Published:Updated:

`நீதி பழிவாங்கக் கூடாது’- உச்ச நீதிமன்ற நீதிபதி பாப்டே!

பாப்டே
பாப்டே

குற்றவாளிகளைப் பழிவாங்கும் போக்கை நீதி எப்போதும் கையில் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதி பாப்டே கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் நவம்பர் 27-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் ஆகிய நான்கு பேர் கைதாகினர்.

இதற்கிடையில் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றம் சென்ற இளம்பெண் கடத்தப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்கி தீ வைத்துக்கொளுத்தினர். 90 சதவிகித தீக்காயங்களுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

உன்னாவ் பகுதி
உன்னாவ் பகுதி

ஹைதராபாத் மருத்துவர் வழக்கில் கைதான நான்கு பேரும் நேற்று அதிகாலையில் என்கவுன்டர் செய்யப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. தெலங்கானா மக்கள் காவலர்களைக் கொண்டாடினர்.

இந்நிலையில் உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். என்னைக் காப்பாற்றுங்கள் நான் இறக்க விரும்பவில்லை. குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதை நான் பார்க்க வேண்டும் என மருத்துவமனையில் இருந்தபோது அந்தப் பெண் கூறியிருந்தார்.

`போராடினோம்... செல்வாக்கால் தடுத்துவிட்டனர்' - உன்னாவ் இளம்பெண் மரணத்தில் கதறும் தந்தை!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் பாப்டே இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மறைமுகமாகப் பேசினார். அப்போது ``நாட்டில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் பழைய விவாதத்துக்கு புதுத்தெம்பை ஊட்டியுள்ளது.

குற்றவியல் வழக்குகளை காலதாமதமின்றி தீர்க்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நீதி என்பது எப்போதும் விரைவாகக் கிடைத்துவிடும் பொருளல்ல. குற்றவாளிகளைப் பழிவாங்கும் போக்கை நீதி எப்போதும் கையில் எடுக்கக் கூடாது. பழிக்குப் பழி என்ற நிலைப்பாட்டுக்கு மாறினால் நீதி தனது தன்மையை இழந்துவிடும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு