஷ்மீர்!

மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, `தற்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி, அதிக மக்கள் தொகையுடன் வேறுவிதமான நிலப்பரப்பைக் கொண்டது. லடாக் பகுதியை தனியாக யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக செயல்படும்.

தற்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது எல்லைதாண்டிய பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு அது தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்படுகிறது. அது சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகச் செயல்படும்'' என்று தெரிவித்தார்.

05 Aug 2019 12 PM

குடியரசுத்தலைவர் ஒப்புதல்!

குடியரசுத்தலைவர் ஒப்புதல்
குடியரசுத்தலைவர் ஒப்புதல்

ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ய முன்மொழிந்தார் அமித் ஷா. அதை ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டு, தற்போது இருந்து இது நடைமுறைக்கு வரும் என உத்தரவிட்டு இருக்கிறார்.

05 Aug 2019 12 PM

இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள்!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, ``இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று. இரண்டு நாடுகள் வேண்டாம் என இந்தியாவுடன் இணைய கடந்த 1947ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் எடுத்த முடிவு தவறாகியிருக்கிறது. சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு எடுத்திருக்கும் ஒருதலைபட்சமான சட்டவிரோதமானது. இது, ஜம்மு காஷ்மீரில் இந்தியா, ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்ற பொருளை வழங்கும்.

மெஹ்பூபா முஃப்தி
மெஹ்பூபா முஃப்தி

மேலும், இது இந்தப் பிராந்தியத்தில் பேரழிவுகளை ஏற்படுத்தும் பின்விளைவுகளை உண்டாக்கும். மத்திய அரசின் எண்ணங்கள் இதன்மூலம் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களை தீவிரவாதிகளாக மாற்ற எண்ணுகிறது. காஷ்மீர் விவகாரத்தில், தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றாமல், இந்தியா தோல்வியடைந்திருக்கிறது'' என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

05 Aug 2019 12 PM

நாட்டு மக்களிடம் உரையாற்றும் மோடி!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் பலவும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருக்கின்றன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் முடிவு ஆகியவை குறித்து பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7ம் தேதி) நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

05 Aug 2019 12 PM

பிடிபி எம்.பிக்கள் வெளியேற்றம்!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் பிடிபி கட்சி எம்.பிக்கள் மிர் ஃபயாஸ், நஸீர் அஹமது ஆகியோர் சட்டப்பிரிவு நகல்களைக் கிழிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களை மாநிலங்களவையில் இருந்து வெளியேற்ற அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.

05 Aug 2019 12 PM

அ.தி.மு.க ஆதரவு!

அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன்
அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு அ.தி.மு.க ஆதரவளித்திருக்கிறது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன், ``நாட்டின் இறையாண்மைக்கே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னுரிமை கொடுத்தார். அந்த அடிப்படையில் அரசின் முடிவுக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கிறது. சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது. ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவால் எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை'' என்றார்.

05 Aug 2019 1 PM

பெரும் வரலாற்றுப் பிழை திருத்தப்பட்டிருக்கிறது!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ``சிறப்பு அந்தஸ்து பிரிவினைக்கு வழிவகுத்தது. இந்தியா ஒரு வலிமையான தேசம். இதுபோன்ற அபத்தங்கள் இனியும் தொடராது. சிறப்பு அந்தஸ்து ஒரு தற்காலிக முடிவு. அதையே நிரந்தர முடிவாக எண்ணக்கூடாது. பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றிகள். பெரும் வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்கிறார்கள்.

05 Aug 2019 1 PM

காஷ்மீரில் துணை ராணுவப் படையினர் குவிப்பு!

உத்தரப்பிரதேசம், ஒடிசா, அஸ்ஸாம் மற்றும் நாட்டின் பிறபகுதிகளில் இருந்து காஷ்மீருக்குக் கூடுதலாக 8,000-த்துக்கும் மேற்பட்ட துணைராணுவப் படையினர் விமானம் மூலம் அனுப்பப்பட்டிருக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டிருக்கிறது.

05 Aug 2019 1 PM

அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டும்!

காஷ்மீர் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற குரல் பா.ஜ.க. ஆட்சியில் நாடு முழுவதும் வலிமையாக எதிரொலிக்கின்ற இந்த நேரத்தில், இருக்கின்ற மாநிலத்தையும் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிப்பது இந்திய அரசியல் சட்டம் வகுத்துக் கொடுத்த ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிச் செல்ல பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு துடிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஆகவே, இந்திய ஜனநாயகத்தைக் கைவிடும் எவ்வித நடவடிக்கைகளையும் இப்படி அவசர கதியில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு எடுப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும் வரை குடியரசுத் தலைவர், இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.

05 Aug 2019 2 PM

நாடாளுமன்றத்தில் கொதித்த வைகோ!

வைகோ
வைகோ
Rajya Sabha TV

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு ம.தி.மு.க எம்.பி வைகோ மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாவத்தில் பேசிய வைகோ, `இதன்மூலம் மத்திய அரசு ஜனநாயகத்தைப் படுகொலை செய்திருக்கிறது. அரசின் இந்த முடிவுக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துகொள்கிறேன். உடனடியாக இதை அரசு திரும்பப்பெற வேண்டும்'' என்றார்

05 Aug 2019 4 PM

தகித்த ப.சிதம்பரம்!

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். ``சிறப்பு அந்தஸ்தை நீக்கியது பயனற்றது. காஷ்மீர் விவகாரத்தில் வெற்றிபெற்றதாக மத்திய அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இதில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என வரலாறு உங்களுக்கு நிரூபிக்கும். இன்று காஷ்மீருக்கு நடந்தது நாளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் நடக்கலாம். ஜம்மு-காஷ்மீரை போல நாளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களும் பிரிக்கப்படலாம். மாநில உரிமைகள் பறிப்பின் உச்சக்கட்டமாக காஷ்மீர் விவகாரத்தில் அரசு முடிவு எடுத்துள்ளது. மாநில அரசுகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் போல் மத்திய அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது" எனப் பேசினார்.

05 Aug 2019 6 PM

அமித் ஷா மீண்டும் உரை!

இதற்கிடையே, பிரதமர் மோடி மாநிலங்களவை வந்துள்ளார். இதனால் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. மோடி வந்துள்ளதை அடுத்து காஷ்மீர் மசோதாவை மாநிலங்களவை தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் பேசி வருகிறார். அதில், ``மத ரீதியான, வாக்கு வங்கி ரீதியா அரசியலை நாங்கள் நம்பவில்லை. அது என்ன வாக்கு வங்கி அரசியல்? காஷ்மீரில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ்கிறார்களா? முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்தர்கள் என அனைவரும் தான் அங்கு வாழ்கின்றனர். 370 நல்லது என்றால் அது அனைவருக்கும் நல்லது.

அது மோசமாக இருந்தால் அது அனைவருக்கும் கெட்டது. சட்டப்பிரிவுகள் 35A, 370 ஆகியவைகளால் என்ன பாதிப்பு என்பதை காஷ்மீர் மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன். சட்டப்பிரிவுகள் 35A, 370 மூலம் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்படவில்லை. இந்த சட்டப்பிரிவால் சில அரசியல்வாதிகளுக்கும், தனிநபர்களுக்கு மட்டுமே பயன் அடைந்தனரே தவிர அங்கு வளர்ச்சிஇல்லை. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் காஷ்மீர் பயனடையவில்லை.

சட்டப்பிரிவு 370 இல்லாமல் தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் தங்கள் மொழிகளை, கலாச்சாரத்தை பாதுகாக்கின்றன. மோடி ஆட்சிக்கு வந்ததால் மட்டுமே இந்த சட்டப்பிரிவை நீக்க முடிந்துள்ளது" எனப் பேசியவர் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அதில், ``காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தாற்காலிமானது தான். இயல்பு நிலை திரும்பிய பிறகு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்படும்" எனக் கூறினார்.

05 Aug 2019 6 PM

வாக்கெடுப்பு தொடங்கியது!

அமித் ஷா பேச்சுக்கு பின் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. மசோதாவில் உள்ள ஒவ்வொரு தீர்மானம் மீதும் குரல் வாக்கெடுப்பு நடந்து வருகிறது.

05 Aug 2019 6 PM

மசோதா நிறைவேறியது!

நீண்ட விவாதத்துக்கு பின் மாநிலங்களவையில் காஷ்மீர் பிரிப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிர்த்து 61 வாக்குகளும் பதிவாகின. வாக்கெடுப்புக்கு பின் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா, மறுசீரமைப்பு மசோதா ஆகியவையும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறியதை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

05 Aug 2019 8 PM

கமல் கண்டனம்!

சட்டப்பிரிவு 370 ரத்து டு கைது நடவடிக்கை வரை - காஷ்மீர் விவகாரத்தில் நடந்தது என்ன? #Timeline

மத்திய அரசின் போக்கை கண்டித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ``370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல். இதுபோன்ற முக்கியமான முடிவுகள் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல், தங்களுக்கு அவையில் இருக்கின்ற பெரும்பான்மை ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இம்முடிவினை எடுத்திருக்கின்றது." எனக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

05 Aug 2019 8 PM

முன்னாள் முதல்வர்கள் கைது!

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விருந்தினர் மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.