Published:Updated:

ஃப்ளாஷ்பேக்: காஷ்மீர் பிரச்னையில் அப்போது நேரு செய்ததும் நடந்ததும் என்ன?

நமது நிருபர்

விகடன் ஃப்ளாஷ்பேக் பக்கத்தில் இருந்து ஒரு சிறு பகுதி இங்கே...

நேரு
நேரு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவுகள் 35A, 370 ஆகியவை ரத்து செய்தும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இதனால் தேசிய அளவில் ஒரு பதற்றம் தொற்றியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு கருத்துகள் இருந்து வருகின்றன. காஷ்மீர் இந்தியாவோடு இணைய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவர் இந்தியாவின் அப்போதைய பிரதமர் நேரு. இந்த நேரத்தில் காஷ்மீர் பிரச்னையில் அப்போது நேரு செய்ததும் நடந்ததும் என்ன? என்பது குறித்த ஃப்ளாஷ்பேக் ஒன்றை தெரிந்துகொள்வோம். காஷ்மீர் விவகாரத்தில் நேரு செய்த தவறுதான் இன்றளவும் காஷ்மீர் மக்களை மட்டுமன்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் நிம்மதியையும் குலைக்கிறது என்று பெரும்பாலானோர் சொல்கின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை?

காஷ்மீர்
காஷ்மீர்

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது காஷ்மீரை ஆண்டு வந்த ராஜா ஹரி சிங், காஷ்மீர் ஒரு தனிநாடாக இருக்கவே விரும்பினார். இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் சேருவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால், பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மீது பெரும் கண் இருந்தது. தன்னுடைய எல்லைப் பகுதியில் வசித்து வந்த பழங்குடியினரிடம் ஆயுதங்கள் கொடுத்து அவர்களை காஷ்மீருக்குள் ஊடுருவும்படி, பாகிஸ்தான் அனுப்பியது. ஆயுதங்களுடன் ஊடுருவிய பழங்குடியினர் காஷ்மீரின் கிராமப் பகுதிகளை எல்லாம் தங்கள் வசப்படுத்திக் கொண்டு வந்தனர். ஶ்ரீநகரையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். பாகிஸ்தான் வசம் காஷ்மீர் சென்றுவிடக் கூடாது என்று பயந்துபோன ராஜா ஹரி சிங், இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருப்பதற்கு சம்மதித்தார்.

ஐ.நா-வை அணுகிய நேரு:

இந்தியாவுடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். எனவே, காஷ்மீரை ஆக்கிரமித்த பாகிஸ்தான் பழங்குடியினரை விரட்ட இந்திய ராணுவத்தை நேரு அனுப்பினார். அந்தச் சமயத்தில், ஐ.நா-வை நாடிய நேரு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தீர்வுகாணச் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். உடனே சண்டை நிறுத்தம் செய்யும்படி, ஐ.நா சபை உத்தரவிட்டது. சண்டை நிறுத்தத்துக்கு முன்பு அவரவர் ஆக்கிரமித்த பகுதி அவரவர்களுக்கே சொந்தம் என்று ஐ.நா கூறியது. காஷ்மீரின் வசம் இருந்த பல கிராமங்களை பழங்குடியினர் ஆக்கிரமித்து இருந்தனர்.

ராஜா ஹரி சிங்
ராஜா ஹரி சிங்

அவர்களுக்கே அந்தப் பகுதிகள் சொந்தமாகின. ஐ.நா தலையீட்டால்தான் பழங்குடியினரை இந்திய ராணுவம் முற்றிலும் விரட்ட முடியாமல் போய்விட்டது என்பதும், இதனால் லாபம் அடைந்தது பாகிஸ்தான் தரப்புதான் என்பதும் நேருவை எதிர்ப்பவர்களின் கருத்தாக இருக்கிறது. பாகிஸ்தான் பழங்குடியினர் வசித்துவரும் பகுதிகள் இன்றும்கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றே அழைக்கப்படுகிறது.

இது குறித்து வரலாற்று ஆய்வாளர் அ.மார்க்ஸிடம் பேசினோம். "காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர். இந்தியாவுடன் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் காஷ்மீர் சேர்ந்தது. எதிர்காலத்தில் காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவில் 'இந்தியாவுடன் சேருவதா, தனியாகப் போவதா என்று முடிவு எடுக்கப்படும்' எனத் தீர்மானிக்கப்பட்டது. நேருவும் இதற்கு அப்போது சம்மதம் தெரிவித்தார். காஷ்மீர் பிரச்னையில் நேரு மேற்கொண்டது நேர்மையான செயல். நேரு எங்கு துரோகம் செய்தார் என்றால், அவர் கொடுத்த வாக்குறுதியை அவரே காலில் போட்டு மிதித்தார்.

காஷ்மீர்
காஷ்மீர்

அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது, 1953-ல் காஷ்மீர் அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஷேக் அப்துல்லாவை சிறையில் அடைத்து காஷ்மீர் பிரச்னையை நேரு மேலும் சிக்கலாக்கினார். முதலில் காஷ்மீர் பிரச்னையை ஐ.நா-வுக்குக் கொண்டுபோனது நேருவின் நியாயமான நடவடிக்கை. அவரின் உயர் பண்புகளுக்கு எடுத்துக்காட்டான விஷயம். ஆனால், காஷ்மீர் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, நிபந்தனைகளின்படி நடந்து கொள்ளாததுதான் கண்டிக்கத்தக்கது. 'காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த முடியாது' என்று நேரு சொன்னார். அதுமட்டுமன்றி காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லாவை (அப்போது காஷ்மீர் மாநிலமாக ஆகவில்லை) ஜெயிலில் போட்டது எல்லாம்தான் பிரச்னைக்குக் காரணம். இதுதான் காஷ்மீர் பிரச்னையில் நேரு செய்த துரோகம். இந்த ஒன்றைத் தவிர வேறு எந்தக் களங்கமும் இல்லாத அற்புதமான மனிதர் நேரு" என்றார்.