Published:Updated:

ஆர்யன் கான் : நீதிமன்றம் விதித்த 14 நிபந்தனைகள் என்னென்ன? ஜாமீனுக்கு உத்தரவாதம் கொடுத்த நடிகை!

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை ஒரு லட்சம் ரூபாய் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் விடுதலை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அவருக்கு நீதிமன்றம் விதித்த 14 நிபந்தனைகள்...

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு 26 நாள்களாகச் சிறையில் இருக்கிறார். அவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆர்யனுக்கு ஆர்தர் ரோடு சிறையில் ஜாமீன் கிடைத்த விவரம் வியாழக்கிழமை மாலை 6 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆர்யன் உட்பட மூன்று பேருக்கு ஜாமீன் வழங்கிய போதும், தீர்ப்பின் முழு விவரம் வெள்ளிக்கிழமைதான் வெளியிடப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி நிதின் தெரிவித்திருந்தார். இதனால், இன்று காலை முதல் நீதிபதியின் அறைக்கு வெளியில் தீர்ப்பு நகலுக்காக ஷாருக் கானின் வழக்கறிஞர் காத்துக்கிடந்தார்.

ஆர்யன் கான்: 25 நாள்களுக்குப் பிறகு ஜாமீன்! - நீதிமன்றத்தின் நிபந்தனைகள் என்னென்ன?
ஆர்யன் கான்
ஆர்யன் கான்

அவரிடம் நீதிமன்ற பதிவாளர் தீர்ப்பின் நகலை இன்று மதியம் வழங்கினார். ஐந்து பக்கங்கள் கொண்ட தீர்ப்பு நகலில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஆர்யன் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தால், அனுமதி வாங்கித்தான் செல்லவேண்டும். நீதிமன்ற விசாரணை குறித்து ஊடகங்களுக்கு எந்தவித அறிக்கையும் வெளியிடக்கூடாது. சக குற்றவாளிகளுடனும், போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையவர்களிடமும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும், சாட்சியைக் கலைக்கவோ அல்லது சாட்சியிடம் பேசி தனக்குச் சாதகமாக மாற்றுவது போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது என்றும், நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

அதே போல், பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்றும், வெள்ளிக்கிழமைகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், அழைக்கும் நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், மனுதாரர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மொத்தம் 14 நிபந்தனைகளை நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஆர்யன் உட்பட 3 பேரும் தலா ரூ.1 லட்சம் சொந்த ஜாமீனிலும், அந்த தொகைக்கு தனி நபர் அல்லது இருவரின் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் விடுவிக்கும்படி தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடிகை ஜூஹி சாவ்லா ஆர்யன் ஜாமீனில் வெளிவர ரூபாய் ஒரு லட்சத்துக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.

ஆர்யன் கான் உள்பட போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் 3 பேரும், இன்று மாலை 7.30 மணிக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன் மகன் ஆர்யன் கானை அழைத்துச் செல்வதற்காக, நடிகர் ஷாருக் கான் ஆர்தர் ரோடு சிறையில் காத்துக்கொண்டிருக்க, ஆர்யன் கானை வரவேற்க மன்னத் இல்லத்தில் ரசிகர்கள் ஏராளமானோர் கூடியிருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு