Published:Updated:

`11 பேர்தான் கொன்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை!' - அன்சாரி கொலையில் போலீஸ் புதுத் தகவல்

சத்யா கோபாலன்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓர் இளைஞரை 11 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொன்ற விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 Ansari
Ansari

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் தப்ரெஸ் அன்சாரி. இவர் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி தன் நண்பர்களுடன் ஜாம்ஷெட்பூரில் இருந்து கர்சவான் பகுதிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் வந்துகொண்டிருக்கும்போது இவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஒரு கும்பல் இவரைத் தாக்கும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலானது.

 Ansari
Ansari

அன்சாரி, ஒருவரின் இரு சக்கர வாகனத்தைத் திருடியதாகக் கூறி அவரை மரத்தில் கட்டிவைத்து 11 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது. 7 மணி நேரம் வரை அந்தக் கும்பல் அன்சாரியைத் தாக்கியுள்ளது. இதற்கிடையில், அவரை `ஜெய் ஸ்ரீ ராம்’ எனச் சொல்லும்படியும் அந்தக் கும்பல் வற்புறுத்தியுள்ளது. இறுதியாக அன்சாரி மயங்கிய பிறகே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Vikatan

பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்சாரி சிகிச்சைப் பலனின்றி ஜூன் 22-ம் தேதி உயிரிழந்தார். தனி ஒருவரை 11 பேர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், `அன்சாரியைத் தாக்கிய அந்தக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்' என அவரின் உறவினர்களும் நண்பர்களும் வலியுறுத்தி வந்தனர்.

 Ansari
Ansari

இந்நிலையில், அன்சாரி இறப்பில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அன்சாரிக்கு நடந்த இரண்டு உடற்கூறாய்விலும் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டுள்ளது. இதுபற்றிப் பேசியுள்ள மூத்த காவல்துறை அதிகாரி கார்த்திக், ``அன்சாரி மாரடைப்பால் உயிரிழந்தார் என அறிந்ததும் அதை உறுதிப்படுத்திக்கொள்ள மூத்த ஆய்வாளர்களிடம் இரண்டாவது கருத்தைக் கேட்டோம். அவர்களும், `மன உளைச்சலால் ஏற்பட்ட மாரடைப்பால்தான் அன்சாரி இறந்தார்' என்பதை உறுதி செய்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட 11 பேர்தான் அன்சாரியைக் கொன்றார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மருத்துவ அறிக்கையும் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்றே தெரிவித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைக் குற்றம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால், அவர்கள் செய்ததும் தண்டனைக்குரிய குற்றம்தான். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

”அன்சாரி மாரடைப்பால் உயிரிழந்தார் என்றால் அவரின் தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டது எப்படி.. போலீஸார் குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைக்கிறார்கள்” என அன்சாரி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதில் அளித்துள்ள போலீஸ் அதிகாரி கார்த்திக், ``இந்த வழக்கைப் பற்றி முழுமையான விஷயங்கள் எனக்குத் தெரியவில்லை. நாங்கள் மருத்துவ அறிக்கையைக் கொண்டே நடவடிக்கையை எடுத்து வருகிறோம். அதில் எங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மீண்டும் ஒருமுறை கருத்து கேட்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

இதனால் அன்சாரி இறப்பில் சர்ச்சை நிலவி வருகிறது. ’குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது கொலை வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என அவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.