Published:Updated:

`காஷ்மீரை விட்டு விரைவில் வெளியேறுங்கள்!' - அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு அரசு அறிவுறுத்தல்

கலிலுல்லா.ச

அமர்நாத் யாத்திரை முடிந்து பக்தர்கள் காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரா
அமர்நாத் யாத்திரா

காஷ்மீருக்கு அமர்நாத் யாத்திரைக்காக வந்துள்ள பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் எதிரொலியாக, `அமர்நாத் யாத்திரை பக்தர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும்’ என்று ஜம்மு - காஷ்மீர் உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ``உளவுத்துறை தகவலின்படி தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவிப்பு
ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவிப்பு

குறிப்பாக, அமர்நாத் யாத்திரைக்கு வந்துள்ள பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிலவும் சூழலைக் கருத்தில்கொண்டு, அமர்நாத் யாத்திரைக்கு வந்திருக்கும் பக்தர்கள் முடிந்த அளவு விரைவில், காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்துகிறோம்'' என்று ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது, சுதந்தர தினத்தையொட்டியும், அதை கவனத்தில் கொண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காஷ்மீர் ராணுவ லெஃப்டினன் ஜெனரல் தில்லன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அமர்நாத்
அமர்நாத்

அப்போது பேசியவர், ``அமர்நாத் பக்தர்கள் செல்லும் வழியில் பாதுகாப்பு படை வீரர்கள் அமெரிக்கத் தயாரிப்பான M-24 ரக ஸ்நைப்பர் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களைக் கண்டறிந்துள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அமர்நாத் பக்தர்கள் செல்லும் வழிகளில் வெடிகுண்டுகளை வைத்து தாக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதிகளில் வெடிகுண்டுகள் இருக்கின்றனவா என்பது குறித்தும் தேடி வருகிறோம். நிலைமை கட்டுக்குள்தான் இருந்துவருகிறது. பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் பயங்கரவாதிகள் வழக்கம்போல காஷ்மீரில் ஊடுருவ முயன்று வருகின்றனர். அவர்களின் திட்டங்களை ராணுவம் முறியடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.