Published:Updated:

` எங்கள் துணைவேந்தரைக் காணவில்லை’ - காவல்நிலையத்தில் புகார் அளித்த ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள்

`ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தரைக் காணவில்லை' என டெல்லி வசந்த்குஞ்ச் காவல்நிலையத்தில் மாணவர்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள்
ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள்

டெல்லியில் இயங்கிவரும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் முதன்மையான கல்விநிலையங்களுள் ஒன்று. சுமார் 8,000 மாணவர்கள் பயிலும் இப்பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படிப்பவர்களே. 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தும் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் மாணவர்கள் இங்குவந்து படிக்கின்றனர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கனவுப் பல்கலைக்கழகமான இதன் பொன்விழா ஆண்டு தற்போது (2019) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இக்கல்வியாண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக வளாகத்தினுள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதிக்கான விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர நிர்வாகம் முடிவெடுத்தது. முன்வரைவு ஒன்றையும் வெளியிட்டு, மாணவர்களிடம் கருத்துகளையும் கேட்டிருந்தது. வெளியான முன்வரைவு மாணவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புக்குள்ளானது.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

அவ்வரைவில் குறிப்பிடப்பட்டிருந்த கட்டண மாற்றம் வருமாறு:-

* உணவுக் கட்டணம் விடுதியைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். அதில் மாற்றமில்லை.

* விடுதிக்கட்டணம் ஒரு பருவத்துக்கு 1,100 ரூபாய். அதில் மாற்றமில்லை.

* பாத்திரங்கள் 250 ரூபாய், செய்தித்தாள் 50 ரூபாய் ஆண்டுக்கு. அதில் மாற்றமில்லை.

* தனிநபர் அறைவாடகை ஒரு மாதத்துக்கு 20 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும், இருநபர் அறையில் வசிப்பவருக்கான ஒரு மாத வாடகை 10 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும் உயர்த்தப்படவுள்ளது.

* திரும்பப்பெறும் வகையிலான ஒருமுறைக் கட்டணம் 5,500 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது.

* மேலும், நிர்வாகம், உணவாளர், உதவியாளர் ஆகியவற்றுக்கு இதுவரை எவ்விதக் கட்டணமும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படவில்லை. ஆனால், இந்தவரைவு மாதம் 1,700 ரூபாய் ஒவ்வொரு மாணவரிடமிருந்து வசூலிக்க வகை செய்கிறது.

`எமர்ஜென்சியை விட மோசம்'- காற்று மாசு விவகாரத்தில் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

திங்கள்கிழமையன்று, பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் காவல் சரகத்திற்குட்பட்ட வசந்த் குஞ்ச் காவல்நிலையத்துக்கு மாணவர்கள் பேரணியாகச் சென்றுள்ளனர். காவல்நிலையத்துக்குச் சென்ற அவர்கள் ``துணைவேந்தரைக் காணவில்லை” என்று புகாரளித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் அளித்த புகார்
மாணவர்கள் அளித்த புகார்

இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்துக்குப் பதிலளிக்கும் வகையில் நவம்பர் 6-ம் தேதி பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதித் தலைவர் (president), பாதுகாவலர்களுடனான (warden) கூட்டம் நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என துணைவேந்தர் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனங்கள் தனியார்மயச் சூழலுக்கு ஆட்படுவதைத் தடுக்கவேண்டியுள்ளது. நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு நிர்வாகம் தேர்ந்தெடுக்கும் வளர்ச்சிப் பாதையென்பது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கவேண்டுமென்பதையே இம்மாணவர் போராட்டம் எடுத்துரைக்கிறது என்கிறார்கள்.