Published:Updated:

காங் vs பாஜக: `ஒரு குடும்பத்தின் பசி, தேசத்துக்கே பெரும் செலவு!’ -ஜே.பி.நட்டா

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

``ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கப்பட்டது” - ஜே.பி.நட்டா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சக்கட்டத்தை அடைந்து வருகிறது எனலாம். வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. எனவே, கொரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படும் வகையில் மக்கள் அனைவரும் `பி.எம். கேர்ஸ்’க்கு நிவாரண நிதிகளை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் இதற்கு நிதிகளை அளித்து வந்தனர். இதனிடையே, `பிரதமர் தேசிய நிவாரண நிதி’ இருக்கும்போது, பி.எம். கேர்ஸ் என்று புதிதாக ஓர் அமைப்பு ஏன் என்று எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கேள்வி எழுப்பினர்.

மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக பி.எம். கேர்ஸ் தொடர்பான தகவல்களை ஒருவர் கேட்டதற்கு, `பி.எம். கேர்ஸ் அரசின் அமைப்பு அல்ல’ என்றுகூறி தகவல்களை அளிக்க மறுத்தது. இதனால் பி.எம். கேர்ஸ் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், பிரதமர் பொது நிவாரண நிதி தொடர்பாக ஜே.பி.நட்டா, காங்கிரஸ் கட்சியின் மீது தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.

சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கப்பட்டது. அப்போது, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக் குழுவின் தலைவர் யார்? சோனியா காந்தி. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக இருந்தவர் யார்? சோனியா காந்தி. முற்றிலுமாக இந்த விஷயம் கண்டிக்கத்தக்கது. நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகளைப் புறக்கணித்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ``இந்திய மக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சக மக்களுக்கு உதவி செய்வதற்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். மக்களின் பணத்தை குடும்பத்தின் அறக்கட்டளைக்கு அளிப்பது வெட்கக்கேடான மோசடி மட்டுமல்ல இந்திய மக்களுக்கு செய்யும் பெரிய துரோகம். செல்வத்தின் மீதான ஒரு குடும்பத்தின் பசி தேசத்துக்கே பெரும் செலவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் சுயலாபங்களுக்காக செய்த கொள்ளைக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

`பிஎம்கேர்ஸ் அரசு அமைப்பு அல்ல!’ - சட்ட மாணவரின் RTI கேள்விக்கு பதிலளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்
அடுத்த கட்டுரைக்கு