Published:Updated:

தண்ணீர் என நினைத்து சானிடைஸரைக் குடித்த மும்பை மாநகராட்சி இணை கமிஷனர்!

சானிடைஸரை குடித்த ரமேஷ்பவார்
சானிடைஸரை குடித்த ரமேஷ்பவார்

மும்பை மாநகராட்சி இணை கமிஷனர் ரமேஷ் பவார் தண்ணீர் என நினைத்து சானிடைஸரைக் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை மாநகராட்சிக் கூட்டத்தில், மாநகராட்சி இணை கமிஷனர் ரமேஷ் பவார் மாநகராட்சி கல்வி பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக வந்திருந்தார். அவர் கல்வி பட்ஜெட் நகலை வாசித்துக்கொண்டிருந்தார். அவர் முன்பாக தண்ணீர் பாட்டில் மற்றும் சானிடைஸர் பாட்டில்கள் இருந்தன. ரமேஷ் பவார் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு டேபிளிலிருந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் எனக் குடித்துவிட்டார். குடித்த பிறகுதான் அது தண்ணீர் இல்லை; சானிடைஸர் என்றும் தெரியவந்தது. உடனே அதை ரமேஷ் பவார் விழுங்குவதற்கு முன்பாக வெளியில் துப்பிவிட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களின் முன்பாக வைக்கப்பட்டிருந்த சானிடைஸர் டேபிளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதில் ரமேஷ் பவாருக்கு எந்த வித உடல் கோளாறும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இணை கமிஷனர் சானிடைஸரைக் குடித்த சம்பவத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி தலைமையகம்
மாநகராட்சி தலைமையகம்

பின்னர் 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.39,038 கோடி அளவுக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சாலைப் பணிகளுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டைவிட 17 சதவிகிதம் கூடுதல் தொகைக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக சொத்துவரி அதிக அளவில் நடப்பு ஆண்டில் வசூலாகவில்லை. ஆனாலும், கொரோனா காலத்தில் சாலைப் பணிகளுக்காக 1,412 கோடி ருபாய் செலவிடப்பட்டிருக்கிறது.

நாட்டிலுள்ள மாநகராட்சிகளில் பணக்கார மாநகராட்சியாகத் திகழும் மும்பை மாநகராட்சி பட்ஜெட், கேரளா பட்ஜெட் தொகையைவிட அதிகம். ஜி.எஸ்.டி., சொத்துவரி, கட்டடங்கள் கட்ட அனுமதி கொடுப்பது போன்றவற்றின் மூலம் மாநகராட்சிக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இம்மாநகராட்சியைத் தொடர்ச்சியாக சிவசேனா ஆண்டுவருகிறது. கடந்த மாநகராட்சி, சிவசேனா தேர்தலில் சறுக்கப் பார்த்தது. ஆனால், பா.ஜ.க-வை விட சொற்ப அளவு அதிக ஓட்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை சிவசேனா தக்கவைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைஸர்.. சிகிச்சையில் 12 குழந்தைகள்! - கொடூரம் நடந்தது எப்படி?

போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைஸர்

மகாராஷ்டிராவில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு பதில் சானிடைஸர் கொடுக்கப்பட்டிருக்கிறது. யவத்மால் மாவட்டத்திலுள்ள காப்சிகோப்ரி என்ற இடத்திலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் இரண்டு நாள்களுக்கு முன்னர் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடைபெற்றது. இதில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைஸர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டது. அதன் பிறகே உண்மை தெரியவந்தது. சானிடைஸர் கொடுக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து விசாரசணை நடத்திய அதிகாரிகள் டாக்டர் உட்பட மூன்று பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு