Published:Updated:

`பாதல்காடி போராட்டம்; தேசத்துரோக வழக்கு ரத்து!' - முதல்நாளிலேயே அதிரடி காட்டிய ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவியேற்றுள்ள ஹேமந்த் சோரன், அம்மாநில பழங்குடியின மக்கள் மீது தொடரப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஹேமந்த் சோரன்
ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. ஜே.எம்.எம் கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின் உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

பதவியேற்பு விழா
பதவியேற்பு விழா

பிரமாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரவுபதி முர்மு, ஹேமந்த் சோரனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11 -வது முதல்வராக ஹேமந்த் பதவியேற்றுக்கொண்டார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் நடவடிக்கையாகத் தனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினருக்கு ஆதரவாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Vikatan

`இந்திய விடுதலைக் காலமான 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடமும் உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் பிர்சா முண்டா. ஜார்க்கண்ட், பீகார் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். இவருடைய தலைமையின்கீழ் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட பழங்குடிகள் பாதல்காடி என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் முண்டா இனத்தைச் சேர்ந்தவர்கள்.

பாதல்காடி மக்கள்
பாதல்காடி மக்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதல்காடி மக்கள் வாழும் பலநூறு கிராமங்கள் இன்னும் உள்ளன. இந்தப் பழங்குடி மக்களின் நிலத்தைப் பாதுகாக்க சோட்டா நாக்பூர் மற்றும் சந்தால் பர்கானாக்கள் போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தச் சட்டத்தையும் பழங்குடி மக்களையும் முன்வைத்துத்தான் அனைத்துப் பிரச்னைகளும் நடக்கின்றன.

இந்த நிலையில், முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆட்சி செய்துவந்த பா.ஜ.க அரசு 2018-ம் ஆண்டு பழங்குடி நிலம் பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளதாக அறிவித்தது. இதை எதிர்த்து அனைத்து பழங்குடியின மக்களும் அப்போதைய எதிர்க்கட்சியான ஜே.எம்.எம் கட்சி நிர்வாகிகளும் மாபெரும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பாதல்காடி பிரச்னை மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.

ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில், ஜார்க்கண்டில் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஹேமந்த் சோரன், பழங்குடி மக்கள் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தி அனைத்து வழக்குகளையும் ரத்து செய்துள்ளார். மேலும், அம்மாநிலத்தில் காலியாக உள்ள அரசுப் பணிகளை நிரப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.