Published:Updated:

`42 ஆண்டுக்காலத் திட்டம்; ரூ.2,176 கோடி செலவு!' - 24 மணி நேரத்தில் உடைந்த கோனார் கால்வாய்

சத்யா கோபாலன்

ஜார்கண்ட்டில் புதிதாகத் திறக்கப்பட்ட கால்வாய் 24 மணி நேரத்தில் உடைந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு எலிகள் துளையிட்டதே காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

konar Canal
konar Canal ( Twitter/ @dasraghubar )

ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ரகுபர் தாஸ் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். 1978-ம் ஆண்டுக்கு முன்னர் அதாவது பீகார் மாநிலத்திலிருந்து ஜார்கண்ட் பிரிக்கப்படாமல் இருந்த போது, அப்போதைய ஆளுநர் ஜகன்நாத் கவுசால், கோனார் கால்வாய் நீர்ப்பாசன திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

konar Canal
konar Canal
Twitter/ @dasraghubar

ஜார்கண்ட்டின் கிரிடிஹ் (Giridih), ஹஸாரிபாக் (Hazaribagh), பொகாரோ (Bokaro) ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 83 கிராமங்களுக்கு நீர் வழங்குவதே இந்தக் கால்வாய்த் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. அடிக்கல் நாட்டியதற்குப் பிறகு பல்வேறு பிரச்னைகள், தொடர் அரசு மாற்றம் போன்ற காரணங்களால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமலேயே இருந்துள்ளது.

இதையடுத்து 2003-ம் ஆண்டு ஜார்க்கண்ட்டின் முதல்வராக இருந்த அர்ஜுன் முண்டோ மீண்டும் இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்து மீண்டும் அடிக்கல் நாட்டினார். இதன் பின்னரும் அணைகட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்துள்ளன. 42 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ஆட்சி செய்து வரும் முதல்வர் ஒருவழியாக இந்தத் திட்டத்தின் பணிகளைச் செய்து முடித்துவிட்டார்.

konar Canal inauguration
konar Canal inauguration
Twitter/ @dasraghubar

முதன்முதலாக 12 கோடி ரூபாய்க்குத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது 2,176 கோடி ரூபாய் செலவோடு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை கிரிடிஷ் மாவட்டத்தில் இந்த கோனார் கால்வாயை மாநில மக்களுக்கு அர்ப்பணித்தார் முதல்வர் ரகுபர் தாஸ். கால்வாய் திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அணை உடைந்து பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

50 மீட்டர் உயரம் கொண்ட கால்வாயில் விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் அழுத்தம் தாங்காமல் அணை உடைந்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றிப் பேசிய அம்மாநிலத்தின் நீர் மேலாண்மை தலைமை இயக்குநர் அர்ஜுன் குமார், ``இந்தக் கால்வாய் பாசனத் திட்டம் தலைமை பொறியியல் அதிகாரியின் மேற்பார்வையில்தான் கட்டப்பட்டது. கால்வாயின் சுற்றுச் சுவரில் எலிகள் ஓட்டை போட்டதால் அணை உடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் கால்வாய் உடைப்பு குறித்து மதிப்பிட்டு வருகின்றனர். இந்த உடைப்பு விரைவில் சரிசெய்யப்படும்” என டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்தார்.

konar Canal collapse
konar Canal collapse

இதற்கு முன்னதாக கால்வாயை மக்களுக்கு அர்ப்பணிக்கும் போது, இந்தத் திட்டத்துக்காகப் பணியாற்றிய பொறியாளர்களைப் பற்றிப் புகழ்ந்து பேசியிருந்தார். மேலும் இதனால் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர்களின் வாழ்வாதாரம் உயரும் எனவும் கூறியிருந்தார். ஆனால் ஒரே நாளில் அணை உடைந்ததால் அங்குள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.