Published:Updated:

`நீதி என்பது எங்களுக்கு வெறும் கனவாகவே உள்ளது..!’ - உன்னாவ் பெண்ணின் தந்தை கதறல்

எரிக்கப்பட்ட பெண்
எரிக்கப்பட்ட பெண்

உன்னாவில் எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என அப்பெண்ணின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23-வயது இளம் பெண், கடந்த ஆண்டு இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த வழக்கு தொடர்பாகக் கடந்த 5-ம் தேதி தன் வீட்டிலிருந்து ரேபரேலி நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில், ஐந்து பேர் கொண்ட கும்பலால் உயிருடன் எரிக்கப்பட்டார். அந்த ஐந்து பேரில், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரும் இருந்துள்ளார்.

எரிக்கப்பட்ட இடம்
எரிக்கப்பட்ட இடம்

உன்னாவ் பெண்ணை எரித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 90% எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண், இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று முன் தினம் இரவு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பின், அவரது உடல் நேற்று மாலை அப்பெண்ணின் சொந்த கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண்ணின் தந்தை, “என் மகளின் உடலைப் புதைக்க முடிவெடுத்துள்ளோம். இறந்தவர்களின் உடலை எரிப்பதுதான் எங்கள் வழக்கம். ஆனால், என் அன்பு மகள் ஏற்கெனவே அதிகம் எரிந்துவிட்டாள். அதனால் எங்கள் குடும்பம் இந்த முடிவை எடுத்துள்ளது. என் மகளைக் கொன்றவர்களைத் தூக்கிலிடுங்கள், ஹைதராபாத் போலீஸை போல சுட்டுத்தள்ளுங்கள். இல்லையென்றால், என் வீட்டைத் தருகிறேன், அங்கு அவர்களைக் கொண்டுவந்து மொத்தமாகக் குண்டுவைத்துக் கொன்றுவிடுங்கள்” எனக் கூறியவாறே கதறி அழுதுள்ளார்.

உன்னாவ் பெண்
உன்னாவ் பெண்

தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு வயதாகிவிட்டது. என் மகளுக்கு நீதி கேட்டு நீதிமன்றத்துக்கும் காவல்நிலையத்துக்கும் என்னால் அலைய முடியாது. எங்களைப் போன்ற ஏழைகளுக்கு நீதி என்பது வெறும் கனவாக மட்டுமே உள்ளது. என் மகள் அனுபவித்த அதே வலியை அவளைக் கொன்றவர்களும் அனுபவிக்க வேண்டும். என் மகளை எரித்தது போலவே குற்றவாளிகளையும் எரித்துவிடுங்கள்.

3 மாத அலைக்கழிப்பு; சமாதானம் செய்த போலீஸார்! - இறப்பில் முடிந்த உன்னாவ் பெண்ணின் 1 வருடப் போராட்டம்

என் மகள் எரிக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, அவள்தான் எனக்கு இரவு உணவு வழங்கினார். நான் உண்டதும் என்னை விரைவில் தூங்குமாறு கூறினாள். அதுதான் அவள் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள். பின்பு உறங்கச் சென்ற அவள், இப்படி மொத்தமாக உறங்கிப்போவாள் என சற்றும் நினைக்கவில்லை. என் மகளின் வேதனையும் வலியும் தினமும் என் கனவை வேட்டையாடும். என் மகளுக்கு மட்டும் உரிய நீதி கிடைக்கவில்லை என்றால், குற்றவாளிகள் என் மொத்த குடும்பத்துக்கும் குண்டு வைத்துக் கொன்றுவிடுவார்கள். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கினால் மட்டுமே என் மகளின் ஆன்மா சாந்தியடையும்” என மிக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் வீட்டில் பிரியங்கா காந்தி
பெண்ணின் வீட்டில் பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் இறந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு வந்த பா.ஜ.க அமைச்சர் இருவரை, மக்கள் ஊருக்குள் நுழையவிடாமல் விரட்டினர். அப்போது, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவலர்கள், அவர்கள்மீது தடியடி நடத்திய விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இன்று காலை பேசிய உன்னாவ் பெண்ணின் சகோதரி, “உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என் சகோதரியைக் காண வருவார் என நினைத்தோம். ஆனால் இதுவரை வரவில்லை. அவர் நேரில் வரும் வரை என் சகோதரியின் உடலைத் தகனம் செய்யப்போவதில்லை. நான் அவரிடம் பேசவேண்டும். என் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், என் சகோதரியைக் கொன்றவர்களுக்கு உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு